நேற்றைக்கு, கோவையில் ஒரு தொழிலதிபரை சந்தித்த போது, ஜுனியர் விகடனில் (18/02/2018) வெளிவந்த ,"எடப்பாடி அமைச்சராக இருந்த காலத்தில், அவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான். பம்மிப் பதுங்கி, பணிந்து உடலை வளைப்பதில் ஓ.பி.எஸ்ஸையே 'யாரு சாமி இவரு?' எனப் பார்க்கவைத்த அப்பாவி" என்ற வரிகளை சுட்டிக்காட்டி; அவர் மேலும் கூறியது, உழைப்பும், நீண்ட கால களப்பணிகளும், நேர்மையும், ஆற்றலும் தேவையில்லை. வாய்ப்பிருந்தால் தெருவில் போகும் சாமானியன் கூட எந்தவித அர்ப்பணிப்பும், தியாகமும் இல்லாமல் எந்த பணியும் இல்லாமலே முதல்வராகலாம் என்று அவர் குறிப்பிட்டது வேதனையாக இருந்தது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றோர்கள் எல்லாம் 1998க்கு பிறகு தான் அரசியல் களத்தில் வெளிவரத் துவங்கி இன்றைக்கு தகுதிக்கு மேலான அங்கீகாரம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவும் 1983இல் அரசியலுக்கு வந்து 1991இல் முதல்வராகிவிட்டார். தமிழகத்தில் இடஒதுக்கீட்டை முதன்முதலாக அறிவித்து, தமிழை பயிற்சி மொழியாக கொண்டு வந்து, தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய விவசாய முதல்வர் ஓமந்தூரார், ராஜாஜி, நேர்மையின் அடையாளம் பி.எஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களெல்லாம் அளப்பரிய தியாகங்கள் செய்து கட்சித் தலைவர், முதல்வர் போன்ற பெறுப்புகளுக்கு வந்தார்கள்.
வ.உ.சி., சேலம் வரதராஜு நாயுடு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவானந்தம், காயிதே மில்லத், கக்கன், கே.டி.கே. தங்கமணி, இரா.செழியன் இன்றும் நம்மோடு வாழும் நல்லகண்ணு, பழ. நெடுமாறன், முகம்மது இஸ்மாயில் போன்ற தலைவர்கள் ஆற்றிய பணிகளில் எல்லாம் இந்த பழனிசாமியோ, ஓ. பன்னீர்செல்வமோ, தினகரனோ ஆற்றியுள்ளார்களா என்று மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுகவினர் பலர் 40, 50 ஆண்டுகள் களப்பணி செய்தும், மக்களிடம் சென்றும், தேர்தலில் தங்களுடைய பணிகளை சொல்லி தான் வாக்குகளை சேகரிக்கின்றார்கள். இதில் எது நேர்மையான நல்ல அரசியல் என்பதை நாடு உணரவில்லையே என்பது வேதனையான விடயம்.
சில ஊடகங்களும், செய்தித்தாள்களும் ஜாதி ரீதியாக சில முக்கியத்துவங்களை தருவதும் சமீப காலங்களில் வளர்ந்து வருகிறது. இதெல்லாம் நல்ல போக்கா என்பது தெரியவில்லை.
மேலும் அவர் குறிப்பிடும்போது, தமிழகத்தில் ஒரு முறை மாநிலக்கட்சியும், மறுமுறை தேசியக் கட்சியும் மாறி மாறி ஆண்டிருந்தால் நமது மாநில உரிமைகளான நதிநீர் பிரச்சனைகள், திட்டங்கள் பறிபோயிருக்காதே என்று கூறினார். அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகத் தான் என் மனதில் பட்டது. என்ன செய்ய?
எம்.ஜி.ஆர்., அதிமுக என்று உருவாக்கி இன்றைக்கு இந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சியும், அதில் பொறுப்பில் இருப்பவர்களையும் பார்த்துக் கொண்டுள்ளோம் என்று கூறியதில் சில உள்ளார்ந்த உண்மைகள் உள்ளன.
இன்றைக்கு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, தமிழகத்தின் நதிநீர்ப் பிரச்சனைகளான குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்ட அடவிநயினாறு, கேரள அச்சன்கோவில் - பம்பை - தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பு, செண்பகவல்லி அணைப் பிரச்சனை, முல்லை - பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புண்ணம்பழா, பம்பாறு, கேரளத்தோடும் தமிழக்த்துக்குண்டான நதிநீர்ச் சிக்கல்கள், கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்குமான காவிரி, தென்பெண்ணை, ஒக்கேனக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குளங்களுக்கு வரும் மழைநீரை தடுப்பது, ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி போன்ற பிரச்சனைகள் குறித்தெல்லாம் முற்றிலும் தெரியாத நிலை. புரிந்து கொள்ள கூட முயற்சிகள் இவர்களிடம் இல்லை. அது மட்டுமா, சேலம் இரும்பாலை பிரச்சனை, நெய்வேலி நிலக்கரி சுரங்க பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டிய எஞ்சிய அகல இரயில் பாதைகள் குறித்து, ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலை, கடலூர் மற்றும் நாகை துறைமுகப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு, சேது கால்வாய் திட்டம், விமான நிலைய விரிவாக்கத் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை - கிழக்குத் தொடர்ச்சி மலை குறித்தான சுற்றுச் சூழல் பிரச்சனை, தீராத விவசாயப் பிரச்சனைகள் எனப் பல பிரச்சனைகளை பற்றி அறியாத, தெரியாதவர்களெல்லாம் பொறுப்புக்கு வந்தால் தமிழகம் எப்படி மேலோங்கும். ஓட்டுக்கு காசை பழக்கப்படுத்திவிட்டு, மக்களிடம் வியாபார அரசியல் நடத்தும் இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்.
இது விவாதத்திற்குரிய பொருளாகத்தான் கருத வேண்டும்.
#தமிழக_அரசியல்
#தமிழ்நாடு
#TN_Politics
#Tamil_Nadu
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-02-2018
No comments:
Post a Comment