நடிகை ஸ்ரீ தேவி மறைந்துவிட்டார். இவரை சிறு குழந்தை பிராயத்திலிருந்து பார்த்தது நினைவில் இருக்கிறது. இவரது தந்தையார் அய்யப்பன் சிவகாசி பக்கத்தில் மீனம்பட்டியில் பிறந்தவர். தாயார் பெயர் ராஜேஸ்வரி. இவர் ஆந்திரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சென்னையில் வாழ்ந்தவர். இவரது பெரியப்பா மீனம்பட்டி ராமசாமி ஜனதா கட்சியின் சிவகாசிதொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1976 காலகட்டங்களில் இருந்தார். இவர் காமராஜருக்கு நெருக்கமாகவும் இருந்தவர். இவர்கள் எனக்கு உறவினர்கள். இவர் தந்தை அய்யப்பன் சென்னையில் கிரிமினல் கோர்ட்டுகளில் தனது வழக்கறிஞர் பணியைமேற்கொண்டார். ஒரு பியட் கார் வைத்திருந்தார். இவரை, திருத்தங்கல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த எனது உறவினர் மறைந்த நத்தம்பட்டி சீதாராமனுடன் சென்னை வரும்போதெல்லாம் இவரை சந்தித்ததுண்டு. பிறகு, 1989 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் நான் திமுக சார்பில் போட்டியிட்ட போது, அதன் அருகேயுள்ள சிவகாசித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் 1967இல் விருதுநகரில் காமாரஜரை வென்ற பெ. சீனிவாசன் போட்டியிட்டார். அந்த காலகட்டங்களில் தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரங்களுக்கு வருவார்.
நான் அறிந்தவரையில் அப்பாவித்தனமாக யாருக்கும் பாதகம் நினைக்காமல் இருப்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உலகத்தைப் பற்றி சற்றும் அறியாதவர் என்றும் அவருடைய பெற்றோர்கள் சொல்வார்கள். ஒரு முறை அவரது வீடு அரசு ஊழியர்களால் பிரச்சனையில் இருந்தபோது கூட யாரிடமும் உதவி கேட்க யோசித்தார் என்று அவரைச் சார்ந்தவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கூட இதை கேள்விப்பட்டவுடன் நேரில் அழைத்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அதன் பின்னும் அந்த பிரச்சனை தொடர்ந்தது எனத் தகவல். சென்னையில் இருந்தவரை யாராவது பள்ளி, கோவில் கட்ட, பொது நலப் பணிகளுக்கு என்று உதவி கேட்டால் தாராளமாக உதவி செய்ததாகவும், அவரிடம் உதவி பெற்றவர்கள் என்னிடம் சொன்னதுண்டு.
இயற்கை இவருடைய 54 வயதான இவருக்கு மரணத்தை அளித்துவிட்டதே என்பது தான் நமது ஆதங்கம்.
#நடிகை_ஸ்ரீதேவி
#தமிழ்_திரையுலகம்
#கரிசல்_மண்
#actress_sridevi
#bollywoood
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-02-2018
No comments:
Post a Comment