Saturday, June 24, 2017

ஐ.நா மனித உரிமைக் கழகம் -.சிறிலங்கா நம்பகத்தன்மை

ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு.சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது - பல நாடுகள் அதிருப்தி
-------------------------------------
 
ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது நேரடி வாழ்வியல் அனுபவங்களினூடாக சிறிலங்கா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று திரும்பத் திரும்ப உலக நாடுகளிற்கு வலியுறுத்தி வந்ததனை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகி வருகின்றது.
 


 
2015 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திலுள்ள 25 அம்சங்களில் எதனையுமே சிறிலங்கா அரசு முழுமையாக நிறைவேற்றப் போவதில்லை; அதனை சர்வதேசத்திற்கு பல்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டுவோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவை அன்று கூறியது இன்று நிதர்சனமாகி வருகின்றது.

 மேற்படி தீர்மானத்தின் அமுலாக்கும் காலத்தினை 2 வருடங்களினால் நீடிக்க சர்வதேச நாடுகள் 2017 மார்ச்சில் மேலுமொரு தீர்மானத்தினை கொண்டு வந்த போதிலும், தற்போது சிறிலங்கா மீதான அதிருப்தி வெளிப்படையாகவளர்ந்து வருவதனை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை அறிய வருகின்றது.

 தீர்மானத்தின் இணை அனுசரணையாளர்களாக (Co sponsor) பொறுப்பேற்று கையொப்பமிட்ட முக்கியமானபல நாடுகளை இக் கூட்டத் தொடரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவை மேற்படி தீர்மானத்தின் அமுலாக்களில்உள்ள விடயங்களை சுட்டிக் காட்டி கலந்துரையாடியது. ஆதாரபூர்வமான உண்மைகள் மூலம் நாம் எடுத்துரைத்த சிறிலங்காவின் இழுத்தடிப்புகளை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதனை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

மனித உரிமை கழக ஆணையாளர் அலுவலம் (OHCHR) மற்றும் பிரித்தானியா (U.K.), அமெரிக்கா (USA), கனடா (Canada), இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), சுவீடன் (Sweden), தென்னாபிரிக்கா (South Africa), எத்தியோப்பியா(Ethiopia), மெக்ஸிகோ (Mexico), நியூஸிலாந்து (New Zealand), ஜேர்மனி (Germany), ஆர்ஜென்டினா (Argentina), சுவிற்சர்லாந்து (Switzerland), அயர்லாந்து (Ireland), கானா (Ghana), நோர்வே (Norway), நெதர்லாந்து (Netherlands), அல்பேனியா (Albania),  ஸ்லோவேனியா (Slovenia) உள்ளிட்ட பல நாடுகளையும் பல சர்வதேச நிறுவனங்களையும் இக்கூட்டத் தொடரில் சந்தித்து உரையாடப்பட்டது.

 இச் சந்திப்புகளில் கைது செய்து காணாமல் போனோரின் உறவுகளின் திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா நகரங்களில் நீடிக்கும் போராட்டம், கேப்பாபிலவு, இரணைதீவு, முள்ளிக்குளம் உள்ளிட்ட நில மீட்புக்கான தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள், முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு தொடர்பாக Fr எழில் கைது செய்யப்பட்டமை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் அழுத்தங்கள், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகளின் விடுதலை, பிடித்து காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் வெளிவிடாமை உள்ளிட்ட பல விடயங்கள் எம் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

 இக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா பற்றிய விடயம் எதுவும் இல்லாதபோதும் வழமை போன்று பிரித்தானியா தனது அழுத்தந் திருத்தமான தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம் "கால வரையறையுடன்கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ.நா தீர்மானத்தினை (34/1) நிறைவேற்ற வேண்டும், அது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை செயல்பட வைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 2017 மார்ச் கூட்டத் தொடரில் எமது பலமான ஆட்சேபனைக்குப்  பின்னரும் 2 வருட கால நீடிப்பினை சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கு வழங்கிடத் தீர்மானித்திருந்தது. கால நீடிப்பு வழங்கினாலும் சிறிலங்கா அரசு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கும் என்று நாம் எடுத்துரைத்திருந்தோம். எனவே "கால வரையறையுடன் கூடிய விரிவான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஐ நா தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும்" என்ற விடயத்தையாவது உள்ளடக்குமாறு  பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), CTC, USTPAC என்பன இணைந்து முன்வைத்து பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்

 இத் தருணத்தில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது? பிரித்தானியாவின் முன்மாதிரியை பின்பற்றி  தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் சிறிலங்காவிற்கெதிரான அழுத்தங்களை பிரயோகிக்க வைக்க வேண்டும். மாறி வரும்சூழ்நிலையை எமக்குச் சாதகமாகத் திருப்ப செயல்சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியாவிலும் ஏனைய நாடுகளிலும்  எல்லா தமிழ் தேசிய அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் ஒற்றுமையாகமுன்னெடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.
 

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...