இன்றைய (25/9/2017) ie இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழின் தளத்தில் வெளியான காவிரி பிரச்சனை -அ முதல் அக்கு வரை குறித்தான எனது பத்தி.
கனவாகிப் போன காவிரி
----------------------------------------
காவிரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பின் 2007ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்தே இந்தப் பிரச்சினை கண்ணாமூச்சி விளையாட்டாகிவிட்டது. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது வேதனையைத் தருகின்றது. மத்திய அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரலின் உறுதிமொழிக்கு முற்றிலும் முரணாக தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி, அரசியல் சாசன பிரிவு 144ன் படி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தே கேரளா முல்லைப்பெரியாறுப் பிரச்சினையில் தீர்மானம் நிறைவேற்றியது போல கர்நாடக சட்டமன்றத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடியாது என்ற கருத்தை தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் எதையும் மதிக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் காவிரிப் பிரச்சினையில் நடந்துகொள்வது தான்தோன்றித்தனமாக தெரிகிறது.
காவிரியும், தமிழகமும் பிரிக்க முடியாத வரலாற்றையும், தொன்மையும், பழமையும் கொண்டது. பல்வேறு காலகட்டங்களில் காவிரிப் பிரச்சினையில் சிக்கல்கள் வந்தாலும் தீர்க்கப்பட்டுள்ளன. 1872ல் காவிரிப் பிரச்சினை துவங்குகிறது. 140 வருடங்களாக அமைதிப் பிரச்சினைகளாக இருந்து வந்தன. ஆனால் கடந்த 43 ஆண்டுகளில் கொழுந்துவிட்டு எரிகின்றது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடினமான சிக்கல் எப்போதும் ஏற்பட்டதில்லை. காவிரி பிரச்சினை தோன்றி 48 ஆண்டுகளாக சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால் 10 மாவட்ட தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். நடுவர் மன்றம் அமைத்தும், இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் மதித்து கர்நாடகா செயல்படவில்லை. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி, யாகாட்சி என்ற ஐந்து காவிரி துணையாறுகளில் கர்நாடகா அணையைக் கட்டி பாசன நிலங்களை அதிகப்படுத்தி, கால்வாய்களையும், ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் எந்த நெறிமுறையையும் மதிக்காமல் நடந்துகொண்டது. காவிரி மொத்தத்தில் பாயும் தூரம் தமிழகத்தில்தான் அதிகம் (ஏறத்தாழ 416 கி.மீ.). கடைமடைப் பகுதியான தமிழகத்திற்குத்தான் உரிமைகள் அதிகம். இந்த உரிமைகளையெல்லாம் கர்நாடகா மறுத்துவிட்டு கையகப்படுத்திக் கொண்டது. நதிநீர்ப் பகிர்வு பன்னாட்டு அளவில் ஹெல்சிங் கோட்பாடு என்று சர்வதேச அளவில் ஹெல்சிங் நகரில் கூடி முடிவெடுத்து இந்த உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளையும், கர்நாடகாவும், மத்திய அரசும் மதிப்பதில்லை.
வரலாற்று ரீதியாக தமிழர் நீர் மேலாண்மை நிர்வாகம் உலகத்துக்கு வழிகாட்டியது. காவிரியில் தமிழகத்தில் ஆதிபத்தியம் இருந்ததால்தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினார். இயற்கையின் போக்கில் உள்ள ஆறுகளை தன் போக்குக்கு மாற்றுவது இயற்கைக்கு முரணானது. காவிரி சிக்கல்கள் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சில நேரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டாலும, உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன.
