“இப்பொழுதும் அது அப்படித்தான் இருக்கிறது என்று நிச்சயம்
சொல்ல மாட்டேன். ஆயிரம் கோடிகள் ஊழல் அரசியல்வாதிகளைப் பெறுத்தவரை அரசியல்
அவர்களுள்கு வாழ்க்கையாகவும் பெருவணிகமாகவும் இருக்கிறது. சிறைகளுக்கும்
விசாரணைகளுக்கும் மகிழ்ச்சியாகப் போய் வருகிறார்கள். பல தலைமுறைகளுக்கு
வேண்டிய சொத்துக்களை சேர்த்துவிட்டு நிம்மதியாக காய்களை நகர்த்தி கொத்தாட்டம் ஆடுகிறார்கள். கைது
செய்யப்படுகிறார்கள். பிறகு விடுதலையாகி வெடிகள் முழங்க கைகளை ஆட்டியவாறு
வெளியே வருகிறார்கள். மக்களுக்கும் தேசத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும்
என்னும் நல்லெண்ண அரசியல் ஆட்களும் இல்லாமல் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை
அரசியல், ஒரு பகுதி நேர வேலை போல இயன்றவரை செய்கிறார்கள். அரசு
இயங்கும் விதத்திலும் மக்களின் வாழ்க்கை முறையிலும், பெரும் மாற்றங்களைக்
கொண்டு வர நினைக்கும் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அரசியல், ஒரு சிதைக்கப்பட்ட
கருத்தாக இருக்கிறது. கட்சியின் கொள்கை விளக்க அறிக்கைகளையும் திட்ட வரைவுகளையும்
தேர்தல் வாக்குறுதிகளையும் எவருமே குறை கூற முடியாது. ஆனால் மக்களாட்சி
முறையை ஏற்று தேர்தலில் நிற்கும் இவர்கள், மக்களால் நிராகரிக்கப்படும்
போது, தலைவர்களில் இருந்து கீழ்மட்டம் வரை குழம்பி நிலைகுலைந்து
போகிறார்கள். முற்றிலும் ஊழல்மயமாகிவிட்ட சூழலில், மக்கள், இருபது
ரூபாய் டோக்கன்களைப் பெற்று நஞ்சருந்தும் விழவில் பங்கு கொள்கிறார்கள். அவர்கள்
எடுத்துக்கொண்டது போக ஏதா ஒரு நாலு காசு நமக்கும் கிடைக்காதா என பருவாரியான மக்களும்
நினைக்கிறார்களோ? ஒரு குறுகிய சாலையில் பயணம் கிளம்பும் ஒரு ஜனத்திரளில், முண்டியடித்து
முன்னேறவும் பாதுகாப்பான வாழ்நிலையைக் கைப்பற்றவும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு
அணியும், ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு
கட்சியும் முயற்சிக்கிறார்கள். இந்த ஜனத்திரளுக்குள் எங்கோ நசுங்கிக் கிடக்கும் கவிஞனையும்
அதே சிதைக்கப்பட்ட மன நிலையே வரவேற்கிறது. ஆகவே அந்தக்
குறுகிய சாலையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு புற்கள் நடனமாடுவதைக் காணக் கிளம்பிவிடுகிறான். அய்யோ, மாமரத்துக்குள்ளே
கிளி என அரசு பாரில் உட்கார்ந்து கதறுகிறான். இருபத்தோராம்
நூற்றாண்டில், மீள்வரையறை செய்யப்பட வேண்டிய ஒன்றாக அரசியல் மாறிவிட்டது.”
----------------------
“மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு சிறுமழை நாளில் பேருந்திலோ
காரிலோ பயணம் செய்து பாருங்கள். கடலாடியிலிருந்து கருப்பட்டிச் சத்திரம், மாரியூர்
வழியாக வாலிநோக்கம் சென்று பாருங்கள். இந்த பூமி எவ்வளவு அழகானது என்று தெரியும். கடற்கரையில்
போய் ஏலத்துக்கு வாங்கிவந்த வாவல் மீன் குழம்பை தூத்துக்குடியில் சாப்பிட்டுப் பாருங்கள். பன்னாலால்
கோஷையோ, அம்ஜத் அலி கானையோ, சஞ்சய் சுப்ரமண்யத்தின்
தமிழ்ப் பாடல்களையோ கேட்டுப் பாருங்கள். நேற்று எனது ஆட்டோவை மறித்து நின்ற சிற்றுருப்பெண்
பாகம்பிரியாளின் உருண்ட கண்கள். அனிதா ரத்னத்தின் ஒரே ஒரு நாட்டியம். கிருஷ்ணாபுரம்-தென்காசி-திருவில்லிபுத்தூர்-தாடிக்கொம்பு
சிற்பங்கள், குளுமையின் காற்றை மட்டுமே வீசும் புங்கமரக் கண்மாய்க்
கரை… இன்னும் இன்னும். இவ்வளவும்
நிரம்பிய பூமியில் இருக்கத்தானே விரும்புவான் மனிதன்?”
- கவிஞர் சமயவேல் (செம்மலர், பிப். 2018)
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-02-2018
No comments:
Post a Comment