Saturday, September 30, 2017

பேரறிஞர் ஜே.சி. குமரப்பா

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி நேற்று ஒரு சிறு பதிவிட்டிருந்தேன். பலரும் குமரப்பா யார் என்று கேட்டிருந்தனர். ஒரு புறம் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்த போதிலும் கவலையாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் தமிழகம், காந்தியின் சகாவும், பொருளாதார நிபுணருமான தமிழரை தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான். தஞ்சை மண்ணில் பிறந்து காந்தியுடன் பணியாற்றி இறுதி காலத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தங்கி கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு பணியாற்றிய குமரப்பாவை பற்றி தெரியவில்லையே.....

பேரறிஞர் ஜே.சி. குமரப்பா
...........................................
ஒரு முறை காந்தி காசியில் இருந்து குமரப்பாவை சந்திக்க பாட்னா வந்திருந்தார். பீகாரில் அப்போது நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் தொடர்பான கணக்கு வழக்குகளை ஜே.சி. குமரப்பாதான் கவனித்துவந்தார். ஓரிரு நாட்களில் அது தொடர்பான முக்கியமான மீட்டிங் நடக்கவிருந்தது. வரவு செலவுகணக்கில் ஏதோ சிறிய பிழை நேர்ந்திருந்தது. ஆடிட்டர்கள் அதைக் கண்டுபிடித்து இருக்கவில்லை. ஜே.சி.குமரப்பாவுக்கு திருப்தியில்லை. என்ன தவறு என்பதைக் கண்டே பிடித்தாகவேண்டும் என்று இரவு முழுவதும் தூங்காமல் ரசீதுகளை அலசிக்கொண்டிருந்தார். காந்தி அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், சரி நாளை காலையில் சந்தித்துக்
கொள்கிறேன் என்று சொல்லி தன் அறைக்குப் போய்விட்டார்.

மறுநாள் காலையில் குமரப்பாவை சந்திக்க போயிருக்கிறார். குமரப்பாவோ இன்று முடியாது நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டார். அது முடியாதே. இன்று இரவே வார்தாவுக்கு திரும்பப் போகிறேன் என்று காந்தி
சொல்லியிருக்கிறார்.சரி,அப்படியானால் என்னைப் பார்க்காமலேயே திரும்புங்கள் என்று குமரப்பா சொல்லிவிட்டார். உங்களைச் சந்திப்பதற்காக நான்
காசியில் இருந்து புறப்பட்டு
வந்திருக்கிறேன்.

இன்று நாம் சந்தித்தே ஆகவேண்டும் என்று காந்தி கேட்டுக்
கொண்டிருக்கிறாரஇதோ பாருங்கள். நான் காந்தியல்ல. நினைத்த இடத்துக்கு நினைத்தபடி போய்வர. கணக்கு வழக்குகள் தொடர்பான ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அது முடிந்த பிறகு நானே உங்களைச் சந்திக்க வருகிறேன். இன்று உங்களைச் சந்திக்க முடியாது என்றூ கறாராகச் சொல்லிவிட்டார். காந்தி அன்று அவரைச் சந்திக்காமலேயேதிரும்பினார்.
***************
இன்றைய மையப்படுத்தப்பட்ட, நீடித்த தன்மையற்ற, பெருந்தொழில்மய பொருளியல் போக்குக்கு மாற்றான பரவலாக்கப்பட்ட, சூழலியலைக் கெடுக்காத, அனைவருக்கும் வளத்தைக் கொடுக்கும் ஒரு பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் ஜே.சி. குமரப்பா.

தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வி பயின்று காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டு தனது இறுதி மூச்சுவரை ஊரக மேம்பாட்டுக்காகவே அவர் பாடுபட்டார்.
மேற்கத்திய மாதிரிகளை 'காப்பியடித்து' பொருளாதாரம் முதல் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது கல்வி முதல் பண்பாட்டு துறைவரை அனைத்திலும் தற்சார்பையும் தனித்தன்மையையும் இழந்து, அதுவே ‘வளர்ச்சி’ என்று போதித்த தலைவர்களுக்கு நடுவே நமக்கான ஒரு பொருளாதார மாதிரியைக் கொடுத்து, பல பரிசோதனைகள் மூலம் அதை மெய்ப்பித்தும் காட்டினார்.
அதற்கு நிலைபேற்று பொருளாதாரம் (Economy of Permanance) என்ற புதியதொரு சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். இந்தியா சிறிய ஊர்களைக் கொண்ட பெரிய நாடு. எனவே, சிறிய ஊர்களுக்கான ஒரு பொருளியலை உருவாக்குவதே, இங்குள்ள பொருளாதார மேதைகளின் பணியாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை, கூடிய மட்டும் பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கை, மக்களின் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி போன்றவை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அறக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகப் பொருளாதாரத்தைக் குமரப்பா உருவாக்கினார். ஆனால் போட்டியையும், பூசலையும் அடிப்படையாகக் கொண்டு கொள்ளை அடிப்பதையே அறமாகக் கொண்ட ஒரு பொருளாதார மாதிரியை மேற்குலகம் வடிவமைத்து, அதை இந்தியாவும் பின்பற்றும் நிலையைக் காண முடிகிறது.
இந்தியாவில் கடந்த 1990-ம் ஆண்டு ரூ. 19688.62 கோடி சொத்து மதிப்புடைய பெரும்பணக்காரர்கள் (billionaires) இரண்டே இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், தாராளமயமும் தனியார்மயமும் அறிமுகமான பின் இந்தியாவின் இயற்கை வளங்களும் மலிவான உழைப்பும் தனியார் கைகளுக்குத் தாரை வார்க்கப்பட்டதால் இந்தப் பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு 1084420.42 கோடி ரூபாய். பி.பி.சி. செய்தி நிறுவனம் இதைத் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இன்றைக்கு 82 கோடி மக்கள், ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, 1990-ம் ஆண்டு 65 கோடி மக்கள் பசியால் வாடினர். இன்று அந்த எண்ணிக்கை 82 கோடியாக வளர்ந்துள்ளது. என்னே நமது ஆட்சியாளர்களின் திட்டம், கொள்(ளை)கை.
பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்' என்று குமரப்பா கூறினார். இன்று அதற்கு மாற்றாகக் கொழுப்பவர்களை மேலும் கொழுக்க வைத்து ஏழைகளை மேலும் ஏழையாக்கும் கொள்ளைப் பொருளாதார மாதிரிச் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேலைக் கல்வியைப் பயின்றிருந்தாலும், நமது நாட்டுக்கான தற்சார்புப் பொருளியலை அவர் உருவாக்கினார். கணக்காயராக வாழ்க்கையைத் தொடங்கிய குமரப்பா, மிகச் சிறந்த வருவாயை ஈட்டியவர். அவரது உடை மிக நேர்த்தியான மேற்கத்தியப் பாணியில் இருந்தது.
ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்னர், வடக்கத்திய தலைவர்கள் எட்டு முழ வேட்டியில் தயாரான பைஜாமா என்ற உடையை அணிந்தபோது, அவர் நான்கு முழ வேட்டியில் 'தோத்திஜாமா' என்ற ஒன்றைச் செய்து அணிந்துகொண்டார்.
தனக்கான வீட்டை உருவாக்கும்போது காந்தியடிகள் வசித்த வீட்டைவிடவும் குறைவான செலவில் வீட்டை உருவாக்கிக்கொண்டார். காந்தியே எளிமையானவர். அவரைவிடவும் எளிமையான வீடு, ஆனால் வசதிகளுக்கும் குறைவில்லாத வீடு.
நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத் தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார்.
சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.
குமரப்பா 1892-ம் ஆண்டு ஜனவரி 4-ல் பிறந்து, 1960-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் மறைந்தார். அவரது தலைவரான காந்தியடிகளின் மறைவும் ஜனவரி 30 என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...