Wednesday, August 14, 2019

#சங்கரன்கோவிலில்ஆடித்தபசு #திருவிழாக்கள், #கிராமியமக்களின்சங்கமம், #சந்திப்புகள்.


---------------
இன்று சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா. மக்கள் கூட்டம் அலைமோதும். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூர தேர் பவனி, கழுகுமலை கழுகாசலமூர்த்தி விசாகத் திருநாள், கோவில்பட்டி சித்திரை தீர்த்த திருவிழா போன்றவை தான் சிறுவயதில் கண்டுகளித்த காட்சிகள். ஆடித்தபசுக்கு செல்பவர்கள் குடும்பத்தோடு புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்து கட்டுச்சோறு கட்டி எடுத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் திருவிழா பார்ப்பது வாடிக்கை. நான் ஆடித்தபசு போகும் போதெல்லாம் சுல்தான் பிரியாணி கடைக்கு செல்வோர் உண்டு. திருவிழா சமயங்களில் இந்த கடை மூடப்படும். இந்த கடைக்கு வந்து சாப்பிட வேண்டுமென்று வந்து ஏமாற்றத்தோடு செல்லும் மக்களின் முகபாவத்தை பார்த்தும் உண்டு. ஆண்டாள் கோவிலுக்கு சென்றால் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை மறக்க முடியாது. அதனருகே உள்ள திருவண்ணாமலைக்கும் செல்வார்கள்.மதுரை-தென்காசி சாலை
கீழ் ரத வீதியில் தடிமனம்ஆன நீண்ட பெரிய கயற்றில் வர்ண பூசி தரையில் போடப்பட்டுருக்கும்.
Image may contain: one or more people, crowd and outdoor

கழகுமலை விசாகத் திருவிழாவில் கிளிமூக்கு மாம்பழம் பிடித்தமானது. வெட்டுவான் கோவில் மற்றும் கழகுமலை மலை ஏறி உச்சிக்கு செல்வதுதான் விசாக திருவிழாவின் முக்கிய நடவடிக்கை . ஒரு சத்திரத்தை வாடகைக்கு எடுத்து அன்று குரு பூஜை நடத்தி உணவு சமைத்து ஏழைகளுக்கும், துறவிகளுக்கும் அன்னதானம் அந்த சமயத்தில் நடக்கும்.காவடிகள், பால் குடங்கள் வரிசையாக எடுத்த வருவார்கள். சில நேரங்களில் காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியாரின் பாட்களும் கேட்கலாம்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் தீர்த்தத் திருவிழாவும் இதே மாதிரிதான்.
இப்படியான நினைவுகள்தான் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வே. தெருவோரத்தில் கோணிப்பையை தைத்து தரையில் விரித்து அவற்றில் மீது சினிமா பிலிம், அதை பார்க்கக்கூடிய லென்ஸ், தொப்பி, கால் செருப்பு, கருப்பு கூலிங் கிளாஸ் போன்றவற்றை விலைக்கு வாங்கி கைப்பற்றிவிட வேண்டும் என்பதே அப்போதைய பிரதான நோக்கமாக இருக்கும்.
சமுதாயத்திற்கு ஒரு நாள் என மண்டகப்படி ஒதுக்குவதில் இருந்து இரவில் இசை நிகழ்ச்சிகள், வில்லிசை நடக்கும். கரகாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமப்புற நிகழ்ச்சிகளும் நடக்கும்.
சங்கரன்கோவில் ஆடி தபசுக்கு தெற்கே நாங்குநேரி, திருநெல்வேலி மேற்கேசெங்கோட்டை ஏன் கொல்லத்தில் இருந்து கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் விழாவிற்கு சங்கரன்கோவில், ஒட்டப்பிடாரம், விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் வருவார்கள். கழகுமலை விசாகத் திருவிழாவிற்கு கோவில்பட்டி தீர்த்தவாரிக்கும் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் போன்ற வட்டார மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க வருவார்கள்.
இந்த திருவிழாக்களின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் குடும்பத்துடன் சந்தித்து தங்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி சம்பாசனைகள் உண்டு.
தேர் திருவிழா என்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பது தான் இந்த நிகழ்ச்சிகளின் சாராம்சமாக இருந்தது. இந்த சந்திப்பின்போது முக்கிய குடும்ப, கடன், சொத்து பிரச்சினைகள், கல்யாண பேச்சு ஆகியன பேசப்படும் .
இன்றைக்கு போல வசதியில்லாத காலத்தில் கோவில் திருவிழாவிற்கு வில் மற்றும் மாட்டு வண்டியை கட்டிக் கொண்டு செல்வது இயல்பாக மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது. கூட்டுக் குடும்பங்கள் அழிந்து கொண்டு வரும் நிலையில் பழைய எண்ணங்களை குறித்து அசை போடவும், பாச உணர்வு இல்லாமல் போய்விட்டது.
கோவில் திருவிழாக்கள் என்பது கொடை கொடுப்பது மட்டுமல்லாமல் மனித ஜீவன்களை இணைக்கும் சாராம்சமாக திகழ்ந்தது. காலச்சக்கரம் மாறி வருகிறது. அதன் போக்கில் தான் நாம் போகவேண்டும். நடப்பது தான் நடக்கும். அந்த பின்னணியை அசைபோடுவது தான் நாம் செய்ய வேண்டியது.
கவலை இல்லாத காலம் அது. இன்றைக்கும் நம் வாழ்வில் சந்திக்கும் வேதனைகளுக்கும், பின்னடைவுகளும் நாம் பலரால் ஏமாற்றப்படும் போது பால்ய கால நினைவுகள் நமக்கு களிம்பு போடும் காட்சிகளாக உள்ளன. பழைய நினைவுகள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இப்படியான திருவிழாக்களில் கிராமிய சிந்தனையையும், நாட்டுப்புற உணர்வையும், வெள்ளந்தி மனிதரையும் அவ்அப்போது அசை போட முடிகிறது .
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-08-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...