நாட்டின் ஆழ்கடல் சுரங்கப் பணி மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் உலோகங்கள் குறித்தான பதிவு.
இந்தியாவின் லட்சியமான “Deep Ocean Mission” இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. ஆழ்கடல் தாதுக்களை ஆராய்வதற்கான 8,000 கோடி டாலர் திட்டம் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் மாதவன் ராஜீவன் அறிவித்தார்.
இந்த ஆழ்கடல் சுரங்க பணிக்கான கொள்கை ஒப்புதல் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது அதற்காகும் செலவினத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக விநியோகிக்கப்படும்.
மாங்கனீசு (Manganese) எனப்படும் தனிமத்தின் துணைப்பொருளான பாலிமெட்டாலிக் தாதுக்களை ஆராய்ந்து பிரித்தெடுப்பதே இந்த பணியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இவை மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் இரும்பு ஹைட்ராக்சைடு போன்ற தாதுக்களால் ஆன சிறிய உருளைக்கிழங்கு போன்ற வட்டமான திரட்டல்கள். அவை இந்தியப் பெருங்கடலில் சுமார் 6,000 மீட்டர் ஆழத்தில் சிதறிக் கிடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதன் அளவு சில மில்லிமீட்டர் முதல் சென்டிமீட்டர் வரை மாறுபடும். இந்த உலோகங்களை பிரித்தெடுத்து மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள், மின்கலன்கள் மற்றும் சோலார் பேனல்களில் கூட பயன்படுத்த முடியும்.
1982 ஆம் ஆண்டு கடல் சட்டங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சர்வதேச அமைப்பான சர்வதேச கடலடி ஆணையம் (ISA) ஆழ்கடல் சுரங்கத்திற்கான ‘பகுதியை’ ஒதுக்குகிறது. இந்தியா தான் 1987 ஆம் ஆண்டில் ‘முன்னோடி முதலீட்டாளர்’ என்ற அந்தஸ்தைப் பெற்ற முதல் நாடு. மேலும் மத்திய இந்தியப் பெருங்கடல் பேசினில் (CIOB) சுமார் 1.5 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டில், இந்தியா ஐ.எஸ்.ஏ உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, கடற்பரப்பின் முழுமையான வள பகுப்பாய்வுக்குப் பிறகு 50% பகுதியை திரும்ப வழங்கிவிட்டு மீதமுள்ள 75,000 சதுர கி.மீ பரப்பளவை தக்க வைத்துக் கொண்டது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி இந்தியப் பெருங்கடல் பகுதியில் 380 மில்லியன் டன் பாலிமெட்டாலிக் கனிம வள ஆதாரம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 92.59 மெட்ரிக் டன் மாங்கனீசு, 4.7 மெட்ரிக் டன் நிக்கல், 4.29 மெட்ரிக் டன் தாமிரம், 0.55 மெட்ரிக் டன் கேபால்ட் போன்ற கனிமங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இந்த 75,000 சதுர கி.மீ பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தி 18,000 சதுர கி.மீட்டராக சுருக்கி முதற்கட்ட பணிகளை தொடர உள்ளது. அவையே முதல் தலைமுறை ஆழ்கடல் சுரங்கத் தளமாக செயல்படும்.
இது போன்ற கனிமங்கள் மத்திய பசிபிக் பெருங்கடலிலும் தென்படுகிறது. இதனை கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் என்று அழைக்கின்றனர். சர்வதேச அளவில் பெருங்கடலின் கடலடி ஆய்வுப்பணிகளுக்காக 15 ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப் பணியில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா மற்றும் தென் பசிபிக் தீவு தேசமான குக் தீவுகள், மத்திய பசிபிக் தேசமான கிரிபாதி போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நாடுகள் அவர்களது தொழில்நுட்பங்களை ஆழமற்ற கடற் பகுதியில் சோதனை முறையில் செயல்படுத்தி தற்போது ஆழ்கடல் சுரங்கத்திற்கு தயாராகி வருகிறது.
இந்தியாவின் ஆழ்கடல் சுரங்கப் பகுதியானது சுமார் 5,500 மீட்டர் ஆழம் கொண்டது. அதிகளவிலான அழுத்தமும், மிகக் குறைந்த வெப்ப நிலையும் கொண்ட பகுதி.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) கூற்றுப்படி, இந்த ஆழமான தொலைதூர இடங்கள் தனித்துவமான உயிரினங்களுக்கு இடமாக இருக்கக்கூடும், அவை குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி, உயர் அழுத்தம் மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலை போன்ற நிலைமைகளுக்கு தங்களைத் தழுவிக் கொண்டன. இத்தகைய சுரங்கப் பணிகளால் அவை அழிந்து போகும் சூழல் உருவாகும். தற்போதைய நிலையில் ஆழ்கடலின் பல்லுயிர் மற்றும் சூழலியல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவது போதுமான வழிகாட்டுதல்களை உருவாக்குவது கடினம்.
கடுமையான வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவை ஆய்வு வழிகாட்டுதல்கள் மட்டுமே என்று ஆழ்கடல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு புதிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு அதனை ஐ.எஸ்.ஏ உடன் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிரித்தெடுக்கப்பட்ட துகள்களால் கடலின் மேற்பரப்பு பாதிப்படையலாம். அங்கு வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுரங்க வாகனங்களிலிருந்து வரும் சத்தம், ஒளி மாசுபாடு, கப்பல்கள் மற்றும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் கசிவுகள் குறித்து கூடுதல் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆழ்கடல் கனிமங்கள் எடுக்கும் பணி வணிகரீதியாக வெற்றியடைய வேண்டுமெனில் ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் டன்கள் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-08-2019
No comments:
Post a Comment