Monday, June 19, 2017

விருதுநகர் மாவட்ட பதிவு - நல்லதங்காள் கதையும் இருக்கன்குடியும்.

விருதுநகர் மாவட்ட பதிவு.
நல்லதங்காள் கதையும் இருக்கன்குடியும்.
-----------------------------------------------------------------------------------

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் தான் நாம் அறியும் நல்லதங்காள் கதை நிகழ்ந்தது என்று ஓர் நம்பிக்கை. சமீபத்தில் வத்திராயிருப்புக்கு சென்ற போது இதுகுறித்தான நினைவு வந்த்து. நண்பர் கழனியூரானிடம் இதை குறித்து பேசியபோது கிடைத்த தரவுகள்.

நல்லதங்காள் கதையும் அதை குறித்தான அறிதலும்:

நல்லதம்பி, நல்லதங்காள் அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜவம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவின்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்லதங்காள் அங்கு சென்றாள். பசியால் வந்த நல்லதங்காளையும், அவள் குழந்தையையும் ஆதரிக்காமல் ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சொன்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்லதங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். ஆனால் நல்லதம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள். அண்ணன் வருவான் என்று எதிர்பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான், அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான், எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்தாள்.

மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப் போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.

அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா... என்று அழ ஆரம்பித்துவிட்டனர். அவளது கையிலோ பொருள் எதுவும் இல்லை.

குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.


இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான்.

அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சப்பட்டதுபத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள்.  இங்கு அவர்களக்கு ஒரு கோவில் உள்ளது. இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம்.

       நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.

     நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்லதங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான்.

-----------------------------------------------------------------------------------

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை குறித்தும் நாட்டுப்புற நம்பிக்கைத் தரவுகள் பல உள்ளன.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள்.

சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.


இந்த கோயிலின் தல வரலாறு இதுதான். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை இக்கோயில் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பின்பு கோயிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்தக் பெண்ணின் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

வைப்பாறு, அர்ச்சுனா ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகிவிட்டது.

இந்த அர்ச்சுனா நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுனா நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர் என்றொரு நம்பிக்கை.

இங்கு குழந்தையில்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். இது தவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது.

#விருதுநகர்_மாவட்டம்
#நல்லதங்காள்_கதை
#இருக்கன்குடி_மாரியம்மன்கோவில்
#சாத்தூர்
#virudhunagar
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

17-06-2017 

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...