Saturday, August 24, 2019

ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!

ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, அவரை வரும் 26ஆம் தேதி வரை சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் 22-8-2019 மாலை அனுமதியை வழங்கியுள்ளது.
ப.சிதம்பரம் ஆரம்பக் கட்டத்தில் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த ஆளும் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். அப்போது சுதேசமித்திரன் நாளிதழில் சில காலம் 1967இல் பணியாற்றினார். இவரை அரசியலில் வளர்த்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் (சி.எஸ்.) 1969இல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது இவர் காங்கிரஸில் இல்லை.
அப்போது காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழகத்தின் வலுவான அரசியல் கட்சியாக இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் திமுக தலைமையில் ஆளும் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. சி.சுப்பிரமணியம், இந்திரா தலைமையிலான ஆளும் காங்கிரஸின் சார்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிதம்பரத்துக்கு முகவரி தந்த சி.எஸ்
அதன்பின்னர், சி.சுப்பிரமணியத்தின் பரிந்துரையின் பேரில் இந்திராவின் தலைமையிலான அகில இந்திய காங்கிரஸில் 1972இல் ப.சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரானார். அதற்குப் பின்னர், 1973இல் இந்திரா காங்கிரஸின் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இவரும், இந்து என்.ராம், மைதிலி சிவராமன் ஆகிய மூவர் இணைந்து ரேடிக்கல்ஸ் (Radical Review) என்றொரு அமைப்பை அமைத்து ரேடிக்கல்ஸ் ரிவ்யூ என்ற பெயரில் சஞ்சிகையை இவர்கள் அந்த கட்டத்தில் வெளியிட்டு வந்தனர்.
அதே காலகட்டத்தில்தான் மோகன் குமாரமங்கலத்தின் புதல்வரான ரங்கராஜன் குமாரமங்கலமும் அரசியலுக்கு வந்தார். அந்த தருணத்தில் இவரும் ரங்கராஜன் குமாரமங்கலமும் தோழர்களே என்று தான் சமவயது நண்பர்களை அழைப்பது வாடிக்கை. அப்போது ஆளும் காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகம் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் அருகே இருந்தது. மதுரை சௌந்தரராஜன் தான் கட்சி அலுவலகத்தின் அன்றைய பொறுப்பாளராக இருந்தார். இதுதான் இவரது வளர்ச்சியின் தொடக்கம்.
பெரியார் திடலில் திருமணம்
சி.சுப்பிரமணியம், பக்தவச்சலத்துக்கு அறிமுகம் மற்றும் செட்டிநாடு அரசருக்கு பேரன் அல்லவா? சி.எஸ், பக்தவத்சலம் ஆகியோர் மூதறிஞர் ராஜாஜிக்கு நெருக்கமானவர்கள். இந்த நிலையில் 1968இல் சிதம்பரத்துக்கும் நளினிக்கும் காதல் திருமணம் நடந்தது. முதலில் அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவரது நண்பர்கள் தொலைபேசித் துறையில் பணியாற்றிய சாந்தகுமார், சுதர்சனம் ஆகியோர் பெரியாரின் கவனத்திற்குக் கொண்டுசென்று இந்தத் திருமணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு பெரியாரோ, அவர் செட்டிநாடு அரசரின் பேரன், அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எப்படி... என் தலைமையில் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்களா என்றார். பின்னர் ஒரு வழியாக பெரியார் திடலில் ப.சிதம்பரம் - நளினி சிதம்பரம் திருமணம் முறைப்படி நடந்தது. அன்றைக்குக் கிட்டத்தட்ட 25 பேர் வரை பெரியார் திடலில் பங்கேற்றனர். ராதா அரங்கத்தில் எளிமையாக நடந்தது என்பது என் நினைவு.
