மத்திய அரசின் அரசியல் சாசன அதிகாரம்பெற்ற நிதிக் குழு (Finance Commission) 5 வருடத்திற்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்று கருத்துக்களை அறிந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தான பரிந்துரைகளை வழங்குகின்றது. இந்த குழு மட்டுமே அரசியல் சாசனத்தின் அங்கீகாரம் பெற்றது. இதற்கு முன்னால் இருந்த சூப்பர் கேபினட் என்றழைக்கப்பட்ட திட்டக் குழுவோ, இன்றைய நிதி ஆயோக் இந்திய அரசியல் சாசன அங்கீகாரம் பெறாதவை. அதை குறித்து இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிகாரங்களை மாநிலங்கள் மீது செலுத்துகின்றது.
அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக் குழுவின் பத்தாவது குழுவில் இருந்தே மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநிலங்களை நிதி சரியாக ஒதுக்காமல் மாற்றாந்தாய் போக்கில் தான் நடந்து கொண்டுள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அதிகமான நிதியை ஒதுக்குவது தான் சரியான செயலாகும். அதற்கு மாற்றாக நிதி ஆணையமும், மத்திய அரசும் நடந்து கொண்டால் அது ஏற்புடையதல்ல.
இந்த வாடிக்கை 1995 - 2000 / கே.சி.பந்த், 2000 - 2005 / ஏ.எம். குஸ்ரோ, 2005 - 2010 / சி. ரெங்கராஜன், 2010 - 2015 / டாக்டர். விஜய். எல். கேல்கர், 2015 - 2020 / ஒய்.வீ.ரெட்டி, 2020 - 2025 / என்.கே. சிங் வரை அமைந்த குழுக்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் என்ற ஒரே சாதனைக்காக நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டு வருகின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இதே நிலவரம். மாநிலங்களுக்கு செஸ், சர்சார்ஜ் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் சரியாக பங்களிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தையும் சமமாக நடத்தி நிதிகளை பாரபட்சமில்லாமல் ஒதுக்க வேண்டும்.
கே.சி.பந்த், ஏ.எம். குஸ்ரோ தலைமையில் அமைந்த 10, 11வது நிதிக்குழுவில் இருந்தே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது. உத்தரப்பிரதேசம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் நிதி ஒதுக்கீட்டை அதிகமாக பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அப்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் குறைவான நிதி ஒதுக்கீட்டை பெற்றதாக அன்றைய முதல்வர்களான கலைஞர், சந்திரபாபு நாயுடு போன்றோர் இது குறித்து கண்டனங்களை எழுப்பியது உண்டு. அதே போல தொடர்ந்து தமிழகம் நிதி ஒதுக்கீட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருகிறது. 13, 14 வது நிதிக் குழு பரிந்துரையால் 50% கிடைக்கவில்லை. 14 வது நிதிக்குழுவினால் 6,000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 13 வது நிதிக் குழுவின் மூலம் 70% நிதி நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை. இவையாவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கடமையைச் செய்ததால் கிடைத்த தண்டனையாகும். தமிழகம் வருவாய் மூலம் நிதித் திரட்டித் தரும் முன்னிலை மாநிலங்களில் ஒன்று.
பிரதமர் மோடியின் தற்போதைய கோட்பாடான கூட்டுறவு கூட்டாட்சி என்ற நிலையில் இப்படி மாநில உரிமைகளை பறிப்பதில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு சாவு மணி அடிப்பதை போல் தான். பன்மையில் ஒருமை, சமஷ்டி அமைப்பு என்ற தத்துவங்களை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து தவறி வருவது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல.
#நிதிக்_குழு
#கூட்டுறவு_கூட்டாட்சி
#cooperative_fedaralism
#finance_commission
samasty
federal setup
No comments:
Post a Comment