தேசிய நதிகள் நீர் இணைப்பு, எனது முப்பது ஆண்டுகால வழக்கும், உழைப்பும்.
-------------------------------------
நீரின்றி அமையாது உலகு”;
"சிறுதுளி பெரு வெள்ளம்”;
“பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. ஆனால் செய்தித்தாளில் வடக்கில் வழிந்தோடும் வெள்ளம், வெள்ளப்பெருக்கால் அழிவு என முதல்ப் பக்கத்திலும், தென்தமிழத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி அதே நாளிதழின் அடுத்தப் பக்கத்தில் படிக்கும் போது மனம் வேதனை அடைகின்றது. தேசிய நதிநீர் இணைப்பு என்ற ஒற்றை திட்டத்தின் மூலம் இருபெரும் அழிவுக்கும் தீர்வு காண இயலும்.
இன்றைக்குப் பலரும் நதிநீர் இணைப்புக் குறித்து பேசுகின்றனர். அப்படி பேசுகின்ற பலரும் அந்த திட்டத்தை அவர்களே கண்டறிந்தது போல பேசுவது நகைப்புக்குரியது. தேசிய நதிநீர் இணைப்பு என்பது இந்திராகாந்தி விரும்பிய திட்டம், பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவுத்திட்டம். எப்படி ரயில் பாதைகள் கொண்டு நாட்டை இணைத்தாரே அப்படியே நதிகளையும் இணைக்க வேண்டும் என விரும்பினார். இன்று மத்திய அமைச்சரவையில் இரயில்வே துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ்பிரபு அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
1980லிருந்து நீதிமன்றங்ளின் படிகளை வழக்கறிஞராக இருந்தும் நதிநீரை இணைக்கவேண்டும் என்று அடியேன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி 31 ஆண்டுகளுக்குப் பிறகு 27.02.2012ல் தீர்ப்பை அடியன் தான் பெற்றேன்.
இதற்கிடையில் எத்தனை இடையூறுகள்? எத்தனை தடங்கல்கள்? எவ்வளவு விமானப் பயணங்கள்? இப்படி எல்லாம் போராடிப் பெற்ற அந்த தீர்ப்பு தான் இன்று குழு அமைவதற்கும், பணிகளை துவக்குவதற்கும், இன்றைய பேச்சுக்களுக்கும் ஆதாரமானது.
தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை – காவிரி நீரைத் திருப்பி வைகை – பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்சினை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இதுகுறித்து 1834இல் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கங்கை – காவிரி இணைப்பைப் பற்றி ஆராய்ந்தார். பின்னர் சி.பி.இராமசாமி அய்யர், கேப்டன் தஸ்தூர், கங்கை-காவேரி இணைப்பு திட்டத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட டாக்டர் கே.எல்.ராவ் போன்றோர் திட்டங்களை வகுத்தனர். இவர்களை மறந்துவிட்டு நதிநீர் இணைப்பை என்னால் யோசிக்க முடிவதில்லை.
தேசிய நதிநீர் இணைப்பு அறப்போரில் வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், தேவகெளடா ஆகிய மூன்று பிரதமர்களையும், பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில்
நதிநீர் மற்றும் நீர் ஆதாரத்துறையின் அமைச்சராக இருந்த ஹரிஸ் ராவத் அவர்களை இரண்டு முறையும், இன்றைய மத்திய அமைச்சர் உமாபாரதி அவர்களை ஒருமுறையும் சந்தித்து மனு அளித்ததின் விளைவாக இன்று அதற்கான குழு அமைத்து கோப்புகள் மெல்ல மெல்ல நகர்கின்றன.
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்ற பாரதியின் கனவு பலிப்பது எப்போது என் கேள்வியுடன் நான்..........
தேசிய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்த தீர்ப்பின் பக்கங்கள், பிரதமர் மோடி உட்பட முன்னாள் பிரதமர்கள் மற்றும் பல அமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள் என ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ளது. அனைத்தையும் பதிவு செய்ய இயலாத காரணத்தால் பதிவிற்கு வலு சேர்க்கும் வகையில் ஆதாரமாக ஒரு சிலப் பக்கங்களை மட்டும் இங்கு இணைத்துள்ளேன். என் இலட்சியப் பயணத்தில் கடமையை செவ்வனே செய்தேன் என்ற திருப்தி ஒன்றே போதும்.
#பாரதிகண்டகனவு
#கங்கை-காவேரி இணைப்பு
#தேசியநதிநீர்இணைப்பு
#KSradhakrishnanpostings
#KSRpostings
கே. எஸ்.இராதாகிருஷ்ணன்
19-06-2017
அய்யா உங்கள் சாதனை பக்கங்கள் அனைத்தும் தொகுத்து புத்தகமாக போடலாமே
ReplyDeleteநதிநீர் இணைப்பு சாத்தியம் என்று இந்த கட்டுரையில் எங்குமே குறிப்பிடவில்லையே???
ReplyDelete