காவிரிப் பிரச்சினை - இனி என்ன செய்ய வேண்டும்?
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரிப் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டிஎம்சி தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டிஎம்சி தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது. இதனை நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 ஆக குறைத்தது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டிஎம்சி ஆக குறைத்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையான நிலை தான். 14 .75 டிஎம்சியைக் குறைத்த காரணங்கள் சரியானவையாக தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை எப்படியெனில் நன்றாக உபசரித்து, தலை வாழை இலை போட்டு சோற்றைப் பரிமாறி, அதற்கான கூட்டுப் பொரியல், சாம்பார், ரசம், பாயசம், தயிர் எனக் கொடுக்காமல் வெறும் சோற்றை உண்ணுங்கள் என்ற கதை தான்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் அமைக்கலாம் என்று உத்தரவில் இருந்தாலும்கூட கர்நாடகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீரைக் குறைத்துள்ளதைக் குறித்து, கர்நாடகத்தைக் காவிரித் தாய் காப்பாற்றினாள் என்று வரவேற்றுள்ளார். இப்படி மகிழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்படியான முரண்பட்ட நிலையில் கர்நாடகம் காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து நடந்துகொள்கிறது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. இப்படி உச்ச நீதிமன்ற, நடுவர் மன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசாகத்தான் கர்நாடகம் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் இதுதான் கர்நாடக அரசின் நிலைப்பாடு. நியாயத்தை ஒரு போதும் மதித்ததே இல்லை கர்நாடகம்.
கர்நாடக நிலைப்பாட்டின் வரலாறு
இந்தப் பிரச்சினையில், இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா. 1996இல் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? இந்தக் கேள்வியை எழுப்பி, 1996இல் தேவகவுடா பிரதமர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவகவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை அறிந்தவுடன் அலறியடித்துப் பிரதமர் தேவகவுடா தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னும் தமிழகம், கேரளம், புதுவை மாநிலத்தை எதிர் மனுதாரராக வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் தேவகவுடா, எப்படிக் கூட்டாட்சி இந்தியாவின் பிரதமராக உறுதிமொழி எடுக்க இயலும்?
மற்ற மாநிலங்களை எதிரியாகப் பார்க்கும் தேவகவுடா, முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை எப்படிப் பெற முடியும்? பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டிய இவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த இ.எஸ்.வெங்கட்ராமையாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கர்நாடக அனைத்துக் கட்சியினரோடு டெல்லிக்கும் சென்றார்.
இப்படி அரசியல் சாசனக் கடமைகள், மரபுகள், பண்பாடுகளைக் கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு உரிமை கோரி முரட்டுத்தனமாக, அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று சொன்னது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல்.
பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது என்றும், அதற்காகக் கூடுதலாகத் தண்ணீர் தருகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தைத் தெரிவித்தாலும், ஏற்கனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52% வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகமே தனது அறிக்கையில் கூறுகிறது. பெங்களூருவில் பிரமாண்டமான பூங்காக்களிலும், மால்களிலும், மைதானங்களிலும் ஆடம்பரத்துக்காகக் குடிநீர் வீணாக்கப்படுகிறது.
இனி தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
நதிகள் தேசியச் சொத்தாகும். இயற்கையின் அருட்கொடை. எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இதுகுறித்து 1983இல் நான் தாக்கல் செய்த நதிகளை தேசியமயமாக்கி, கங்கை முதல் கிருஷ்ணா - காவிரி - வைகை - தாமிரபரணி - குமரியின் நெய்யாறு வரை இணைத்து கங்கை குமரியைத் தொட வேண்டும் என்ற என்னுடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012இல் அளித்த தீர்ப்பில் அப்போதே இதைக் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டிஎம்சியாகக் கணக்கில் வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு வர வேண்டிய 14.75 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதையும், அங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதையும், அது குடிநீராகப் பயன்படுத்த ஏற்புடையது என்பதை உச்ச நீதிமன்றம் ஏன் பரிசீலிக்கவில்லை? ஐநா அமைப்பின் UNDP என்ற நிறுவனம் 1972இல் அளித்த அறிக்கையையும், இந்திய அரசு 1980இல் வழங்கிய அறிக்கையையும் கொண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்டுள்ளது. ஏன் இதேபோல கர்நாடகத்தையும் கேரளத்தையும் கணக்கிடவில்லை? 20 டிஎம்சி நிலத்தடி நீர் என உச்ச நீதிமன்றம் எப்படிக் கணக்கில்கொண்டது என்பது குறித்தும், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் இந்தப் பிரச்சினை குறித்து சரியாக எடுத்துவைத்தார்களா என்பது குறித்தும் சந்தேகமாக உள்ளது.
