Thursday, February 15, 2018

நதிநீர் இணைப்பும், பிரதமர் அலுவலகமும்...

நேற்றைய (14/02/2018) தினமலர்டீ கடை பெஞ்ச்பகுதியில், நாட்டின் நதிகளை தேசியமயமாக்கி கங்கை கிருஷ்ணா காவிரி வைகை –தாமிரபரணி - குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் எனது வழக்கில் தரப்பட்ட தீர்ப்பைக் குறித்தும், இது குறித்தான என்னுடைய மனுக்களை பிரதமர் அலுவலகம் வாங்கிக்கொண்டு சென்றதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதை குறித்து பல தரப்பு நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டறிந்தும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். என்னை சார்ந்தோர்களுக்கே இது குறித்து விரிவாக தெரியவில்லை. பலரும் என்னை தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து நான் பலமுறை எழுதியிருந்தும் இப்போது தான் வெளியுலகுக்கு தெரிகிறது.


இது மட்டுமா, விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றேன்.
தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு,  இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.
கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதற்கான சுத்திகரிப்பு பணிகளை செய்ய வேண்டியும் அது வரை அந்த ஆலையினை மூட வேண்டி 1983ஆம் தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் 1983 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சிகளில் இரண்டு முறை இந்த ஆலையை தனியாருக்கு விற்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதை தடுக்க அப்பகுதி மக்களை திரட்டி அதை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுத்தவன் அடியேன்.

காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளாக இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றேன். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதன்முதலில் வழக்கு தொடர்ந்தவனே அடியேன் தான். அணு உலை தமிழகத்திற்கு கூடாது என்றும், சுற்றுச் சூழல் பாதிப்பு முதல் மீன் வளம் வரை அனைத்தும் நாசமடையும் என்று பல்வேறு அமைப்பினரைத் திரட்டி முதன்முதலில் போராட்டம் நடத்தியன் அடியேன் தான்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு மற்றும் அவர் தொடர்பான ஏனைய பல வழக்குகளிலும் வழக்கறிஞராக எதிர்கொண்டவன் அடியேன்தான். ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட போது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை அவசர வழக்காக சிறப்பு அனுமதி பெற்று நடத்தினேன். மேலும் மீனம்பாக்கம் விமான நிலைய தாக்குதல் சதிவழக்கு என ஈழப்போராளிகளின் வழக்குகள். இவையெல்லாம் தற்போது ஈழத்தை பற்றி பேசுபவர்களுக்கு தெரியுமா?
நான் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை 1983ஆம் ஆண்டு தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது.
சமூக அக்கறையுடன் விவசாயம், சுற்றுச்சூழல், மனித உரிமை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக நான் தொடர்ந்த பல்வேறு ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறிலும் எடுத்துக் கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள் ஏராளம். தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கு எல்லாம் குரல் கொடுத்தேன்.
அது மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கியத்தை வளர்த்து வரும் வகையில் கதைச்சொல்லி என்னும் காலாண்டு இதழை இந்த பணிகளுக்கு இடையில், யாருடைய ஆதரவும், சந்தாவும் இல்லாமல் இலவச இதழாக நடத்தியும் வருகின்றேன். இப்படியான என்னுடைய களப்பணிகள் பல.
இயங்கள், இசங்கள், இஸ்ட்கள், துவாக்கள், அவர் மண், இவர் மண் என்று பேசுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உலகமயமாக்கல் என்ற இன்றைய நிலையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைக் களையவும் எதிர்காலத்தில் நீர்ப் பிரச்சனைகள், சுற்றுச் சூழல் பாதிப்பு, மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல், மனித உரிமைகள் பாதுகாப்பு என முக்கிய பிரச்சனைகளை மனித நேயத்தோடு அணுகாமல் வெட்டியாக பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் மதிக்கப்பட வேண்டிய மறைந்த தலைவர்கள், நேர்மையான அரசியலின் இருப்பிடம் வ..சி., முதன்முதலாக சமூக நீதிக் கொள்கைக்காக இடஒதுக்கீடு அளித்து தமிழ்க் களஞ்சியம், தமிழ் பயிற்றுமொழி என கொண்டு வந்து தன் பதவிக்கே ஆபத்து வந்தாலும் தூக்கியெறிந்த ஓமந்தூரார், அவர் பின் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜா, பொதுவுடைமைக் கொள்கையில் உண்மையான தலைவரான ஜீவானந்தம், ..சி, பெரியார், காமராஜரையும் பொது தளத்தில் வளர உதவிய சேலம் வரதராஜ நாயுடு, எளிமையின் சின்னம் காயிதேமில்லத், கக்கன், கே.டி.கே.தங்கமணி, விவசாயிகள் சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு போன்ற மகத்தான தலைவர்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரியுமா?.
இந்த பெருமக்கள் தங்கள் புகழுக்காக பணியாற்றவில்லை, நாட்டு நலனுக்கே பணியாற்றினார்கள். இவர்களை பின்தொடர்ந்தாலே நிம்மதியான, மகிழ்ச்சியான பொது வாழ்வு அனைவருக்கும் அமையும் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.
வெறும் அந்த இஸ்ட்டா, இந்த இஸ்ட்டா என்று தலைவர்களை குறிப்பிட்டு பேசுவதை விடுத்து அவர்களது பாணியில் செயல்பட்டாலே நேர்மையான அரசியலுக்கு வழிவகுக்கும்.

#பொதுநல_வழக்குகள்
#நதிநீர்_இணைப்பு
#river_linking
#public_interest_litigation
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.*
15-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...