ப. சிதம்பரம் அப்போது ஸ்கூட்டர்தான் பயன்படுத்துவார். அந்த காலத்தில் ஸ்கூட்டர் என்பதே பெரிய விஷயமாக நினைக்கப்பட்டது. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவருக்கு ஸ்கூட்டர் வாங்கவா முடியாது? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கண்டனூரில் பிறந்தாலும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். அப்போது குருவில்லா ஜேக்கப் தலைமையாசிரியராக இருந்தபோது அவரிடம் எப்போதும் பாசமாக இருப்பார். அவர் இறக்கும் வரையில் அவர்மீது பாசமுடன் இருப்பார். இவருடைய தாத்தா செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியார் ஆவார். சிதம்பரத்தின் சிறிய தந்தையார் ராமசாமி செட்டியார் அவர்கள் இன்றைய இந்தியன் வங்கியை நிறுவிய இயக்குநர்களில் ஒருவராவார். இவருடைய தந்தையார் பழனியப்பன் ஜவுளி மொத்த வியாபாரி.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை புள்ளிவிவரவியல், சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர் பட்டமும் பெற்றார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். வழக்கறிஞர் தொழிலில் இவருடைய சீனியர் வழக்கறிஞர் நம்பியார் ஆவார். சில காலம் இவரது மாமனார் (நீதிபதி) கைலாசம், கே.கே.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து வழக்கறிஞர் பணியும் மேற்கொண்டார்.
ப.சிதம்பரத்துக்கும் காமராஜர் தலைமையில் இருந்த ஸ்தாபன காங்கிரஸுக்கும் எந்த தொடர்பும் இருந்தில்லை. சிதம்பரத்துக்கு சி.எஸ்ஸின் வழிகாட்டுதலின் மூலமே அரசியல் வளர்ச்சி இருந்தது. சொல்லப்போனால் சி.எஸ் தான் இவருடைய அரசியல் காட்ஃபாதர் ஆவார். இவருடைய முன்னேற்றங்களில் சி.எஸ்ஸின் பரிந்துரைகள் அப்போது இருக்கும்.
இவரது திருமணத்துக்குப் பின் சென்னை அமைந்தகரையில் நளினி சிதம்பரத்தோடு குடியேறினார். இவருக்கு வீடு கொடுத்து உதவியவர் அன்றைய மேயர் முனுசாமி நாயுடு. அப்போதே சென்னையில் ஒரு தனி மாடி வீட்டில் லிப்ட் வசதி செய்யப்பட்டது மேயர் முனுசாமி வீட்டில்தான். அந்த வீட்டில் ஒரு தளத்தில் இவரும், மற்றொரு தளத்தில் சிதம்பரம் குடும்பமும் வாழ்ந்தனர்.
திமுக சென்னை மாநகர மேயர் முனுசாமி நாயுடு பேரறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தவர். இவர் ஈ.வி.கே.சம்பத்துக்கு வேண்டியவர். ஈ.வி.கே.சம்பத் ரஷ்யா சென்றபோது மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வழியனுப்ப சென்ற மேயர் முனுசாமியின் மீது கடுமையான விமர்சனத்தை அன்றைக்கு வைத்தனர். ஏனெனில் அந்த நேரத்தில்தான் அண்ணாவுக்கும், ஈ.வி.கே.சம்பத்துக்கும் இடையில் பிரச்சினைகள் எழுந்தன.
திருமணத்துக்குப் பின் அப்போது ஆடம்பரமாகக் கருதப்பட்ட பியட் கார் ஒன்றை ப.சிதம்பரம் பயன்பாட்டுக்கு வாங்கினார். அதனுடைய பதிவெண் 1234 என்று இருக்கும். இந்திய தேசிய காங்கிரஸ் 1969இல் இந்திரா தலைமையில் ஓர் அணியாகவும், நிஜலிங்கப்பா, காமராஜர் தலைமையில் மற்றோர் அணியாக பிரிந்தபோது, சிதம்பரம் அரசியல் வெளிச்சத்தில் இல்லை. பின்னர் 1973இல் ஈ.வி.கே.சம்பத்தோடு, மயிலாப்பூர் திருஞானமும் ஆளும் காங்கிரஸில் இணைந்தார். அவரும் அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் போட்டியிட ஈ.வி.கே.சம்பத் பரிந்துரையில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அந்தப் பதவியை ப.சிதம்பரத்துக்குப் பெற்றுத் தருவதற்காக சி.சுப்பிரமணியம் முயற்சி எடுப்பதால் திருஞானம் அந்தப் பதவிக்காகப் போட்டியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பின்பு 1976இல் காமராஜர் மறைவுக்குப் பின் ஸ்தாபன காங்கிரஸும், இந்திரா தலைமையிலான ஆளும் காங்கிரஸும் தமிழகத்தில் இணைவதற்கான முயற்சிகளை சிலர் தமிழகத்தில் மேற்கொண்டார்கள். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அப்போதிருந்த பா.இராமச்சந்திரன், பொதுச் செயலாளர் குமரி அனந்தன், தண்டாயுதபாணி ஆகியோர் இணைப்புக்கு ஆதரவாக இல்லை.
