Monday, August 19, 2019

#மகாபாரத_காட்சிகள் #பாஞ்சாலி_சபதம்




'’வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார்
மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்
அஞ்சலின்றிச் சமர்க்களத்தேறி
ஆக்கும் வெற்றியதனை மதிப்பார்
துஞ்சல் நேரினும் தூயசொல்லன்றிச்
சொல்மிலேச்சரைப் போலென்றும் சொல்லார்.....’’

- மாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

சகுனியின் வஞ்சமான சூதாட்டத்தால் அனைத்தையும் இழந்த யுதிஷ்டிரர், திரௌபதியையும் பணயப் பொருளாக வைத்து தோற்றார். திரௌபதியைச் சபைக்கு உடனே அழைத்து வா! எனச் தலைமைச் சேவகனுக்குக் கட்டளையிட்டான் துரியோதனன். விதுரர், மன்னனிடம் நியாய தர்மங்களைக் காக்கும்படி மன்றாடினார். என்றும் தீராதப் பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம் மன்னா! குரு வம்சத்தின் அழிவிற்குத் தாங்களே காரணமாகிவிடாதீர்கள்! எனப் பலவாறு நீதியை எடுத்துரைத்தார் விதுரர். ஆனால் மகனின் மகிழ்சிக்காக அனைவரையும் பலியிடும் மனநிலையில் இருந்தான் திருதராஷ்டிரன். செயலிழந்த மன்னனின் முன் எதையும் செய்ய இயலாது, தவித்தனர்! அவையில் இருந்த சான்றோர்கள்.
Image may contain: cloud, sky, twilight, outdoor and natureமாதவிலக்கான நிலையில் தனியறையில் இருந்தத் திரௌபதி அவையில் தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை அறியாதவளாக இருந்தாள். அவளிடம் சென்று நடந்தையெல்லாம் கூறி இளவரசர் தங்களை உடனே சபைக்கு வரும்படி கட்டளையிட்டுள்ளார் என்றான் சேவகன். 
ஒருகணம் உலகமே நின்றுவிட்டாற் போல் செயலிழந்து நின்றாள் திரௌபதி. சேவகனே! யுதிஷ்டிரர் மதுபானம் அருந்தியிருந்தாரா? என்றாள் திரௌபதி. இல்லை தேவி! என்றான் சேவகன். அவர் முதலில் என்னை வைத்து தோற்றாரா? அல்லது அவர் முதலில் தோற்றாரா? அவரே தோற்றபின் என்னை வைத்தாட அவருக்கு உரிமையில்லை ! இதை அங்கே சென்று தெரிவி! என்றாள் திரௌபதி. சேவகனும் சபைக்குச் சென்று வந்து, தங்களது கேள்விகளைச் சபையில் வந்து கேட்கச் சொன்னார்! இளவரசர் என்றான்.
எப்படியாவது கொடியவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமென திரௌபதி காலங்கடத்த சினமடைந்த துரியோதனன், துச்சாதனனை அழைத்து திரௌபதியை இழுத்து வரும்படி கட்டளையிட்டான். அண்ணனின் வாக்கே வேதவாக்கு! என வாழ்ந்தச் துச்சாதனனும் வேகமாகச் சென்று திரௌபதியைப் பிடித்திழுத்தான். 
என்னை விட்டு விடு ! நான் குரு வம்சத்தின் மருமகள்; உனது அண்ணி. சபையின் முன்னே வந்து பெரியோர்களை வணங்கக் கூட இயலாத நிலையில் தனிமையில் இருக்கிறேன் !எனப் பலவாறு கெஞ்சினாள் திரௌபதி. அதைச் சற்றும் பொருட்படுத்தாது, அவளது கூந்தலைப் பற்றியிழுத்தான் பண்பற்ற துச்சாதனன். பாண்டுவின் மருமகளை, ஜந்து குழந்தைகளுக்குத் தாயானவளை ஈவுவிரக்கமின்றி, தரதரவென இழுத்து வந்து சபையின் முன்னே தள்ளினான் துச்சாதனன். துடிதுடித்து எழுந்த அருச்சுனனை அடக்கினார் தருமர். வேறுவழியற்ற நிலையில் கைதிகளைப் போல் பாண்டவர்கள் அமைதியாகத் தலைகுனிந்திருந்தனர்.