கி.பி. 11ம் நூற்றாண்டில் சோழராட்சி நடந்து கொண்டிருந்த போதும், கர்நாடகத்தில் ஹொய்சள வம்சத்தினர் ஆட்சியில் இருந்தபோது, காவிரியின் குறுக்கே அணைகட்டி நீரை வேறு திசைக்குத் திருப்பிவிட்டனர். அப்போது சோழமன்னன் இரண்டாம் ராஜராஜன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அவ்வணையை உடைத்துக் காவிரியின் தண்ணீரை பழைய பாதையில் ஓடச்செய்து சோழ நாட்டிற்குத் தண்ணீரைக் கொணர்ந்திருக்கிறான்.இச்செய்தியை ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியிலும், ராஜராஜசோழன் உலாவிலும் கூறப்பட்டுள்ளது. இதை எறிபத்த நாயனார் புராணத்தில் சேக்கிழாரும் கூறியிருக்கிறார்.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலும் ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையோடு காவிரியை மீட்க சென்றதெல்லாம் வரலாற்று செய்திகள். 1807ம் ஆண்டு பேச்சுவார்த்தை இரண்டு வட்டாரங்களில் துவங்கின. மைசூருக்கான ஆங்கிலேய அதிகாரி கர்னல் ஆர்.ஜே. சாங்கி, மைசூர் சமஸ்தானத்துடன் இணைந்து கர்நாடக மலைச்சரிவில் விழும் நீரை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டர். இதற்கு அன்றைய சென்னை மாகாண அரசு ஒத்துக்கொண்டது. அதன்பின்பு தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிடும் என்று திரும்பவும் பேச்சுவார்த்தையில் இறங்கி அணையை கட்டவேண்டாம் என்றும் வலியுறுத்தியது. பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18ம் தேதி ஒரு ஒப்பந்தம் இறுதியானது. அதுதான் காவிரியின் முதல் ஒப்பந்தம். மைசூர் அரசு 41.5 டி.எம்.சி. கொள்ளளவில் கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணையை திட்டமிட்டபோதுதான் சென்னை மாகாண அரசும் மேட்டூர் அணையை கட்ட திட்டமிட்டது. 1910ல் இந்த தாவா சற்று விஸ்வரூபமெடுத்தது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1924ம் ஆண்டு திரும்பவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறான கடந்த கால வரலாறு துவங்கி இன்றைக்கும் தீர்க்கப்படாத சிக்கலாக உள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் காலத்திலும் காவிரி பாசனப் பகுதியில் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டில் மேட்டூர், கீழ்பவானி, அமராவதி மற்றும் கேரளத்தில் பனசுரசாகர் ஆகிய அணைகள் கட்டப்பட்டன. கேரளா துவக்கத்தில் காவிரி சிக்கலில் ஒரு மாநிலமாக இல்லை. 1956க்கு பின் மாநில எல்லைகளை சீரமைத்தப்பின் கேரளாவும் காவிரியில் உரிமை கொண்டாடியது. 1960களில் ஒருதலைபட்சமாக தமிழகத்தை சற்றும் மதிக்காமல் கர்நாடகா தன் போக்கில் காவிரியில் அணைகள் கட்டிகொண்டபோதுதான் வழக்கு சிக்கல்கள் துவங்கின. 1976ம் ஆண்டு காவிரி உண்மை அறியும் குழு ஓர் அறிக்கையை தயாரித்தது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக வழக்குகளை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி திரும்பப் பெற சொன்னதால் திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகும் மத்திய அரசு காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயங்களை கவனிக்காமல் பாராமுகமாகவும் இருந்தன. 1983ல் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 1990ல் கிடைத்து, நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது. இப்படிப் பல இழப்புகள் தமிழகத்திற்கு தொடர்கதையாக உள்ளன.
உலக அளவில் நைல், அமேசான், சீனாவில் யாங்சே, அமெரிக்காவில் மிசிசிப்பி-மிசூரி, யெனிசே-அங்காரா, ஓப்-இர்டிஷ், ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு), ஆமுர், காங்கோ, லெனா, அமு டாரியா, காங்கோ, தாமோதர், தன்யூப், கொலம்பியா, டெட்ரோயிட், நீப்பெர் (Dnieper), நீஸ்ட்டர் (Dniester), இயூபிரட்டீஸ் , ஜோர்தான் ஆறு, மியூஸ் ஆறு, நைஜர் ஆறு, ரியோ கிராண்டே, பரனா ஆறு, ரைன், ரோன், வோல்ட்டா போன்ற பல நதிகள் நாடு விட்டு நாடு கடந்து பாய்கின்றன. எந்த சிக்கலும் இல்லாமல் நீர் பங்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏன்? நமது பிரம்மபுத்திரா நதியே இந்தியா, வங்கதேசம், திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே முறையாக நீரைப் பங்கீடு செய்கின்றது. தீஸ்டா நதி நீரையும் வங்கதேம் பகிர்ந்துகொள்கிறது. அண்டை நாடுகளில் பாயும் சிந்து நதி மற்றும் கங்கை-பிரம்மபுத்திரா-மேகனா படுகை என்பதெல்லாம் அண்டைநாடுகளுடன் தீர்க்கப்பட்டு உரிய நீர்வரத்து கிடைக்கின்றது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நதிநீர்ப் பிரச்சினையில் எதுவும் தீர்ந்தபாடில்லை.