இன்னொரு பொதுச் செயலாளர் பழ. நெடுமாறன் தீவிரமாக இணைப்புக்கு ஆதரவாக இருந்தார். மற்றொரு தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திண்டிவனம் ராமமூர்த்தியும் இதற்கு ஆதரவாக இருந்தார். இந்த இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அப்போது பழ.நெடுமாறன் தலைமையில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டோம்.
பழ.நெடுமாறனைப் பின்னுக்குத் தள்ளிய மூப்பனார்
அன்று பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் தலைவராக கருப்பையா மூப்பனார் இருந்தார். அந்த வட்டாரத்தில் பழைய காங்கிரஸில் நல்ல அறிமுகம் இருந்தாலும் தமிழக அளவிலான தொண்டர்களுக்குப் பெரிதாக அறிமுகமில்லை. இருப்பினும் காங்கிரஸின் மேல் மட்டத் தலைவர்களுக்கும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுக்கு மட்டுமே பெரிதாக அவரைப் பற்றி நன்கு தெரியும்.
காமராஜர் மறைவுக்குப் பிறகு 1976இல் சென்னை மெரினாவில் இரண்டு கட்சிகளும் இந்திரா தலைமையில் இணைந்தது. அப்பெருங்கூட்டத்தில் இந்திரா காந்தி வந்து உரையாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரை அப்போது அறிவித்தார். அப்போது நெடுமாறன், ஆர்.வி.சுவாமிநாதன், ஏ.பி.சி.வீரபாகு, மகாதேவன் பிள்ளை, எம்.பி.சுப்பிரமணியம் போன்றவர்கள் தலைவராகும் அளவில் இருந்தனர். அப்போது அந்தக் கூட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.
ஆனால், கருப்பையா மூப்பனார் பெயரை இந்திரா காந்தி அறிவித்ததும் கவிஞர் கண்ணதாசன், ”Wrong Choice” என்றார். அச்சமயத்தில் இதை கேட்ட ப. சிதம்பரம் கவிஞரைப் பார்த்தார். ஈ.வி.கே.சம்பத் அல்லது பழ.நெடுமாறன் போன்றோர் தலைவராக வரவேண்டுமென கவிஞர் கண்ணதாசன் விரும்பினார். குறிப்பாக பழ.நெடுமாறனுக்கு வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், இந்திரா காந்தி விரும்பியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பழ.நெடுமாறன் தடுக்கப்பட்டார். அதற்கு சி.எஸ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இந்திராவுடனே இருந்த மரகதம் சந்திரசேகர் ஆகிய மூவரும் பழ.நெடுமாறனுக்கு வயதும் காலமும் உள்ளது என்று கூறினர். இந்திரா காந்தி, கருப்பையா மூப்பனாரை அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவித்தார்.
மூப்பனார் தந்த பதவி
மூப்பனார் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சி.எஸ். பரிந்துரையில் 1976இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக சிதம்பரத்தை கருப்பையா மூப்பனார் நியமித்தார். கருப்பையா மூப்பனார் சிதம்பரத்தின் வளர்ச்சிக்கு பயன்பட்டார். இந்த சமயத்தில் அவசர நிலை காலம் அமலில் இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதுதான் முதலும் கடைசி தேர்தலும். 1978இல் சென்னை மயிலாப்பூர் கோவில் அருகேயுள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பார்வையாளராக டெல்லியிருந்து வசந்த சாத்தேயோ, ஏ.ஆர்.அந்துலே ஆகியோர் வந்ததாக நினைவு. சரியான நினைவு இல்லை.