தன் கணவர்மார்களின் அருகே சென்ற திரௌபதி, ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டாள். நான் தருமருக்கு மட்டும் மனைவியல்ல! நீங்கள், என்னைப் பணயம் வைக்க அவருக்கு அனுமதியளித்தீர்களா? எனக் கேட்டாள்! பாஞ்சாலி. 
பதில் கிடக்காமல் போகவே கடைசியாக அருச்சுனனின் அருகில் வந்தாள்!உலகில் சிறந்த வில்வீரரே! சுயம்வரத்தில் என்னை வென்ற தாங்கள் தானே, என்னை மணந்திருக்க வேண்டும்? அதைவிடுத்து உங்கள் சகோதர்களுக்கும் என்னை மணமுடித்து வைத்து, இன்று என்னை இக்கதிக்கும் ஆளாக்கி விட்டீர்களே நியாயமா? என்றாள் திரௌபதி. பதிலற்று இருந்தான் அருச்சுனன். பீஷ்மர், துரோணர், மன்னன் ஆகியோரிடமும் நியாயம் கேட்டாள் திரௌபதி. 
தருமனுக்கு உன்னிடம் உரிமையில்லை! என பிற பாண்டவர்கள் கூறினால் உன்னை விடுவிக்கிறோம் எனறான் துரியோதனன். அப்படியாவது இவர்களைப் பிரித்துவிடலாம்! என நினைத்தான் அவன். ஆனால் அண்ணன் தான் எங்களுக்குத் தலைவர் என்றனர் பிற பாண்டவர்கள். தம்பி நெருப்பைக் கொண்டுவா ; திரௌபதியைப் பணயம் வைத்த கைகளைச் சுட வேண்டும்! என்றான் பீமன் கோபமாக. என்னக் கூறினீர்கள் அண்ணா?
"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; மீண்டும் தருமமே வெல்லும்!" 
நாம் அமைதி காக்க வேண்டும். நமது ஒற்றுமையை எதிரிகள் குலைக்க இடம் தராதீர்கள்! என்றான் அறிவாளியான மாவீரன் அருச்சுனன்.
நீ என் அடிமை, என்மடியில் வந்து உட்கார் என்று தொடையைத் தட்டி காண்பித்தான் துரியோதனன். பாவியே! நீ தொடை முறிந்துச் சாவாய்! எனச் சாபமிட்டாள் பாஞ்சாலி. ஐவரை மணந்த நீ குலமகளல்ல! விலைமகள் போன்றவள். எனவே உனக்கு மானமென்ன? ஆடையின்றி அமரச் சொன்னாலும் தவறல்ல! என்றான் கர்ணன். அடிமைகள் மார்பில் ஆடை அணியக் கூடாது; எனவே பாண்டவர்களின் மேலாடையையும், பாஞ்சாலியின் ஆடையையும் பறித்து வா! என்றான் கர்ணன், துச்சாதனனைப் பார்த்து. உடனே பாண்டவர்கள் தங்கள் மார்பில் அணிந்திருந்த ஆடைகளை வீசியெறிந்தனர். துச்சாதனா! திரௌபதியின் ஆடையையும் உருவு! என்றான் துரியோதனன். துரியோதனனைத் தவறிழைக்கத் தூண்டியவனே கர்ணன் தான். அருச்சுனன் மீதிருந்தப் பொறாமை, பாஞ்சாலியைப் பழிவாங்கத் தூண்டியது கர்ணனுக்கு.
