Monday, September 11, 2017

'மணல் கொள்ளை...

இன்றைய (11-09-2017) தினத் தந்தி நாளிதழில் 
  நீங்கா ஆர்வம்' என்ற தலைப்பில் இயற்கையின் அருட்கொடையான மணலை எப்படியெல்லாம் சூறையாடப்படுகின்றது குறித்த எனது  பத்தி வெளியாகி உள்ளது.
.................
மணல் கொள்ளையில் நீங்கா ஆர்வம்…
-------------------------------------
  -வழக்கறிஞர்                                       கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மணல் குவாரிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குழப்பமான நிலையே நிலவுகின்றது. மணல் வியாபாரத்தை முறைப்படுத்த 2002ல் சென்னை, திருச்சி, மதுரை என்ற மூன்று மண்டலங்களாக பிரித்து 239 குவாரிகள் அரசு அனுமதி அறித்த்து. இதில் 95 குவாரிகள் மட்டும் நடைமுறையில் இருந்தது. 2011ல் 38 குவாரிகளாக குறைந்து கடந்த 2017 துவக்கத்தில் 24, 15, 7 என்ற எண்ணிக்கைகளில் குறைந்தன. தமிழக அரசு மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்தார். இதற்குப் பிறகும் மணல் விற்பனையை முறைப்படுத்தாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஒரு லாரியில் 3 யூனிட் மண்ல் வாங்குவதற்கு அரசு நிர்ணயித்த விலை சுமார்  ரூ.950/-. மணலை ஏற்றுவதற்கு இடைப்பட்ட ஒப்பந்த்தாரர்களுக்கு ரூ. 220/- வழங்கக்ப்பட்டது. சேகர் ரெட்டி இத்தொழிலில் கொடி கட்டி பறந்த போது கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்ததாக தகவல்கள் உண்டு. ஆனால் அரசாங்கத்திற்கு மட்டும் ஏன் இந்த தொகைகள் கிடைக்கவில்லை என்பது தான் நமது வினா.
வருடத்திற்கு அரசுக்கு ரூ. 14,000 கோடி, வருடத்திற்கு சராசரியாக குறைந்தபட்சம் கிடைத்திருக்கவேண்டும். ஏன் குறைந்த்தென்று பார்த்தால் மணல் ஏற்றும் லாரிகளில் 3 யூனிட்டிற்கு பதிலாக 5 (அ) 6 யூனிட்கள் ஏற்றி அரசுக்கு சேரவேண்டிய வருமானத்தை கொள்ளையடித்தனர். ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1 லட்சம் லாரிகளில் மண் அள்ளப்படுகிறது. ஆனால் இதைப்பாதியாக கணக்கு காட்டி விடுகின்றனர். இதனால் எவ்வளவு நஷ்டம் அரசிற்கு ஏற்பட்டிருக்கும்? இதை சரியாக அரசே நேர்மையாக பராமரித்திருந்தால் ஆண்டுக்கு சுமார் 35,000 கோடி கிடைத்திருக்கும். மணலும் கன்னாபின்னாவாக இயற்கையின் சூழலிற்கு மாறாக அள்ளியிருக்க முடியாது.
நாமக்கல், வாலாஜா, பண்ருட்டி, விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டம் செல்லுக்குடி, அழியாநிலை, சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்காடி, ராமநாதபுரம் மாவட்டம் ஒருவானேந்தல், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வைப்பாறு போன்ற குவாரிகளும் மூடப்பட்டன. இதனால் மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு, அதிகமாக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கொல்லாம் காரணம் என்னவென்றால், சரியான மணல் மேலாண்மை இல்லாதது மட்டுமல்ல நேர்மையாக மணல் விற்பனை தொழில் நடைபெறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் மணல் விற்பனை குறித்து வெளிப்படைத் தன்மையோடு அன்றாடம் இணையதளத்தில் மண் இருப்பு எவ்வளவு? அதன் விலை, எத்தனை லாரிகளில் அள்ளப்பட்டன என்று அன்றாடம் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகள் தமிழகம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆல் இந்தியா அனுமதி பெற்ற லாரிகளுக்கு மணல் அள்ள விடக்கூடாது. ஏனெனில் இவர்கள் அண்டை மாநிலங்களுக்கும், இலட்சத்தீவு, மினிக்காய் தீவு முதலான பகுதிகளுக்கு கடத்திவிடுகின்றனர்.
எந்த வரைமுறையும் இல்லாமல் அதிக மணல் அள்ளுவது, சுற்றுச் சூழலையும் பாதிக்கும் என மனோஜ் மிஸ்ரா எனும் ஆய்வாளர் குறிப்பிட்டார். திட்டமிடாமல் தொடர்ச்சியாக, ஆற்றிலிருந்து மணலை எடுத்தால், அங்கு வாழும் நுண்ணிய உயிரினங்கள் அழிந்து போகும். இந்த வகை உயிரினங்கள் கண்ணுக்கு தெரியாத அளவில் இருந்தாலும், மண் தரத்திற்கும், மண் வளத்திற்கும் ஆதாரமாக இருப்பவை. மணலை ஆழமாக தோண்டி எடுக்கிற போது அந்த பணியுடன் உயிரினங்கள் அழிவும் சேர்ந்தே நடக்கிறது. பணமே குறியாக இருக்கும் மணல் கொள்ளையர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பொதுமக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்.

சாரை சாரையாக லாரிகளில் மணலை கொள்ளையடிப்பதை பார்த்தால் வேதனையும், ரணமும்   ஏற்படுகிறது  .தண்ணீரில் உள்ள மணலை கூட விடாமல்  நீர்  சொட்ட சொட்ட அள்ளும் போது எந்த நியாயமும்  நேர்மையும் கிடையாது. அள்ளிய இந்த திருட்டு மணலை  மாலத்தீவு, கேரளம்,  கர்நாடகம், ஆந்திரத்திற்கு  கடத்துகின்றனர்.

அசைவ உணவு விடுதில் ஈரல், பாயா, லெக் பீஸ் என விலை பட்டியல் இருப்பதை போல கேரளத்தில் காவிரி மணல், வைப்பாறு மணல், தாமிரபரணி மணல், பாலாறு மணல், அமராவதி மணல் என பட்டியல் போட்டு விலைக்கு விற்கும் கேவலமான நிலைக்கு தள்ளியவர்களை சட்டமும் அரசும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.

இயற்கை அருட்கொடையாக வழங்கிய ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் படிமமாக உருவாகும் மணலை கபளீகரம் செய்வது தாயை பழிப்பது போல. பிறகெப்படி நீராதாரங்கள் பாதுகாக்கப்படும். நிலத்தின் நீரும் குறைந்து விடும். நல்ல தண்ணீர் கூட சவறு தண்ணீராக மாறிவிடும். மணல் கொள்ளை போவதால் இவ்வளவு கேடுகள் ஏற்படும். இதை மனித சமுதாயம் சிந்திக்க வேண்டாமா?

ஏற்கனவே ஐ.நா. அறிக்கையில் தமிழகத்தில்  நீராதாரம் குறைந்து, நிலத்தடி நீர் இல்லாமல் போய் வறண்ட பூமி ஆகிவிடும் என்ற எச்சரிக்க்கைகளையும் நாம் பொருட்படுத்துவதும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் மணல் கொள்ளை தான்.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...