மொத்தம் 802 கி.மீ நீளம்கொண்ட காவிரி நதிநீர்ப் படுகையில் தண்ணீரின் அளவு 740 டிஎம்சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகத்தின் சார்பில் 465 டிஎம்சி தண்ணீரும் கேட்கப்பட்டது. தமிழகத்திலுள்ள 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 33 வட்டங்களில் மிகவும் குறைவு. 54 வட்டங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறையில் உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில்கூட நிலத்தடி நீர் தரை மட்டத்திலிருந்து 21.5 மீட்டர் கீழே சென்றுவிட்டது. திருவாரூர் 9.2 மீட்டர், பூம்புகார் அருகே மிகவும் குறைந்துவிட்டது. பல ஆண்டுகளாகப் பருவமழை பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் உப்பு நீராகவும் மாறிவிட்டன.
இந்தச் சூழலில் தமிழகத்துக்கு வரவேண்டிய நீர் அளவை நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்துள்ளன. தமிழகத்தின் நிலத்தடி நீருக்கும், காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்துக்கு நீர் வருவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழகத்தைப்போல கர்நாடகம், கேரளம், புதுவை பகுதிகளின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்காமல் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுப்பது எவ்விதத்தில் நியாயம்? அதுவும் காவிரி டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல் நீரும் நிலத்தடி நீரில் சேருவதால் இந்தக் கணக்கு சரியான வாதமாகவும் காரணமாகவும் இருக்குமா என்பது நமது கேள்வி.
ஆனால், நடுவர் மன்றம் ஒப்புக்கொண்டவாறு கேரளத்துக்கு 30 டிஎம்சியும், புதுவைக்கு 7 டிஎம்சியும் வழங்குவதில் உச்ச நீதிமன்றம் குறைக்கவில்லை. நதிநீர் பங்கீடு குறித்து சர்வதேச அளவில் முக்கியமாகப் பின்பற்றப்படும் 1966இல் உருவாக்கப்பட்ட ஹெலன்ஸ்கி கோட்பாட்டைப் பின்பற்றுகின்றோம் என்று உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தன. அப்படியென்றால், கீழ்ப் பாசனப் பகுதிகள்தான் பயன் பெற்றிருக்க வேண்டும். ஹர்மன் கொள்கை, கேம்பியோன் விதிமுறைகள், பெர்லின் விதி ஆகியவை நீர்ப் பங்கீடு குறித்த பிரச்சினைகளில் கடைப்பிடிக்கும் வழிகாட்டு முறைகளாகும். ஆனால், காவிரிப் பிரச்சினையில் ஹெலன்ஸ்கி வழிகாட்டு முறையே முக்கியமாகக் கருத்தில்கொள்ளப்பட்டது. அப்படியெனில், தமிழகத்துக்குத்தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும்.
சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா?
இப்படியான பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யலாம். ஏனெனில், இப்போது இந்தப் பிரச்சினையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இனி 15 ஆண்டுகளுக்கு நீர் அளவைக் குறித்துத் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாது.
ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. சீராய்வு மனு தாக்கல் செய்தால், இந்தச் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தட்டிக் கழிக்கலாம்.
சென்னை மாகாணமும், மைசூர் அரசும் 1892ஆம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தம். அதனடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910இல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டிஎம்சி, கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டும்போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அரசும் 11 டிஎம்சிக்கு ஒப்புக்கொண்டு, அதையும் மீறி 41.5 டிஎம்சிக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது. இப்படியான சிக்கல் இருக்கும்போது அதைத் தீர்க்க 1924இல் இரண்டாவது ஒப்பந்தமும், மெட்ராஸ் மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் கையெழுத்திட்டது. அந்த கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து 1974இல் மேலும் அமர்ந்து பேச வேண்டுமென்ற நிலைப்பாடுதான் இருந்தது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சினைகளைக் குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. 1929 ஒப்பந்தத்தின்படி கிருஷ்ணராஜ சாகர் அணையும், சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.
விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் சில பகுதிகளான கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுவிட்டன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று தொடர்ந்து கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் 1892 மற்றும் 1924, துணை ஒப்பந்தங்களான 1929 மற்றும் 1933 ஆகிய ஒப்பந்தங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது.
இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்குக் கிடைத்த பாதுகாப்பாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளின் கட்டுப்பாடும், அதனுடைய நிர்வாகத்தை மேலாண்மை வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அணைகளின் அனைத்துத் திறவுகோல்கள் கர்நாடகத்திடம் இருந்து மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு வந்துவிடும். இதேபோல தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய மூன்று அணைகளும், கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். தீர்ப்பிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும். கர்நாடகம் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் எப்போதும் போல வம்பு செய்யும்போது இதை உச்ச நீதிமன்ற கவனத்துக்குத் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.
பின்வாங்கிய மத்திய அரசு
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை வாரியத்தை முதலில் அமைப்போம் என்று உறுதியளித்த பின் அந்த நிலையிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமென்று மாற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை வைத்தது. மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6 (ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ஸ்கீம் (Scheme) அமைப்பு முறையின் கீழ்தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது.
காவிரி நீர் விடுவதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் அளவெடுப்பதை விட, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவிலும் மேலாண்மை வாரியத்திலும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கி.மீ தொலைவு வரையில் காவிரியின் மேற்கு பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரை பிலிகுண்டுலு முன்பே, கர்நாடக அணையிலிருந்தே கணக்கிட்டு அதன் அளவை நிர்ணயிக்க வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்குக் காட்டியது உண்டு. எனவே, பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளைக் கணக்கிட்டால் 15 முதல் 20 டி.எம்.சி., தண்ணீர் நமக்குக் கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கிறது.
கர்நாடகா அணைகளைக் கட்டும்போது தமிழகத்தின் அனுமதியைப் பெறாமலேயே கண்ணம்பாடி திட்டத்திலிருந்து, கபினி, ஹேமாவதி, ஹேரங்கி தற்போது மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு மிகப் பெரிய அணைகளைக் கட்ட முடிவு செய்தது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டிஎம்சி நீரைத் தேக்க முடியும். இது நம் மேட்டூர் அணையின் கொள்ளளவைவிட மிக அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள மூன்று அணைகள் மூலம் மேலும் 45 டிஎம்சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களைத் தீட்டியது. இந்தத் தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் நிறைவேற்றவோ, மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது. இந்த அணைகளைக் கட்ட ஒருகாலும் தமிழகம் அனுமதிக்கக் கூடாது.
தீர்ப்பின் பலன்
இந்தத் தீர்ப்பினால் தமிழகத்தின் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யும் சமூக விரோதிகள் மணல் அள்ளுவது தடுக்கப்படும். காவிரி ஆற்றில் கரூர், டெல்டா பகுதிகளில் மணல் அள்ளிக் குவிப்பதை இனிமேல் செய்ய முடியாது. ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு இந்த மணல் அள்ளும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்த முடியாது. காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகளும், கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்படும்.மேட்டூர் அணையைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், காவிரி பாசனக் கால்வாய்கள், அதையொட்டிய நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். காவிரியின் ஆக்கிரமிப்புப் பகுதிகளெல்லாம் மேலாண்மை வாரியத்தினால் கையகப்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கெனவே திட்டமிட்டவாறு, தமிழக அரசு காவிரியில் 40 தடுப்பணைகள் வரை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நடுவர் மன்றம் மாத வாரியாகப் பட்டியலிட்டுத் தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி 14.75 டிஎம்சி தண்ணீர் குறைத்த நிலையில் எப்படிச் சரியாக வரும் என்பதையும் சீராய்வு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தின் பாதிப்புகள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு குறையும். 