இந்தியாவிலும் நதிநீர் சிக்கல்கள் வட இந்தியாவிலும், தக்காண பீடபூமி மாநிலங்களிலும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக தீர்ப்புகளையும் பெற்று நீர்ப் பகிர்மானத்தை எந்தவித சர்ச்சைகள் இல்லாமல் மாநிலங்கள் இடையே ஒப்பந்தங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் காவிரி நடுவர் மன்றத்துக்கு மட்டும் மத்திய - கர்நாடக அரசுகளும் வாய் மூடி மௌனியாகவே இருக்கின்றன. வன்சதாரா நதிநீர் பிரச்சினை ஒடிசா-ஆந்திரப் பிரதேசம் இடையில் சிக்கலாக உள்ளது. இது குறித்து விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மகாதாயி / மண்டோவி நதிநீர் சிக்கல் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலத்துக்கு இடையே நிலவுகிறது. இதையும் விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நர்மதா ஆற்றுப் பிரச்சினைக் குறித்து குஜராத், மகாராஷ்டிராம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் இடையே பிரச்சினையாகி, 1979ல் நடுவர் மன்றம் தீர்ப்பை அளித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் நடந்த கோதாவரி நதிநீர் பிரச்சினையிலும் 1980ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைப் போலவே கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் 1976ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் காவிரிக்கு மட்டும் தீர்ப்பு வந்தும், நடைமுறைப்படுத்தாமல், காவிரி ஒரு கேள்விக் குறியாக உள்ளது.
இவ்வளவு நியாயங்கள் தமிழகத்துக்கு இருந்தும் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுத்து; கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, காவிரி ஆற்றின் குறுக்கே 5700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிக்கல் கொழுந்துவிட்டு எரியும் போதே, மேகதாட்டில் அணை கட்டுவேன் என்று கொக்கரிக்கின்றார். பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் காவிரியிலிருந்து பெறுவது ஒப்பந்தத்துக்கு முரணானது. ஆனால் காவிரியிலிருந்து பெங்களூருவுக்கு குடிதண்ணீரை எடுப்பதை நிறுத்தாமல் சென்று கொண்டு தான் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேகதாட்டிலிருந்து இனிமேல் தண்ணீரும் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் குறையும்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில் 15 தடவை மட்டுமே மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாள் திறக்கப்பட்டது. அதுகூட கடுமையான வெள்ளப் பெருக்கால்தான் உபரி தண்ணீரால் திறக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்ற சமயங்களில் காலதாமதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையைத் திறக்க குறைந்த அளவு 75 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
காவிரி சிக்கலில் இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம். 1996ல் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? 1996ல் தேவ கவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை தாக்கல் செய்தவுடன் அலறியடித்து தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்தபின்னும் தமிழகத்தை எதிரியாகப் பார்த்தவர் தேவ கவுடா. முன்னாள் பிரதமர் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இன்றைக்கு பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடைய மத்தியஸ்தம் செய்யவேண்டியவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமைய்யாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்படி அரசியல் சாசன கடமைகள், மரபுகள், பண்பாடுகளை கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு முரட்டுத்தனமாக அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்று சொன்னது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல்.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்துக்கு நர்மதை ஆற்றின் தண்ணீர் செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் வந்தால் மோடி குரல் கொடுக்கின்றார். நர்மதை ஆறு மத்திய பிரதேசம், மகராஷ்டிரம், குஜராத், இராஜத்தான் வரை செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தான் முதல்வராக இருந்தபோது குஜராத்துக்கு குரல் கொடுத்தார். ஆனால் தமிழகத்தின் உரிமைகளின் நியாயங்களை கண்டுகொள்ளாமல் கர்நாடக அரசைப் போல மத்திய அரசு நடந்துகொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. பன்மையில் ஒருமை எங்கே இருக்கின்றது? மாற்றான் தாய் போக்கில் நடந்துகொண்டால் வேற்றுமையில் ஒற்றுமை எப்படி வலுப்பெறும்? பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில், கர்நாடகா, மத்திய அரசு போல நடந்துகொண்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை டெல்லி பாதுஷாக்களும் உணரவேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி, பம்பாறு, நெய்யாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பொன்னியாறு, தென்பெண்ணை, அச்சன்கோவில்-பம்பை-வைப்போறோடு இணைப்பு என்ற பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே பல ஆண்டுகளாக உள்ளன. இதற்கு எப்போது தீர்வோ?
ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றலாத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கிவிடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது.
இப்படியான நிலையில் குறைந்தபட்சம் கிடைக்கின்ற நீரை சேமிக்கவும் அதனால் ஏற்படும் பயன்பாட்டையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மிக எளிதாக கட்டலாம்.
பயன்கள்:-
1. ஆற்றின் இரு கரைகளை 15அடி உயர்த்தி சாலைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்!
2. 15அடிகள் உயர்த்தி நீர் தேக்கி வைக்கும் போது தஞ்சையில் முப்போகம் தங்கு தடை இன்றி விளையும்!
3. ஒரே ஒரு முறை
#காவிரி நீர் மற்றும் மழை நீர் கொண்டு தேக்கி வைத்தால், அங்குள்ள மண் மூலம் அத் தண்ணீர் கிரகிக்கப் பட்டு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிலத்தடி நீர் பஞ்சமே இருக்காது.
4. விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறும் போது அது சார்ந்த.இஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அமையும்!
6, ஆங்காங்கே இரு கரைகளுக்கு இடையே பாலங்கள் கட்டி, போக்குவரத்து தூரங்களை குறைக்கலாம். அத்துடன் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பொருட்களை மிக எளிதாக பண்டம் மாற்றிக் கொள்ளலாம்!
7. இந்த நீண்ட தடுப்பணையில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் அரசு மிகப் பெரும் வருவாய் ஈட்டலாம்!
8. மிகப் பெரிய அளவில் நடக்கும் மணல் கொள்ளை தடுப்பணை கட்டி விட்டால், கனவில் கூட நடக்காது.
9. கரூர், திருச்சி, தஞ்சை ஐந்தே ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஒன்றாகி விடும்.
காவிரி உபரிநீர் மற்றும் மழை நீரைச் சேமிக்க, கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டியும், 1.05டி.எம்.சி தண்ணீரைத்தான் சேமிக்க முடிந்தது. மீதமுள்ள நீர் அணைத்தும் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது. திட்டங்களை ஒழுங்குபடுத்தி இந்நீரைச் சேமித்து வைத்திருந்தால் காவிரிநதி தீரத்தில் உள்ள தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டுவாய்க்கால் மட்டுமல்லாமல் மேலும் ஏழு தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலுக்குச் சென்ற நீரை சேமித்திருக்க முடியும்.
காவிரியின் இன்றைய நிலை:
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயுள்ள சிக்கலில், காவிரி நீரில் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் இந்த பிரச்சனையில் உரிய நீராதாரப் பங்குண்டு. காவிரியில் ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் எவ்வளவு நீர் உருவாகிப் பெருகுகிறது என்ற அடிப்படையில் Cauvery Water Dispute Tribunal (CWDT) 2007ல் நீர் பங்கீடு பற்றிய தீர்ப்பை வழங்கியது. இந்த காவிரி நீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் 1901ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை வருடந்தோறும் காவிரியில் உற்பத்தியாகும் நீர்வரத்து குறித்து ஆராய்ந்தது. அதன் வழியே பருவ மழையானது 50 சதவீதம் மட்டுமே பெய்கையில் கூட குறைந்தபட்சம் காவிரியில் 740 டி.எம்.சி தண்ணீர் வரத்து இருக்கும் என்று கண்டறிந்த்து.
