Friday, September 15, 2017

கிரா 95

இன்றைய(15/9/2017) தி இந்துவில் கிரா பற்றிய எனது  பத்தி
--------------------------------------
இலக்கிய பிதாமகன் கி.ரா...
*******************************
-வழக்கறிஞர். 
 கே.எஸ். இராதாகிருஷ்ணன்,

 
நாங்குநேரி மறைந்த வானமாமலை ஜீயரை நான் சந்திக்கும் பொழுதெல்லாம் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நலமாக இருக்கின்றாரா என்று கேட்பார். இதுதான் கி.ரா.வின் முழுப்பெயர். இந்த முழுமையான பெயரை வழக்கறிஞர் என்.டி.வானமாமலையிடம் சொல்லும் பொழுதும் அப்படியா! என்று என்னிடம் கேட்டதும் உண்டு. இளமையில் தந்தையை இழந்து இடைசெவலில் விவசாயத்தோடு இசை ரசனையும், இலக்கிய ஆர்வமும் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பால் இசைவாணராகாமல், 40 வயதுக்கு மேல் தமிழ் கூறும் நல்லுலகம் படைக்கும் படைப்பாளி ஆனார்.
வெள்ளந்தி அப்பாவி கிராம மனுசர்களைப் பற்றி இவர் எழுதவில்லை என்றால் அவர்களுடைய பாடுகளை அறிந்து கொள்ள முடியாது. விவசாயப் போராட்டங்களின் தாக்கம் நகர்புறத்தில் ஏற்பட்டதென்றால் அதற்கு இவரது படைப்புகளும் ஒரு காரணம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து சதிவழக்கிலும் காங்கிரஸ் அரசால் பாதிக்கப்பட்டவர். ரசிகமணி டி.கே.சி அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜாவிடம் கி.ரா.வை சம்மந்தமில்லாமல் வழக்கில் சேர்த்துள்ளீர்கள் என்று கடுமையாக பேசியதன் விளைவாக விடுவிக்கப்பட்டார்.
1960ல் கோவையில் கூடிய கோவை பொதுவுடைமை இயக்கத்தை சார்ந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இவரை நாடோடிக் கதைகளை திரட்டச் சொன்னதனால் கதைகளைக் கேட்டு கதைச் சொல்லியாகவும் மாறிவிட்டார்.
ஒரு சிறு குன்றைத் தூரத்தில் இருந்து பார்த்தால், மண்ணும் மலையும், மரம் செடி கொடிகளும் சேர்ந்த ஒரு குன்றாகத் தெரியும். அதே குன்றை நாம் அருகில் சென்று தரிசித்தால், அதில் பல மூலிகைச் செடிகளும் அபூர்வமான சில தாவர வகைகளும் பூக்களும் மரங்களும் இருப்பது தெரியும்.
அது போல தான் கி.ராவை நெருங்கி நட்புறவுடன் பழகப்பழகத் தான் அவரைப் பற்றிய நுட்பமான சில ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. முத்தமிழில் ஆர்வம் கொண்டார். ரசிகமணி டி.கே.சியின் பாதையில் வந்தார்.
சிறுகதையாளராக இருந்த கி.ரா. அவர்களின் ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவல் வெளி வந்ததும், கி.ரா.வின் ரசிகர்களும் வாசகர்களும் அந்நாவலைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட ஆரம்பித்தார்கள். கி.ராவை ஒரு நாவலாசிரியர் என்று தமிழ் இலக்கிய உலகம் போற்றியது.
இந்தத் தருணத்தில் காலம் கி.ரா.வை “எழுதுங்கள், எழுதுங்கள்” என்று விரட்டியது. ஏற்கனவே ‘கி.ரா.’ அவர்கள் நண்பர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் எழுதிய சில கடிதங்களைச் சில சிற்றிதழ்களாக பிரசுரித்தன. அக்கடிதங்களும் இலக்கியப் பிரதிகளாகத் திகழ்வதைக் கண்டு, தமிழ் வாசகர்கள் ‘கி.ரா.’ வின் கடிதங்களையும் கொண்டா, கொண்டா (கொண்டுவா) என்று கேட்டார்கள். எனவே கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் சிவகங்கை கி.ரா.வின் கடிதங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டது.
கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கிய புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள், நேருவின் கடிதம், அண்ணாவின் கடிதம், ரசிகமணி டி.கே.சியின் கடிதம் போன்றவற்றில் இருந்து கி.ரா.வின் கடிதங்கள் தனித்தன்மையுடன் திகழ்ந்தன. அக்கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழிநடை வாசகர்களை அசத்தியது.
