Tuesday, September 12, 2017

விவசாயிகள் போராட்டம் குறித்தான கவலை.

ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்க கூடாது என்று நம்புகிறேன். போராளிகள் மிடுக்குடன்,போர் குணத்துடன்போராட வேண்டும்,விவசாயிகளுடைய பெருமைக்கு சிறிதும் சேதாரம் இல்லாமல் போராடுங்கள். விவசாயிகளுடைய பிரச்சினையில் 1972 லிருந்து போராடியவன்;என்னுடைய கிராமத்தில் 1980களில் போராடிய விவசாயிகளில் 8 பேர் காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இந்த தகுதியின் காரணமாக இதை சொல்கிறேன். விவசாயிகளுக்குயுள்ள கெளரவம், மரியாதை,கீர்த்தி என்றும் காக்க வேண்டும்.
1972ல், கிட்டத்தட்ட 1992வரை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் போராடினாலும் அவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட 77 பேர் கொல்லப்பட்டனர். கட்டை வண்டிகளை சாலைகளில் மறித்து, காய்கறிகள், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் நகர்களுக்கு செல்லமுடியாமல் தமிழகமே ஸ்தம்பித்தது. கோவை, திண்டுக்கல், கோவில்பட்டி, சாத்தூர், சேலம், திருவண்ணாமலை போன்ற பல இடங்களில் இந்த போராட்டங்களில் கடுமையாக நடந்தன. தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஒன்றாக திரண்டு போராடினார்கள். 

நியூயார்க் டைம்ஸ் இந்த கட்டை வண்டி போராட்டத்தில் நிறுத்திய கட்டை வண்டிகளை இந்திய விவசாயிகளின் பேட்டர்ன் டாங்க் என்று எழுதியது. நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துசாமி கவுண்டர், முத்துமல்லா ரெட்டியார், வி.கே. ராமசாமி, டாக்டர். சிவசாமி, மயில்சாமி எனப் பல முன்னணியினர் இந்த இயக்கத்தை வலுவோடும் ஆளுமையோடும் நடத்தி சென்றனர். ஒரு நாளும் விவசாயிகளுடைய சுயமரியாதைதைய எள்ளளவும் குறையாமல் தன்னுடைய போராட்ட யுக்தியையும், போர்குணத்தையும் கொண்டு தமிழக முதல்வரை மட்டுமல்லாமல், இந்திய பிரதமரையும் திரும்பி பார்க்க செய்த யுக்தியை மறந்துவிட்டு விவசாயிகளுடைய சுயமரியாதையை பாதிக்ககின்ற அளவில் நடக்கும் போராட்டத்தை ஒரு காலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பின் குறிப்பு:இந்தப் படத்தைப் பார்த்து மிகவும் கவலை தருகிறது. போராடுவதை எல்லோரும் வாழ்த்த வேண்டும். போராடுவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு. போராட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் போராடும் போது கண்ணியத்தை இழந்துவிடக் கூடாது. அந்தப் போராட்டத்தின் நோக்கம் ஒரு உரிமைகளின் மீட்பாக இருக்க வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-09-2017

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...