Tuesday, February 6, 2018

நாட்டின் வளங்களைச் சுரண்ட மேலும் சமூக விரோதிகளுக்கு உற்சாகம் அளித்துவிடுமோ???

நாட்டின் வளங்களைச் சுரண்ட மேலும் சமூக விரோதிகளுக்கு உற்சாகம் அளித்துவிடுமோ???
------------------------------------------------------
தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதை விற்பனை செய்வதற்கு ஏதுவாக அங்கிருந்து எடுத்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என்றால், கேரளம் கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த நவம்பர் 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று துறைமுக அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்வதற்கான நடைமுறைகளில் தலையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகள் எதையும் திறக்கக் கூடாது. சுற்றுச்சூழல் சமன்பாட்டைப் பேணும் நோக்கில், ஜல்லி குவாரிகளைத் தவிர கிரானைட் மற்றும் பிற கனிமவள குவாரிகளையும் மூட வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்பவர்கள் முறையான ஆவணங்கள் வைத்துள்ளனரா என்பதை கனிம வளம் மற்றும் வணிக வரித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தடை விதிக்கப்பட்ட காலத்தில் ஏற்படும் மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அரசே வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து விற்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, அரசு வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் விதிகளுக்கு உள்பட்டும், போக்குவரத்து அனுமதியும் பெற்றுத்தான் இறக்குமதி மணலை விற்பனை செய்ய முடியும் என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒட்டு மொத்த மணல் குவாரிகளையும், கிரானைட் மற்றும் பிற கனிமவள குவாரிகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் தமிழகத்தில் மணல் கொள்ளையை சரியாக உச்ச நீதிமன்ற பார்வைக்குக் கொண்டு செல்லாமல் மணல் குவாரிகள் மூடல் உத்தரவுக்கு தடை வாங்கியுள்ளது என்பது மேலும் இயற்கை வளங்களைச் சுரண்ட தைரியம் கொடுத்துவிடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு ஓரளவுக்குத் திருப்தியளித்தது. 1980களில் இருந்து இயற்கையின் அருட்கொடையான காட்டு வளங்களை அழித்தார்கள். 1990களில் இருந்து மணலை சூறையாடினார்கள்.
இப்படி ஆட்சியாளர்களை கையில் போட்டுக் கொண்டு நாட்டின் வளங்களைச் சுரண்ட மேலும் சமூக விரோதிகளுக்கு உற்சாகம் அளித்துவிடுமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...