Monday, September 25, 2017

கிராமத்து.....! உலக அரசியல் முதல் .....!!

கிராமத்து வெள்ளந்தி விவசாயிகளும், படித்தவர்களும் கிராமத்தில் செல்லும்போது எனது வீட்டின் முற்றத்தில் இப்படி உட்கார்ந்து பல விடயங்களை பேசுவர். வாடிக்கையாக நடக்கும் இந்த அறிவிக்கப்டாத கலாந்தாய்வுக் கூட்டத்தை நான் அவ்வப்போது வேடிக்கை பார்த்தது உண்டு . எனக்கு மங்கலான நினைவுகள். 1950 காலகட்டங்களில் இருந்து இந்த மாதிரி கூடிப்பேசுவது உண்டு. அப்போது தினமணியும், தினத்தந்தியும் தினமலரும் (நெல்லை மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கும்). இந்த பத்திரிக்கைகளை படித்து கொண்டு உலக விஷயங்களில் முதல் தமிழ்நாடு பிரச்சனைகள் குறித்தான செய்திகள் வரை கிராமத்தில்யுள்ள ஆலமரத்தடியில் வாசகசாலையில் பேசுவது வாடிக்கை. இவர்களின் மூலம் எங்கள் ஆலமரத்தடிக்கு வராத உலகத் தலைவர்களே இல்லை. இந்த வெள்ளந்திகளின் பேச்சில் வெள்ளை மாளிகை அரசியலும் தோற்றுப் போகும்.
அமெரிக்க அதிபராக கென்னடி தேர்தலில் நின்றபோது,சோவியத் அதிபராக இருந்த குர்சேவை பற்றியும், மாசேதுங்கை பற்றியும், எலிசபெத் ராணியை பற்றியும், எகிப்து நாசரை பற்றியும், இந்தோனேசிய சுகர்னோவை பற்றியும், டிட்டோ போன்ற பல வெளிநாட்டு தலைவர்களை குறித்த செய்திகளை எல்லாம் தங்களுக்கு தெரிந்தவாறு பேசியதெல்லாம் அப்போது கேட்டுள்ளேன். உலகத் தலைவர்களை கைகுலுக்காமல் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் இந்த வெள்ளந்திகள்.
அதே போல, இந்திய வடநாட்டு தலைவர்களான நேரு, ஆச்சார்யா கிருபளானி, ராம் மனோகர் லோகியா, சேக் அப்துல்லா, பட்நாயக், நம்பூதிரிப்பாடு, சியாமா பிரசாத் முகர்ஜி எனக் காங்கிரஸ் தலைவர்களும் முதல் ஜனசங்கத் தலைவர்கள் வரை தமிழகத்தில் கூட பிரஜா சோசலிஸ்ட், ஆர்.எஸ்.பி, சுதந்திரா போன்ற கட்சிகளும் அன்றைக்கு இருந்தது. ஆனால் இப்போது அந்த கட்சிகள் இல்லை.
தமிழகத்தின் ஓமந்தூராரில் இருந்து காமராஜர் வரை, பெரியார், அண்ணா, கலைஞர்,கம்யூனிஸ்ட் பி. ராமமூர்த்தியிருந்து எங்கள் தொகுதியின் சோ. அழகிரிசாமி வரை, சுதந்திரா கட்சியின் கோவை. ஜி.கே. சுந்தரம் முதல் ஹெச்.வி. ஹண்டே வரை அவர்களுடைய செயல்பாடுகளை கிராமத்தில் கிடைக்கின்ற பத்திரிக்கைகளை வைத்து தங்களுக்கு தெரிந்தவாறு தற்குறிப்பு ஏற்றி பேசியதை எல்லாம் பற்றி நினைக்கும்போது " பரவாயில்லையே, இந்தளவுக்கு நமது கிராமத்து மக்கள் அக்காலத்தினை அறிந்து பேசியது இப்போது நினைக்கும் போதுசரியாகஅப்போதேபேசினார்களே’ என்று தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம் மட்டும் தான் உண்டு. உயர்நிலைப் பள்ளிக்கு அருகாமையில் உள்ள குருவிகுளம், திருவேங்கடம் செல்ல வேண்டும். கல்லூரி என்றால் திருநெல்வேலி, மதுரை தான் செல்ல வேண்டும். அதன் பிறகு கோவில்பட்டி மற்றும் சிவகாசியில் கல்லூரி வந்தது. மருத்துவக் கல்லூரி என்றால் மதுரைக்கு தான் படிக்கச் செல்ல வேண்டும். அதன்பிறகு 1960களில் திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி வந்தது. பொறியியல் படிப்பு படிக்க வேண்டுமென்றால் கோவைக்கும், மதுரை தியாகராஜர் கல்லூரிக்கு தான் செல்ல வேண்டும். பல் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சென்னைக்கு தான் வரவேண்டும். ஆனால் எங்களுடைய பஞ்சாயத்து யூனியன் மூலம் 1955லேயே எங்களுக்கு மின்சார வசதியும், தெருவிளக்கும் வந்துவிட்டது. அதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அப்போது மின்சார வசதி கூட கிடையாது.
விவசாயப் போராட்டத்தில் நாராயணசாமி நாயுடுவுக்கு சரணாலயமாக திகழ்ந்தது. அரசு துப்பாக்கி சூட்டில் 8 விவசாயிகள் டிச 1980ல் இறந்தனர்.காமராஜர், ஓமந்தூரார், சர்வோதயத் தலைவர்கள் என பல தலைவர்கள் வந்து சென்ற இடம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1966 காலக்கட்டங்களில் சி.பி.சிற்றரசும்,அதன்பின்னர்பேராசிரியரும் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் என் நினைவுக்கு வருகிறது.



குருஞ்சாக்குளத்தில் வீடுகள் 400 தான் இருக்கும். இப்படியான கிராமத்தில் விவசாயத் தொழில் தான் பிரதானம். இப்படியாக நான் கிராமத்துக்கு சென்றால் இப்படி வந்து கூடிப் பேசுவது உண்டு. அவர்களிடம் கிராமத்தினை பற்றியும், நாட்டுப்புறத் தரவுகள் முதல் கிராம சமையல் வரை தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த பிறந்த மண் வாசனை மணக்கும்.
இப்படியான கிராமத்து வாழ்க்கை இது.
#கிராமத்து_வாழ்க்கை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-09-2017

No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...