14.75 டிஎம்சி நீர் இழப்பால் 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் இல்லாமல் போய்விடும். காவிரி வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள் ஏ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காவிரியின் உள்ளடக்கம். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நீர் நிலைகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும். அதனால் முறையான சாகுபடிப் பணிகள் நடக்காது. எனவே, டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். கர்நாடகத்தின் 13 ஆறுகளில் 2000 டிஎம்சி தண்ணீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது. இந்த உபரி நீரைத் திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே அதிக தண்ணீர் கிடைக்கும். உதாரணத்துக்கு ஹேமாவதி அணைக்கே 200 டிஎம்சி தண்ணீர் திருப்பலாம்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் தமிழகத்தை எவ்வாறு வஞ்சிக்கின்றதோ, அம்மாதிரியே மகதாயி அணைப் பிரச்சினையில் கோவா மாநிலம் கர்நாடகத்துக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து புலம்பும் கர்நாடகம், தமிழகத்தின் உரிமைகளுக்கு மட்டும் நியாயம் வழங்க மறுக்கிறது.கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் சோமநாதபுரம் அருகில் சிவசமுத்திரம் அருவி விழுகின்ற ககனசுக்கியில் அணை கட்டி சிவசமுத்திர நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு 3.4 கிலோமீட்டர் தூரமும், 15.5 மீட்டர் உயரத்தில் தடுப்புச் சுவரைக் கட்டி நீரைத் தேக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 165 ஹெக்டேர் வனப்பகுதியும், புறம்போக்கு நிலங்களையும் இணைத்து அணை கட்டுவதற்கான திட்டங்கள் உள்ளன. இதை 1987லிருந்தே கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதுகுறித்து 14/11/2017இல் மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பித்தது. மீண்டும் புதிய விண்ணப்பத்தை முன்வைக்கலாம் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தையும் தமிழக அரசு, மத்திய அரசிடம் நிராகரிக்க வலியுறுத்த வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே 21 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 02/06/1996 அன்று காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அமைத்த 17 ஆண்டுகளில் 568 முறை கூடி விசாரித்து தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நதியிலிருந்து 20 மாவட்டங்களுக்குக் குடிநீரும், காவிரி – குண்டாறு இணைப்பும் முக்கியமான தமிழகத் தேவைகளாகும்.
நதிநீர்ப் பங்கீட்டில் உலக நிலவரம் என்ன?
தற்போது, உலக மத்திய கிழக்கு பகுதியில் யூப்ரேடிஸ் – டைகிரீஸ் நதிகள் சிக்கல், துருக்கி – சிரியாவும் – ஈராக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கின்றன. ஜோர்டான் நதி பிரச்சினையை இஸ்ரேல் – லெபனான் – ஜோர்டான் – பாலஸ்தீனத்தோடு சுமூகமான பேச்சுவார்த்தையில் உள்ளன. ஆப்பிரிக்காவில் நைல் நதி எகிப்து – எத்தியோப்பியா – சூடானோடு பேச்சுவார்த்தையில் உள்ளது. மத்திய ஆசியாவின் ஏரல் கடல் பிரச்சினையில் கஜகஸ்தான் – உஸ்பெகிஸ்தான் – துர்கெமெனிக்கஸ்தான் – தஜிகிஸ்தான் – கிரிகிஸ்தான், ஐரோப்பாவில் எட்டு நாடுகளிடையே ஓடும் தனுபியாறு போன்ற நாடுகள் தண்ணீர் பகிர்வுக்குப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஏன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம், பூடான் போன்ற அண்டை நாடுகளோடு கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிநீர் தாவாக்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளது.
உலகத்தில் 3,600க்கும் மேற்பட்ட நதிநீர் ஒப்பந்தங்கள் இன்றைக்கு நடைமுறையில் உள்ளன.
இப்படி உலகத்தில் பல நதிநீர் தீரங்களின் பிரச்சினைகளை நாடுகளுக்குள்ளே பேசித் தீர்த்துக்கொள்ளும் நிகழ்வுகளை நீண்ட பட்டியலிடலாம். கடைமடைப் பாசனப் பகுதியான காவிரிக்குச் சகல உரிமைகள் இருந்தும் ஒரு கூட்டாட்சியில் கர்நாடகத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்க நிலையில், இனிமேல் என்ன காவிரிப் பிரச்சினையில் செய்ய வேண்டுமோ அதை இதயசுத்தியோடு செய்ய வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது.
காவிரி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதி மன்ற இறுதிப் தீர்ப்பு வந்த நாளன்று ,புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக் கொண்டேன். அப்பொழுது கூட " இந்த தீர்ப்பு மெக்கானிசத்தை ஏற்படுத்த சொல்கின்றதே தவிர மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தவில்லை, குழப்பமாகயுள்ளது" எனக் கூறினேன். காரணம் தீர்ப்பின் வரிகளில் CMB என சுருக்கி எழுதப்பட்டு இருந்ததே தவிர வார்த்தையில் கூட Cauvery management board என விரிவாக குறிப்பிடவில்லை.
