Wednesday, September 27, 2017

1940 களில் நாடாளுமன்றம்.

சமீபத்தில் டெல்லியில், இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றபோது நாடாளுமன்றத்தின் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஓய்வுபெற்ற பேராசிரியர் நண்பர் கோயல் காட்டினார். அந்த புகைப்படத்தில் ஆங்கிலத்திலும், உருது மொழியில் எழுதப்பட்ட பலகையில் ‘நாடாளுமன்ற வளாகத்தில் மாட்டு வண்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது’ என உள்ளது. 
(Urdu & English signboard written 'BULLOCK CARTS PROHIBITED' in front of Parliament House in 1946....!)



அதாவது, 1940 களில் என்றால் 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் மாட்டு வண்டியில் வராமல் நடந்து வாருங்கள். இந்திய மக்கள் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. எனவே அவருடைய பிரதிநிதிகளான நீங்களும் சிறிது தூரம் நடந்து வந்து நேர்மையாக உண்மையாக மக்கள் பணியாற்றுங்கள் என்பது தான் இதிலிருக்கும் உள்ளார்ந்த அர்த்தம் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 

அன்று நாடாளுமன்றத்திற்கு குற்றவாளிகளும், மக்கள் விரோத சக்திகளும் மக்களின் பிரதிநிதிகளாக செல்லவில்லை, அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியமும், சலுகைளும் இந்தளவு கிடையாது. மறைந்த முன்னாள் அமைச்சர் சி. சுப்ரமணியம் தன்னுடைய நினைவுகளில் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக சென்றபோது கார் கேரேஜில் தங்கியதாக எழுதியுள்ளார் என்று என்னுடைய நினைவு.  அப்போது மாநில அரசுகளின் இல்லங்களோ, விடுதிளோ, பவன்களோ கட்டப்படாத காலகட்டம். ஒரு சில எம்.பிக்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆரம்ப கட்டத்தில் விருந்தினராக தங்கியதாக சொல்வார்கள்.

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 2 கிலோமீட்டர்கள் நடந்தே தான் செல்லவேண்டும். இயலவில்லை என்றால் மாட்டு வண்டியில் சென்றால் சன்சத் மார்க், ரெட் கிராஸ் ரோடு, தல்கோத்ரா ரோடு, பண்டிட் பந்த் மார்க், சர்ச் ரோடு, ரெட் கிராஸ் ரோடு வரை மட்டுமே மாட்டு வண்டியில் செல்ல முடியும். தங்களுடைய துணிகளை தாங்களே சலவை செய்து கொள்வதுண்டு. அன்றைய சென்னை ராஜதாணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கன்னாட்டு பிளேசில் உள்ள மெட்ராஸ் ஹோட்டலில் தான் உணவுக்கு செல்வது வாடிக்கை.

இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, மலையாள உறுப்பினர்கள் விரும்பி சாப்பிடும் சோறு, இட்லி, தோசை முதலானவைகள் கிடைக்கும். இது தற்போதுள்ள சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி பேப்பர் கடைக்கு அருகிலும் அதன் மாடியிலும் இருந்தது. சூடான சாம்பாரில் இட்லியை போட்டு உண்பது இங்கு வாடிக்கை. இதை வடஇந்தியர்கள் கூட விரும்பி சாப்பிடுவது உண்டு.

சுதந்திரா கட்சியின் எம்.பிக்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், சிவகாசித் தொகுதியின் முளிச்செவல் பி. இராமமூர்த்தி ஆகியோர் டெல்லியில் இருந்த சமயத்தில் நான் சென்றபோது இந்த காட்சிகளை கண்டதும் உண்டு.

அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதயசுத்தியோடு மனசாட்சிக்கு அஞ்சி மக்கள் பணியாற்றினார்கள். இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சுயபுகழ்ச்சிக்கும், தன்னலத்தினை தங்களுடைய இதயத்தினில் சுமந்து கடுமையான பணிகளை மேற்கொள்கின்றனர். 

#இந்திய_நாடாளுமன்றம்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-09-2017

No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...