தமிழ்நாட்டில் கீழ் அணைக்கட்டு வரை காவிரியில் பாயும் மொத்த, குறைந்த பட்ச நீர் 740 டி.எம்.சி அளவு என்று கணக்கிட்டது தீர்ப்பாயம். இந்த ஒட்டுமொத்த நீர் அளவை கொண்டு தமிழகத்துக்கு 419 டி.எம்.சி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி, கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி, மீதமிருக்கும் 14 டி.எம்.சி யை இயற்கை வளத்திற்காக என்று பங்கிட்டது தீர்ப்பாயம்.
மேலும் தமிழகத்துக்கு கர்நாடகம் 192 டி.எம்.சி வழங்க வேண்டும் என்றும், மாத வாரியாக எவ்வளவு திறக்க வேண்டுமென்று கணக்கிட்டு ஒரு உத்தரவை தீர்ப்பாயம் வெளியிட்டது.
அதன்படி ஜுன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் மாதத்தில் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி, செப்டம்பர் மாதத்தில் 40 டி.எம்.சி, அக்டோபர் மாதத்தில் 22 டி.எம்.சி, நவம்பர் மாதத்தில் மாதத்தில் 15 டி.எம்.சி, டிசம்பரில் மாதத்தில் 8 டி.எம்.சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 2.5 டி.எம்.சி வழங்கவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது இன்றும் முடிந்தபாடில்லை.
இந்தப் புள்ளி விபரங்களில் ஒரு குழப்பம் ஏற்படலாம். 50% பருவ மழை பெய்தால் காவிரியில் மொத்தம் 740 டி.எம்.சி இருக்கும் என்கிறது கணிப்பு. அந்த 740 டி.எம்.சி நீர் முழுவதும் கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரிக்கு கிடைக்கும் என்கிற அடிப்படையில் இல்லை.
காவிரி நீரில் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி, தமிழ்நாட்டின் பங்காக கொடுக்க வேண்டியது மேலும் 192 டி.எம்.சி என்றால், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து காவிரியில் நீர்வரத்து 462 டி.எம்.சி என்று அர்த்தம். தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய 419 டி.எம்.சி யில் கர்நாடகாவிலிருந்து 192 டி.எம்.சி கிடைக்கிறது என்றால், மீதம் 277 டி.எம்.சி தமிழகத்தில் பெய்யும் பருவ மழையால், தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து காவிரியில் சேரும் நீரின் மூலமாக கிடைக்கிறது எனத் தெரிகிறது. தமிழ்நாடு (277 டி.எம்.சி), கர்நாடகம் (462 டி.எம்.சி) நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 689 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைத்தால், கேரள நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 51 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைக்கிறது. அதில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீர் பகிரப்படுகிறது. மிச்சம் 7 டி.எம்.சி நீர் புதுச்சேரிக்கும், 14 டி.எம்.சி நீர் இயற்கை வளத்திற்கும் கிடைக்கிறது.
இதுதான் CWDT எனப்படும் காவிரி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் வழங்கியுள்ள பங்கீட்டு முறை.
காவிரியில் கர்நாடக பகுதியில் பெறப்படும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஹசன், கூர்க், மைசூரு போன்ற பிரதேசங்களின் வழியே தென்மேற்குப் பருவமழை மூலமாக கிடைக்கிறது. இந்தப் பருவ மழையானது ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த பருவமழை நீர் கேரளாவின் பருவ மழை வாயிலாகவும் அதன் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரியில் சேர்கிறது. அதனால் கேரளாவுக்கும் காவிரி நீரில் பங்கு இருக்கிறது. மலையிலிருந்து கீழே சமவெளியில் காவிரி நதி இறங்கியபின் பெரும்பாலும் தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழையில் வரும் நீர் காவிரியில் சேர்கிறது. இப்படி பருவ மழைகளினால் காவிரியில் வந்து சேரும் நீர் 227 டி.எம்.சி தான், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு நீரை (192 டி.எம்.சி) விட அதிகம்.
