Wednesday, February 28, 2018

தமிழக ஆளுநர் மாளிகை.


இன்றைக்கு (28/02/2018) இரண்டு செய்திகள் கண்ணில் பட்டன. 
1. ஈரோடு மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மண் அள்ளியவர்களுக்கு எட்டு கோடி ரூபாயை அபாராதமாக கோட்டாட்சியர் விதித்துள்ளார் என்ற செய்தியும், 
2.க்கு குளிர் சாதனப் பெட்டிகள், அவசியப் பொருட்கள், தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்தவர் கைது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில அதிகாரங்களில் தலையிடுகின்றார் என்ற குற்றச்சாட்டு ஒரு புறத்தில் உள்ளது. தேவையில்லாமல் அவர் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவது அர்த்தமற்றது. அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
இருப்பினும், ராஜ்பவனில் இருந்து எனக்கு கிடைத்த தகவலின்படி எளிமையான உணவுகளையும், தேவையில்லாத வீண் ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தினார் என்று கேள்விப்பட்டேன். பணியாளர்கள் என்ன உணவு உண்கிறார்களோ, அதே உணவைத் தான் ஆளுநரும் எடுத்துக் கொள்கிறார் என்ற செய்தியும் வந்நது.
ஒரு பக்கத்தில் அவரை கண்டித்தாலும் மற்றொரு பக்கம் அவரை பாராட்ட வேண்டியது உள்ளது. ராஜ்பவன் நிர்வாகத்தை எளிமையாக நேர்மையாகவும் நடக்க உத்தரவு போட்டுள்ளாராம். அதன் முதல் நடவடிக்கையாக ராஜ்பவனுக்கு பர்னிச்சர், சமையலறை பொருட்கள், குளிர் சாதனப் பெட்டிகள் வாங்கியதில் முறைகேடுகளை கண்டுபிடித்ததன் விளைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி. 
ராஜ்பவனில் இந்த முறையீடுகள் தொடர்ந்து நடந்து வருகிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது.
இந்த நேர்மையான நடவடிக்கையை பாராட்டி தான் ஆக வேண்டும். 
இதே போல 1977 காலகட்டங்களில் எளிமையின் அடையாளமாக பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். அப்போது அவர் ராஜ்பவனில் அசைவ உணவு, புகைப்பிடித்தல், மது பயன்படுத்துவது கூடாது என்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்தவர். இந்தியக் குடியரசுத் தலைவராக அப்போதிருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னை வந்தபோது தனக்கு அசைவ உணவு வேண்டுமென்று ராஜ்பவன் ஊழியர்களிடம் கேட்டார்.  உழியர்களோ அசைவ உணவு இங்கு சமைப்பதும், பரிமாறுவது கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு கவர்னர் பட்வாரி புலால் உணவு உண்ணக் கூடாது என்று கடுமையான உத்தரவு இட்டுள்ளார் என்ற விவரம் சஞ்ஜீவ ரெட்டிக்கு தெரியவந்தது. பட்வாரியிடம் இது குறித்து சஞ்சீவ ரெட்டியிடம் கேட்டபோது யார் வந்தாலும் அசைவ உணவு  பரிமாறக்கூடாது என்று நான் தான் உத்தரவிட்டேன். உங்களுக்கு வேண்டும் என்றால் வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று தெளிவாகச் சொல்லி விட்டார். குடியரசுத் தலைவரை பார்த்து ஒரு ஆளுநர் கறாராக சொன்ன நிகழ்வு எல்லாம் நினைவுக்கு வருகிறது.
#chennairajbhavan
#சென்னைராஜ்பவன்
#தமிழக_ஆளுநர்
#TN_Governor
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-02-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...