யாரும் செய்ய முடியாத சாதனையை இந்தியாவிலேயே முதன்முதலாக வட்டார வழக்கு சொல்லகராதியை 1982ல் இவரே தொகுத்து அன்னம் கவிஞர் மீரா வெளியிட்டார். இதற்கு இவருக்கு உதவியாக இருந்து சொற்களை சேகரித்து உதவ பெரும் குழுவே இருந்தது. அந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எஸ்.எஸ்.போத்தையா, பூ. மாணிக்கவாசகம், எஸ். மாரீஸ்வரன், ஆர். முருகன், கே.உதயசங்கர், போ. குமாரசாமி நாயக்கர், பி.பெருமாள், அ.மாணிக்கம், அ.முத்தானந்நதம், பி.ஐயரப்பன், அ.கிருஷ்ணபிள்ளை, அ.இராமசாமி, வில்லாயுத ஆசாரி, பி. இராமசாமிப் பாண்டியன், மாடசாமி ஆகியோர் கி.ரா.வுக்கு வட்டார வழக்கு சொல்லகராதியை தயாரிக்க 40 ஆண்டுகளுக்கு முன்னே இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இந்த அளவு பெரும் பணியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றியதை மறக்க முடியாது.
இதுவரை 200க்கும் மேற்பட்ட அகராதிகள் வெளிவந்துள்ளது. வீரமாமுனிவர், பரபிரிசிரியசு, ராட்லர், வின்சுலோ யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர், யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை, ச.சி.கந்தையா பிள்ளை, பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் போன்றோரது அகராதிகளும் அடங்கும். விரிவான முதல் அகராதியை உருவாக்கியவர் யாழ்பாணத்துச் சந்திரசேகர பண்டிதர். இது 58,500 சொற்களைக் கொண்டது. ஆனால் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாய் அமைந்தது சதுரகராதியே. பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி ஆகிய நான்கும் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதனை இயற்றிய வீரமாமுனிவரே “வட்டார வழக்குத் தமிழ் அகராதி” ஒன்றை சதுரகராதியோடு தனியே வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கி.ராவின் வட்டார வழக்குச் சொல்லகராதியோடு வெளியிட்ட ஆண்டே கரிசல் வட்டார எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தொகுப்பில் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மேற்கே திருவில்லிபுத்தூர் வடக்கே விருதுநகர் நகரம், கிழக்கே அருப்புக்கோட்டை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் நகரத்தில் இருந்து குருவிகுளம் ஒன்றியம், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, தெற்கே தூத்துக்குடி நகரம் வரை கரிசல் வட்டாரத்தின் நிலப்பகுதியாக அமைந்த படைப்பாளிகளின் ஊர்களில் குறிப்பிட்டு நில வரைபடமும் வெளியிட்டது கி.ரா.வின் ஒரு அற்புதமான பணி.
அந்த காலக்கட்டத்தில் மயிலாப்பூர் 39, சாலைத் தெருவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்னுடைய வசிப்பிடத்தில் தங்கியிருந்தார். வட்டார வழக்குச் சொல்லகராதியும், எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பும் அவரை மிகவும் ஈர்த்தது. பிரபாகரன் கி.ரா.வை பார்க்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் பாண்டி பஜார் சம்பவத்தின் விளைவாக அவர் கைது செய்யப்பட்டதன் சூழலினால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது.
என்னுடைய பொது வாழ்வில், கலைஞர், வைகோ, பழ. நெடுமாறன் போன்ற ஆளுமைகளோடு களப்பணியில் இருந்துள்ளேன். வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் இருந்த போது நீதிபதிகள் வி. ராமசாமி, இரத்தினவேல் பாண்டியன், நடராஜன் பிற்காலத்தில் இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் பொறுப்பேற்றனர். ஈழத் தமிழ்த்தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் அவருடைய துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மற்றும் குட்டிமணி ஜெகனின் வழக்கறிஞர் கரிகாலன். இவர்கள் எல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்த காரணத்தினால் கி.ரா.