Tuesday, September 5, 2017

இந்த பதிவை தயவு கூர்ந்து தனிமனித விருப்பு வெறுப்பு என்று பாராமல் உங்கள் சிந்தனைக்கு உட்படுத்துங்கள்.

காவிரி, முல்லை பெரியாறு, நெய்யாறு, பாலாறு, செண்பகவல்லி, பம்பாறு, அமராவதி, சிறுவாணி, தென்பென்னை ஆறு, பழவேற்காடு போன்ற பல நீர்ச் சிக்கல்கள், கச்சத்தீவு, கடலூர், நாகை, குளச்சல் போன்ற துறைமுகப் பிரச்சனைகள், நெய்வேலி சுரங்க சிக்கல்கள், சேலம் இரும்பாலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை, அகல இரயில் பாதை மற்றும் இருப்பு பாதை வழித்தடங்கள், இன்றைக்கு நீட் தேர்வு மாணவி அனிதாவின் தற்கொலை வரையுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு எதிராகி கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பு எதிர்காலத்தில் பெருங்கேடை விளைவிக்கும். நமக்கு உரிமைகள் இருந்தும், நமக்கான நியாயங்கள் மறுக்கப்படுகின்றன. போராடி போராடி பார்க்கின்றோம். ஆனால் விளைவுகள் யாவும் எதிர் வினைகளாக உள்ளன. அடிப்படையில் எங்கோ கோளாறு இருக்கின்றது என்று மனதில் படுகின்றது. அதை சரிசெய்து நம்முடைய உரிமைகளை வென்று மீட்டெடுக்க வேண்டுமென்ற நிலையை இதய சுத்தியோடு வியூகங்கள் வகுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய யோசனை.

      மத்தியல் ஆட்சிக்கு வருகின்ற காங்கிரசோ, பாஜகவோ, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்ளில் ஆட்சிக்கு வருவோம். ஆனால் தமிழகத்தில் வருவதற்கு சாத்தியக் கூறு இல்லை என்ற நிலையில் மூத்த அண்ணன்கள் மாதிரி நடந்து கொள்கின்றன. எவ்வளவோ விட்டுக் கொடுத்து பார்த்தாலோ நம்முடைய கோரிக்கைகள் டில்லி பாதுஷாக்களுக்கு காதில் எட்டுவதில்லை, ஒரு வேளை கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை திமுகவும், மறுமுறை காங்கிரஸும் ஆட்சி செய்திருக்குமானால், டெல்லி தமிழகத்திற்கு செவி சாய்த்திருக்குமோ என்று பிரபல பத்திரிக்கையாளர் கட்டியாலின் (Katyal) கருத்து.

எம்.ஜி.ஆர். என்ற மாய பிம்பத்தால் தமிழக மக்கள் வாக்களித்து வளர்ச்சி திட்டங்கள் இல்லாமல் கவர்ச்சித் திட்டங்களை கொண்டு மக்களை அன்றைக்கன்று திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். தொலைநோக்கு பார்வையில்லை. சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தினாலும் அதுவே போதுமானதல்ல. பல்பொடி, இலவச செருப்புகள் என்று இடைத்தரகர்கள் அரசியலில் சம்பாதிக்கும் திட்டங்கள் தான் அதிகமாக இருந்தது. தொலைநோக்கு பார்வையான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் இல்லை.

 இது நியாயமா? தவறா? என்று விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

அவர் மேலும் குறிப்பிட்டதை போல திமுக என்ற மாநிலக் கட்சியோ மற்றும் காங்கிரஸ் மாறி, மாறி ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகத்தின் நிலைமைகள் வேறாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவாகி தமிழகத்தை ஆண்டது. இது போன்ற நிகழ்வுகளை விரிவாக விவாதித்து மெய்ப்பொருள் காண வேண்டிய நிலையில் இருக்கின்றோம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் நிலையில் மேலும் நம்முடைய உரிமைகள் பாதிக்கப்படலாம். டில்லி என்ற தலைநகரை விட்டு அகல முடியாது என்பது தான் யதார்த்தம். ஆயிரம் உரத்த குரலில் நமது நியாயங்களை பேசினாலும், இனி மேல் நம்முடைய உரிமைகளை வென்றெடுக்க வியூகங்கள் வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

  ஈழத்தில் போராடி நாம் இழந்தது அதிகம். ஆகவே கடந்த கால பாடங்களை மனதில் கொண்டு நாம் எப்படி பிரச்சனைகளை அணுக வேண்டும், போராட வேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் உரிமைகளை மீட்கும் வெற்றியை பெறவே நம்முடைய கவனமும் இருக்க வேண்டும். பல்வேறு தேசிய இனங்கள்  கொண்ட இந்தியாவில் நம்முடைய அடையாளங்களை காப்பதில் புதிய வழிமுறையை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளோம்.
இது மனதில் பட்டது. சொல்ல வேண்டுமென தோன்றியது. இதில் வேறு எந்தவித நோக்கமும் கிடையாது. இதை வெளிப்படையாக விரிவாக எழுதினால் வேறு விதமான தவறான அர்த்தத்தை சொல்லிவிடுவார்கள் என்று அளந்து சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லியுள்ளேன்.

#Tamilnadu_politics
#இன்றைய_அரசியல்
#தமிழக_அரசியல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.

05-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...