அப்போது என்னுடன் விவாதத்தில் கலந்துக் கொண்ட அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கூட "அதெல்லாம் இல்லை, நிச்சயம் மேலாண்மை வாரியம்உள்ளது ‘’என குறுக்கிட்டார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கின்றது. மத்தியில் பிஜேபி ஆட்சி புரிகின்றது. நேற்றைய தினம் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் வெளியில் மோதல் போக்கை கொண்டாலும் காவிரி விசயத்தில் ஒற்றுமையாக பம்மாத்து வேலையை செய்கின்றார்கள். அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தின் இறுதி முடிவாக மேலாண்மை வாரியம் அவசியமற்றது என முடிவெடுத்து அதனை கர்னாடக தலைமை செயலாளர் ரத்ன பிரபா மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.
‘’Karnataka government proposed a two-layer “scheme” to the Centre for the implementation of the Supreme Court verdict.
The proposed scheme comprises a six-member Cauvery Decision Implementation Committee (CDIC) headed by the Union Water Resources Minister, and
an 11-member monitoring agency under it, headed by the Union Water Resources Secretary.’’
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பக்கம் 335இல் குறிப்பிட்டவாறு பொறிமுறை என்பது காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் (CMB) அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு 29-3-2018 மாலை சூரிய அஸ்தமனத்துடன் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாள்முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் கட்டுரைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று கவலையுடன் கூறி வருகிறேன். இன்று அது மெய்ப்பட்டுவிட்டது என்பதை நினைக்கும்போது மனது சற்று ரணப்படுகிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது.
கடந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் உத்தரவையும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் நிறைவேற்ற கர்நாடகா மறுத்ததும், இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உச்சநீதிமன்றம் வரை போயும் கர்நாடகம் திமிர் போக்கில் இருந்து வருகிறது. வழக்காடியதில் எந்த பயனுமின்றி போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஆணையிட்டும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் கர்நாடகா ஏற்க மறுக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பிலும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நியாயங்களை வழங்கவில்லை என்பது வேறு விசயம். இருப்பினும், மத்திய அரசு கர்நாடகத்திற்கு பாதுகாப்பாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலாகும்.
பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி ,கோதாவரி, கிருஷ்ணா ரணமே போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏன்?
காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது.
ஏற்கனவே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே 1966இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்லஜ்,, பியாஸ், ரவி ஆகிய நதிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு என ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்தி வரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் (Master Plan) என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும், முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த நவம்பர், 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில எல்லைகள் மறு சீரமைக்கப்பட்ட போது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதுவொரு அதிகாரம்பெற்ற சுயாட்சி வாரியமாகும். அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிந்து அதையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்து இதை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், புதுடெல்லி மற்றும் சண்டிகார் பகுதிகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் முறைப்படுத்தி வினியோகிக்கிறது. இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளை தடையில்லாமல் இன்று வரை நடந்து வருகிறது.
பியாஸ் - சட்லஞ் இணைப்புத் திட்டம் - 1 (பிரிவு 1)
போங் அணை (பிரிவு 2)
ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக இந்த வாரியம் கவனிக்கிறது. ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பிரச்சனை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது.
இப்படியெல்லாம் சரிவர பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வடபுலத்தில் அமைக்ககப்படுகிறது. ஆனால் நியாயமாக தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வஞ்சித்து, தற்போது கைவிரித்துவிட்டது. கடந்த 21/03/2018 அன்று மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்படவில்லை என்றும் ஒரு செயல் திட்டம் தான் வகுக்கச் சொல்லியுள்ளது என்று சொன்னபோதே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்ற துயர செய்தி தெரிந்துவிட்டது.
பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அமைத்திட என்ன சிரமங்கள் உள்ளது. அங்கு அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. காவிரியில் மட்டும் இப்படி செய்வது
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி ரணப்படுத்துவது போல உள்ளது.
வடக்கே ஒரு நியாயம். தெற்கே ஒரு நியாயமா?
தமிழக வரலாறு, நாகரிகம், அன்றாட வாழ்க்கை முறையில் இணைந்த காவிரி உரிமையை நிலைநாட்டத் தியாக உணர்வோடு தொலைநோக்கிலான சாத்தியக்கூறுகளை மனதில்கொண்டு அணுக வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. காவிரிப் பிரச்சினையில் இதுவொரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தை சமயோசிதமாக அணுகி சாத்தியப்பட்ட உரிமைகளையாவது நிலைநாட்ட அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து கடமைகளையாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#காவிரி_விவகாரம்
#தமிழக_விவசாயிகள்
#Cauvery_Management_Board
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2018.