வின் படைப்புகளை படித்து அவருடைய படைப்புகளை எல்லாம் படிக்க வேண்டுமென்று விரும்பியதுண்டு. திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவின் வழக்குகளை நடத்தியவன் என்ற முறையில் கி.ரா. படைப்புகள் பரிச்சயமாகி அவருடைய அனைத்து படைப்புகளையும் வேண்டி விரும்பி என்னிடம் கேட்டார். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் கைப்பக்குவத்தில் சிறப்பாக அமையும் சமையலை திரும்பவும் உண்ணவேண்டுமென்ற நினைப்பு ஏற்படும். அதைப்போல கி.ரா.வின் படைப்புகளில் ஒன்றை படித்துவிட்டால் அவர் படைப்புகளின் மீதான தேடலுக்கு மனம் தள்ளும்.
இப்படி பல செய்திகளை கி.ரா.வைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும். 1950ல் எழுத ஆரம்பித்த ‘கி.ரா’வின் பேனா இன்று வரை ஓயவில்லை. வி.சா.கண்டேகர், தகழிசிவசங்கரன் பிள்ளை போன்று கிராமத்தில் கயிற்று கட்டிலில் இடைசெவலில் இருந்து வசதி வாய்ப்பில்லாமல் தான் எழுதிய படைப்புகள் அவரை கீர்த்திக்கு அழைத்துச் சென்றது.
கி.ரா. கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, ரசிகமணி போல ரசிகர் – விமர்சகர், இசையின் இலக்கணத்தை அறிந்தவர், வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர், பொதுவுடைமைவாதி, விவசாயிகள் நலனுக்காக போராடிய போராளி, பண்பாளர், ஏடுகளில் பத்தியாளர் என பன்முகத் தன்மையை தன்னகத்தே கொண்டவர்.
அவருக்கு கிடைக்க வேண்டிய ‘ ஞாணபீடமும் ’ தள்ளிக்கொண்டு போகிறது. பட்டம் பெறாத சாமுவேல் ஜான்சனுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அவருடைய அகராதி தயாரிப்பு பணிகளுக்கு டாக்டர் பட்டம் அளித்தது. வட்டார வழக்குச் சொல்லகராதியை பல சிரமங்களுக்கு இடையில் தயாரித்த கி.ராவிற்கு தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகமும் கி.ராவுக்கு டாக்டர் பட்டம் அளிக்காதது குறித்து கவிஞர் மீராவே வருத்தப்பட்டதுண்டு. 1965ல் ‘கதவு’ என்ற சிறுகதை தொகுப்பு வெளிவந்ததில் இருந்து இன்று வரை தவறாமல் 57 ஆண்டுகளாக வந்த வண்ணம் உள்ளது. வட்டார வழக்குச் சொல்லகராதி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவருடைய படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இந்த இரு சாதனைகளையும் யாரும் தமிழ் இலக்கிய உலகத்தில் செய்யவில்லை என்பது தான் மகிழ்ச்சியான ஒரு மதிப்பீடு.
‘கி.ரா.வின் 60’ மணி விழாவை கவிஞர் மீரா மதுரையில் கொண்டாடினார். ‘ராஜநாரயணியம்’ என்ற கி.ரா.வின் படைப்புகளைக் குறித்தான விமர்சனத் தொகுப்பையும் வெளியிட்டார். ‘கி.ரா.வின் 80’ விழாவை மறைந்த இராமமூர்த்தி, காவ்யா சண்முகச்சுந்தரம் மற்றும் அடியேனும் சேர்ந்து சென்னை பிலிம் சேம்பரில் நடத்தினோம். ‘கி.ரா.வின் 85’ விழாவை அடியேன் அதே அரங்கில் சென்னையில் நடத்தினோம். ‘கி.ரா. வின் 90‘ விழாவை டெல்லி தமிழ் சங்கம், தினமணி நாளிதழ், அடியேன் இணைந்து புதுடில்லியில் நடத்தினோம். இன்றைக்கு கி.ரா.95ஐ எட்டிவிட்டார்.

வேடிக்கையாக அவருடைய பிறந்தநாளை, ‘பொடிக்கும் தாடிக்கும் இடையே பிறந்தவர்’ என்று சொல்வதுண்டு. ஏனெனில் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17, கி.ரா.வின் பிறந்தநாள் செப்டம்பர் 16 ஆகும். அவருடைய பணிகள் இப்போதும் தொடர்கின்றது. அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அவருடைய கருத்துச் சுரங்கத்தில் இருந்து இன்னும் கிடைக்க வேண்டிய செல்வங்கள் உள்ளன. அதை தொடர்ந்து மீட்டுத் தருவார். பக்தி இலக்கியங்களில் உள்ள தமிழ் சுவை என்னை ஈர்க்கும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடிய,

“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு”
என்ற பாசுரத்தின்படி கி.ரா. அவர்களும் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...