துரியோதனின் தம்பியான விகர்ணன் எழுந்து அண்ணியை அவமானப்படுத்துவது தவறு. தருமர் அடிமையான பின் எவ்வாறு பாஞ்சாலியைப் பணயம் வைக்க முடியும்? உலகோர் பழிக்கும் கொடுஞ்செயலைச் செய்யாதீர்கள் !என்றான். அவனைக் கடிந்து அமர வைத்தான் துரியோதனன். விதுரர் எழுந்து, பாவியான கர்ணனையும், சகுனியையும் நாட்டைவிட்டு துரத்துங்கள்; பாண்டவர்கள் இழந்தவற்றை மீண்டும் அளித்து அவர்கள் நாட்டிற்குச் செல்ல அனுமதியுங்கள்! மன்னா! என்றார். அவரைக் கடுமையாகப் பேசிய துரியோதனன், துச்சாதனனைப் பாஞ்சாலியின் ஆடையை களையச் சொன்னான். தருமமே மாண்டுப் போனது! எனத் தவித்துத் தலைகுனிந்திருந்தனர் பீஷ்மரும், ஏனைய பெரியோர்களும்.
துச்சாதனன், நெருப்பனைய பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி உருவ ஆரம்பித்தான். 'உனக்கு ஆபத்து வரும் காலத்தில் கிருஷ்ணரை நினை; ஆபத்து உடனே விலகும்!' என வேதவியாசர் கூறியது திரௌபதிக்கு நினைவிற்கு வந்தது. முதலில் தனது ஆடையை இறுகப் பிடித்திருந்தாள் பாஞ்சாலி. 'தன்னால் எதுவும் முடியாது என்றுணர்ந்ததும்' இருகரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கி இதயக்கமல வாசா! என்னைக் காப்பாற்று! கண்ணா! மணிவண்ணா! மாயோனே! வாசுதேவா! என்று துதித்தவாறே தன் இதயத்திலிருக்கும் பரம்பொருளோடு ஐக்கியமாகிப் போனாள் திக்கற்ற பாஞ்சாலி.
கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரும் கண்ணனும், பாஞ்சாலிக்கு அருள் புரிந்தார். அவரது அருளால் பல வண்ண பட்டாடைகள் வந்துக் கொண்டேயிருந்தன. பாவியான துச்சாதனன் இழுக்க, இழுக்க ஆடைகள் வந்துக்கொண்டேயிருக்க, துரியோதனனும் ,கர்ணனனும் இன்னும் வேகமாக இழு! எனத் தூண்டினர். தேவைப்படுபவர்களுக்கு, தேவைப்படும் பொருளை வழங்குதலே கொடை! எனப்படும். 
சபை நடுவே ஆடைக்காகக் கதறும் ஓர் அன்னையின் ஆடையை உருவச் சொன்னவன் எவ்வாறானக் கொடையாளி? பாஞ்சாலியின் துயருக்குக் காரணமான கர்ணன், பெண்ணுலகம் என்றுமே மன்னிக்க முடியாத மாபெரும் குற்றவாளி. துரியோதனனின் கொடுமைகளுக்கெல்லாம் காரணமாகவும், துணையாகவும் நின்றவன் கர்ணனே. திரௌபதியைத் துகிலுரிய ஆரம்பித்தத் துச்சாதனன் இறுதியில் சோர்ந்து விழுந்தான். கிருஷ்ண பரமாத்மா ஆபத்திலிருந்தப் பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியருளினார்.
சிசுபாலனின் வதத்தின் போது கிருஷ்ணர் ஏவிய சக்ராயுதம் மீண்டும் அவரது கரத்தில் வந்த வேளையில், அவரது தணியாதச் சினத்தின் காரணமாக அது அவரது கைவிரலைச் சற்றே காயப்படுத்திவிட்டது. உடனே பாஞ்சாலி பதறிப்போய் தனது பட்டாடையைக் கிழித்து கிருஷ்ணரின் கைவிரலில் கட்டி விட்டாள். இந்த உதவியை என்றுமே மறக்க மாட்டேன் சகோதரியே! என்றார் கிருஷ்ணர். திரௌபதி ஆடைக்காகக் கதறுகையில் அதை அவளுக்களித்து, தனது நன்றிக்கடனைத் தீர்த்துவிட்டார் கிருஷ்ணர். இந்த சம்பவத்தை நினைவூட்டவே வட இந்தியாவில் உள்ளோர் "ரக்ஷாபந்தன்" என இதை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
__. உமா ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...