Tuesday, February 27, 2018

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும். துயரமும், இறுக்கமும் அவரின் வாழ்க்கையின் நடைமுறையாக தான் இருந்துள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தன்னிலையை மறக்க, அக, புற நிலையில் மதுவை நாடி இருக்கலாம். மும்பை வாழ்க்கையில் இது சாதாரண விசயமாகும். ஒரு திரை ஆளுமைக்கு இப்படியான ஒரு துயரமான முடிவா?
அறந்தை நாராயணன் அவர்கள், “குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்”என்ற தன்னுடைய நூலில் தமிழ் திரையுலக ஆளுமைகள் குடிப்பழக்கத்தால் பல துயரங்களைச் சந்தித்து, மன அமைதி இழந்து வாழ்வைத் தொலைத்த கதைகளைச் சொல்லியுள்ளார். வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதையுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளை பற்றிய நூல். எத்தனையோ அரிய, பெரிய கலைஞர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் மது அருந்தி, உடல் வருந்தி இறந்து போயினர். இன்றைக்கும் திரை வரலாற்றில் பி.எஸ்.வீரப்பா, வி.எஸ்.ராகவன். எம்.என்.நம்பியார், இன்றைய கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் போன்ற ஆளுமைகள் மீது இந்த கொடுமைகளின் வாசமே படவில்லை. நடிகையர் திலகம் சாவித்திரி, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற ஆளுமைகள் மதுவுக்கு பலியாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்த நிகழ்வுகளை எல்லாம் தமிழகம் கண்டது. அறந்தை நாராயணன் இந்த நூலில் பதிவுச் செய்த சம்பவங்களை எல்லாம் படிக்கும் போது என்ன வாழ்க்கை என்று தோன்றினாலும், பிறந்த வாழ்க்கையை இயன்றளவு மன நிம்மதியோடு வாழக் கற்றுக் கொண்டால் எந்த துயரமும், ரணமும் நம்மைத் தீண்டாது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோ மகத்தான ஆளுமைகளை மதுக் கோப்பையிடம் நாம் பறி கொடுத்திருக்கிறோம். திரையுலகம் மட்டுமல்ல, மானிட சமுதாயமே மதுவை நாடாமல் தங்கள் வாழ்க்கை தவத்தை நெறிப்படுத்திக் கொண்டால் நாட்டுக்கு நல்லது. #தமிழ்த்_திரையுலகம் #குடிப்பழக்கம் #அறந்தை_நாராயணன் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ். இராதாகிருஷ்ணன். 27-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...