Saturday, September 9, 2017

அரசியல் அதிகாரத்தில் வரம்புகள் குறித்து மாண்ட்டஸ்க்யுவின் தத்துவம்

நீட்தேர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியதாக தவறான செய்தியை பரப்பியது தொடர்பான பதிவு. கீழ்காணும் அரசியல் கோட்பாடை வாசித்தால் தெளிவான எண்ணம் உண்டாகும். 
...........

அரசியல் அதிகாரத்தில் வரம்புகள் குறித்து மாண்ட்டஸ்க்யுவின் தத்துவம்.
Montesquieu's theory, the Seperation of powers is the guideing principles for Democracy.
பிரெஞ்சு நாட்டில் 1689 ஜனவரி 18ம் நாள் பிறந்த மாண்டஸ்க்யூ தத்துவ ஞானியாக மட்டுமில்லாமல் அரசியல் அறிவியலுக்கு வித்திட்டவர். ஆட்சி மோகம் பற்றியும், அதிகாரங்களுடைய பிரிவினைகள் குறித்தும் உலகத்துக்கு முதன்முதலாக எடுத்துச் சொன்னவர் தான் மாண்டஸ்க்யூ.
ஜனநாயகம் பூஞ்சோலையாகச் செழிக்க வேண்டுமென்றால் ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் நீதித்துறை ஆகியவை சுதந்திரமாக தங்களுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு மற்ற துறைகள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் நேர்மையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படைக் கோட்பாடு.
இந்த கோட்பாட்டில் என்ன முக்கியம் உள்ளதென்று பலர் நினைக்கலாம். அரசியல் அடிப்படைகளும், வரையறைகளும் இல்லாத நேரத்தில் நிலைகளைச் சமன்செய்து வழிவகுப்பது சாதாரண செய்தி அல்ல. அந்த வகையில் அரசியல் என்பது ஒரு விஞ்ஞானம் தான்.
ஒரு கட்டுக்குள் மக்களுக்காக மக்களால் நிறுவப்பட்டு மக்களாட்சியாக அமைய வேண்டுமென்று மாபெரும் தத்துவங்களை நிலைநாட்டி நாட்டில் மாண்புகளைப் பெருகச் செய்து இன்றைக்கு இந்த அளவுக்கு அரசியல் அமைப்புகள் தோன்றியிருக்கிறது என்றால் அதற்கு மாண்டஸ்க்யூவின் கொள்கைகளும் கோட்பாடுகளும் தான் அடிப்படையாக இருந்தது.
இன்றைக்கு ஆட்சிக்கு வருகிறவர்கள் எல்லாம் அரசியல் அறிவு எதுவுமில்லாமலே பதவிக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு பொறியல் துறையில் கற்றவர்தான் பொறியாளராக முடியும், மருத்துவம் படித்தவர் தான் மருத்துவராக முடியும், ஆசிரியப் பயிற்சிப்பணி முடித்திருந்தால் தான் ஆசிரியராக முடியும்.
ஆனால் அரசியலில் மாண்டஸ்க்யூவைப் பற்றி தெரிய வேண்டியதில்லை. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், மாக்யவல்லி பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தேவை இல்லை, கிரேக்க இத்தாலிய, எகிப்திய பண்டைய அரசுகள் பற்றியெல்லாம் எந்த அரசியல் களத்திலிருப்பவ்ர்களுக்குத் தெரியுமென்று நமக்குத் தெரியாது.
பிரிட்டிஷ் வரலாற்றில் நடந்த மேக்னகர்ட்டா வரலாறு, பிரிட்டிஷ் நாடாளுமன்ற வரலாறு, பில் ஆஃப் ரைட்ஸ் என்பதெல்லாம் இன்றைய அரசியலின் அடிப்படைக் கூறுகள். இன்னும் சொல்லப்போனால் நமது உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடவோலை முறை வரலாறாவது நமது அரசியலாளர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம்.
இப்படியான அரசியல் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்குத் தேவையில்லை. பசை போட்ட வெள்ளை உடைகளும், பெரிய கார்களும் இருந்தால் மட்டுமே அரசியல்வாதியாவதற்கு போதுமானது. அதுவே அரசியலுக்குத் தேவையான உபகரணங்களும் அடையாளங்களுமாகிவிட்டன. இதனை யார் சரி செய்யவேண்டும்? மக்கள் தானே சரி செய்யவேண்டும்.
பிரெஞ்சுப் புரட்சி எப்படி எழுந்தது? பசியாலும் பட்டினியாலும் வாடிய மக்கள் “ரொட்டித்துண்டு உண்ணக் கொடுங்கள்” என்று கேட்டபொழுது, அந்நாட்டு அரசி மேரி ஆண்டாய்நெட் மக்களைப் பரிகாசித்து, “கேக் வாங்கிச் சாப்பிடுங்கள்” என்று சொன்னதனால் தானே அந்த புரட்சி எழுந்தது. அதனால் தானே வால்டேரும் ரூஸோவும் தங்கள் எழுத்துகளால் மக்களை பக்குவப் படுத்தினார்கள்.

அரசியல் நேர்மையற்று போய்விட்டால் கண்ணகி நீதிகேட்டு எரித்த மதுரையின் கொடுமை தானே நடக்கும். இப்படியான வரலாறுகள் எல்லாம் எத்தனை அரசியல் பொறுப்பாளர்களுக்குத் தெரியும்.
Image may contain: one or more people and close-up
மாண்டஸ்க்யூவைப் பற்றிச் சொன்னபோது ஒரு நண்பர் என்னிடம், “உங்களுக்கு வேறு வேலை இல்லையா. ஆளை விடுங்கள், எனக்கு மாண்டஸ்க்யூவைத் தெரியாது, மெக் டொனால்ட் தான் தெரியும்” என்றார். இதை எங்கே சொல்லி முட்டிக்கொள்ள.

மாண்டஸ்க்யூ கோட்பாடுகள் குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு மேலாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவருடைய தத்துவங்களையும், படைப்புகளையும் இன்றைக்கும் உலகளவில் ஆயிரக்கணக்கானோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மாண்டஸ்க்யூவின் மற்றொரு படைப்பான “தி ஸ்பிரிட் ஆஃப் லா” நூலினை வாசித்தாலே போதும் அரசியலின் தன்மையும் புரிதலும் முழுமையாக நமக்குத் தெரிந்துவிடும்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
09-09-2017

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...