ஆனால் தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழை இவை பொய்த்தாலோ, குறைந்தாலோ தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கிடைக்கும் நீர் மிகவும் குறைந்து விடுகிறது. அதேசமயம் குடகில் தென்மேற்கு பருவமழையும் குறைந்தால் நீர் பற்றாகுறை இன்னும் அதிகமாகிறது. அந்த சமயத்தில் CWDT நிர்ணயித்தபடி தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கை கைவிரிக்கிறது கர்நாடகம். அந்த நேரங்களில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடி நீரை போராடி பெற்றுக்கொள்கிறது. காவிரி நீரை CWDT கூறியவாறு பங்கீடு செய்ய காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. 04/10/2016ம் தேதிக்குள் மேலாண்மைக்கு தத்தமது உறுப்பினர்களை நியமனம் செய்யவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இச்சமயத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த அளவு நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியவுடன், காவிரி நீர் மேலாண்மையை அமைக்கும்படி பணித்த தன்னுடைய ஆணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஏறக்குறைய ரூ. 6000 கோடி செலவில் பிரம்மாண்ட அணை கட்ட முடிவு செய்துள்ளது. முக்கியமாக பெங்களூரு நகரத்திற்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த அணை கட்டப்படுவதாகவும், தமிழகத்துக்கு தர வேண்டிய 192 டி.எம்.சி பங்கு நீரை எந்தவித மறுப்பும், பாதிப்பும் இல்லாமல் இந்த அணை கட்டப்படும் என்று கர்நாடகம் கூறுகிறது. இந்த அணை 64 டி.எம்.சி நீரை தேக்கும் அளவுக்கு அமையும் என்று தெரிகிறது. ஆனால், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீருக்கு எவ்வித பிரச்சனையும் வராதெனில் மேகதாது அணையின் கட்டுமானத்தை தொடரலாம் என்று கூறியுள்ளது. இந்த அணையினால் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேலும் சச்சரவுகளை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.
குடகில் உற்பத்தியாகி, கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் அலைபரப்பி நடந்து தனது கரத்தை கேரளத்துக்கு விரித்து தன் சுவர்களை புதுவையில் மிதித்து வங்கக் கடலில் இணையும் காவிரி இன்றைக்கு தவிக்கின்றது. தன்னுடைய இயற்கையான போக்கை கர்நாடகம் தடுக்கின்றது என்று காவிரி கண்ணீர் வடிக்கின்றது. இதைத் தீர்க்க வேண்டியவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பின்படி 419 டி.எம்.சி. தமிழகத்திற்கும், இதில் கர்நாடக அணைகளிலிருந்து 192 டி.எம்.சி. என்றும் எஞ்சிய 227 டி.எம்.சி., காவிரிப் படுகையில் பெறக்கூடிய மழை, மற்றும் கசிவு நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்பட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. யும், புதுவைக்கு 7 எடி.எம்.சி.யும், ஆற்றின் சுற்றுச் சூழல் போக்கிற்கு 10 டி.எம்.சி.யும், கடலில் நன்னீர் 4 டி.எம்.சி. கலக்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழல் மற்றும் கடலைச் சேர்ந்த 14 டி.எம்.சி. தண்ணீர் மீன்வளத்தைக் காக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இவையெல்லாம் தீர்ப்பில்தான் உள்ளன. மதிக்கப்படவேண்டிய தீர்ப்பு ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தீர்வு எட்டப்படும்.
இதிலும் சுணக்கங்களும் புறக்கணிப்புகளும் காட்டுவதில் அர்த்தமில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி ஹேமாவதி, கபினி அணைகளை கர்நாடகம் கட்டியதோ அந்த தைரியத்தில் இப்போது மேகதாதுவில் பெரிய அணையை கட்டி தமிழகத்துக்கு உரிமையான நீரை தடுக்க அனைத்து பணிகளையும் கர்நாடக அரசு செய்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
காவிரி ஒரு சோகத் தொடர்கதையாக இல்லாமல் என்றைக்கு முற்றுப்பெறும்? இதுவே ஒவ்வொரு தமிழருடைய தவிப்பாகும்.