யாசகஅரசியல்:
----------------
திருநெல்வேலி நகரில் ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம். அக்கூட்டத்திற்கு பொதுமக்களும் கட்சிக்காரர்களும் அதிகமாக வருகை தந்தனர். வாகனங்களில்பலரும் வந்து இறங்கினர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சலசலப்பு. சலசலப்பு சர்ச்சையானது. சர்ச்சை சண்டையானது. சண்டை வள்ளியூர் காவல் நிலையத்தில் புகாரானது. புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் என்னவென அறிந்த போது இந்த அரசியல் தேவைதானா என யோசிக்கவும், முகம் சுளிக்கவும் வைக்கின்றது. அதாவது பெண்களுக்கு தலா 100ரூபாய் மற்றும் சாப்பாடு, ஆண்களுக்கு 100ரூபாய் மற்றும் சாப்பாடு. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு குவார்டர் பாட்டில், வாகன ஓட்டிகளுக்கு பணம் என அளித்து கூட்டத்தை திரட்டி வந்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட நபர்களுக்கு காசு போய் சேராத காரணத்தால் சர்ச்சை வெடித்தது. இதுக்கு இப்படி கூட்டம் திரட்ட வேண்டிய கட்டாயம் என்ன? அரசியல்வாதிகள் நிலை தான் இப்படி என்றால் காசுக்காக கலந்துக் கொள்ள சென்ற மக்களுக்கு சூடு , சொரணை வேண்டாமா? தன்மானம் இல்லையா? ஒரு வேளை சோறு இல்லையெனில் இறந்தா போய்விடுவார்கள்? மானமிழந்து சாப்பிடுவதற்கு ......?
ஒருகாலத்தில்பெரியார்,ராஜாஜி,ஜீவா ,காமராசர், அண்ணா, தலைவர் கலைஞர் மேடை ஏறுகின்றார்கள் என்றால் என்ன வாசகம் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 20 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கூட்டத்தில் கலந்துக் கொள்வது உண்டு. அதிலும் ஒரு சைக்கிளில் மூனு பேர் எல்லாம் ஏறிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட வாசங்கங்கள் கேட்க வந்தது தான் அரசியல். இவர்கள் மக்களை யாசகம் கேட்க அல்லவா வரவழைக்கின்றார்கள்?
தமிழர்கள் மானத்துடன் உண்டு வாழ்ந்தனர் என சங்க இலக்கியங்கள் மேற்கொள்காட்டுகின்றனவே?
விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்
வளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ?
என்கிறதே புறநானூறு.
புலி வேட்டையாடும் ஆண்பன்றி வலப்பக்கம் வீழ்ந்தால் மட்டுமே உணவாக உட்கொள்ளும், பலமின்றி இடப்பக்கம் விழுந்தால் புலி அதனை சீண்டாது என படித்ததை எல்லாம் எலிக்கும், புலிக்கும் சொல்லப்பட்டது எனக்கில்லை என கருதுகின்றார்களா? இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு இடையில் என் போன்றவர்களும் அரசியல்வாதிகள் என சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டியதாகின்றது. மழைக் காளான்களை போல தரமற்ற, தகுதியற்றவர்கள் எல்லாம் தங்களை தலைவர்கள் என சொல்லிக் கொண்டால் அரசியல் இப்படித்தான் நடக்கும்.
#யாசகஅரசியல்
#மானமற்றஅரசியல்வாதிகள்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2017
No comments:
Post a Comment