இந்த தேர்தலில் பழ.நெடுமாறன், கருப்பையா மூப்பனார், தஞ்சை இராமமூர்த்தி என மூவரும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் மிகவும் சொற்பமான 7 அல்லது 8 வாக்கு வித்தியாசத்தில் மூப்பனார் வெற்றி பெற்றார். நெடுமாறன் வெற்றி பெற்றிருப்பார். நெடுமாறனுக்கு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவராக இருந்த செல்லப்பாண்டியன் உறுதியளித்தபடி வாக்களிக்காமல் கடைசி நிமிடத்தில் செல்லப்பாண்டியன் அவர் ஆதரவாளர்களின் 10 ஓட்டுகள் வரை மூப்பனாருக்கு சென்றுவிட்டது. அன்றைக்கு தஞ்சை ராமமூர்த்தி போட்டியிடவில்லை என்றாலும்,செல்லப்பாண்டியனும் வாக்களித்து இருந்தால் நெடுமாறன் வெற்றி பெற்றிருப்பார்.
செல்லப்பாண்டியன் வாக்குகளை கடைசியில் மடைமாற்றியது காரணம். ராயப்பேட்டையில் உள்ள அஜந்தா ஹோட்டலில் மூப்பனாரும், சிதம்பரமும், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் தனியாக சந்தித்து அவர் மனதை மாற்றியது தான். மூப்பனாருடன், ப.சிதம்பரம், திண்டிவனம் ராமமூர்த்தி இணைந்துதான் கட்சி நிர்வாகத்தை நடத்தினர்.
இந்திரா பேச்சை மொழிபெயர்த்தார்
அந்த சமயம் அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் வந்தபோது, தற்போதைய சிவகங்கை அருகேயுள்ள ராஜசிங்கமங்களத்தில் நடைபெற்ற பெருங்கூட்டத்தில் மக்களிடையே பேசினார். இந்திராவின் ஆங்கில உரையை 1976இல் ப.சிதம்பரம் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மொழி பெயர்ப்பு இந்திரா காந்தியை மிகவும் ஈர்த்தது. அப்போதே இந்திரா காந்தி இவரைக் குறித்து கேட்டார். சி.எஸ். இவரைப் பற்றிய விபரங்களை இந்திரா காந்தியிடம் சொன்னார்..
இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்தது. அந்த தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சிதம்பரம் சி.எஸ். மூலமாக காய்களை நகர்த்தியபோது அதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. ஏனெனில் அன்றைக்கு நீண்டகாலமாக சிவகங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்தியில் அமைச்சராகவும் பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் இருந்தார். எனவே சிதம்பரத்துக்கு அப்பொழுது வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
ஆர்.வி.சுவாமிநாதன்(ஆர்.வி.எஸ்) என்றால் காங்கிரசில் அனைவருக்கும் தெரியும். இந்திராவிற்கு மிகவும் பழக்கம். அவருக்கு மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் கார் விற்பனை வியாபார நிறுவனங்களும் இருந்த்து.
முதல் சட்டமன்றத் தேர்தல்
இந்நிலையில் 1977 சட்டமன்ற தேர்தலில் காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதுதான் அவருடைய முதல் தேர்தல். காரைக்குடி தொகுதியில் அப்போது நளினி சிதம்பரமும் இவருக்காக ஒரு மாதம் பிரச்சாரத்தில் இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் ப.சிதம்பரத்திற்கு பழைய காங்கிரசோடு அவ்வளவு நெருக்கமும் பழக்கமும் இல்லாத நேரம். காமராஜருடன் நெருங்கியதும் கிடையாது. கட்சிகள் இணைப்பிற்கு பிறகு ஒரு முறை சென்னை ஆபட்ஸ்பரி அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் இவர் பேசிய போது, அண்ணன் திண்டுக்கல் அழகிரிசாமி கூட ஸ்தாபனக் காங்கிரஸ் பற்றி தெரியாமல் பேசக்கூடாது என்று கடுமையாக கண்டித்தார். மேலும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார்.
ஒரு முறை தி.நகர் ஜி.என்.செட்டி ரோடு வாணி மகால் அருகே வடக்கு பார்த்த ஒரு வீட்டில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டது. ஒரு நாள் மூப்பனார் மாடியில் உள்ள அவரின் அறையில் இருந்தார். அவரை பார்த்து விட்டு சிதம்பரம் கீழிறங்கி வந்தார். அப்போது எம்.கே.டி.சுப்பிரமணியம் (எம்.கே.டி.எஸ் என்று அழைக்கப்பட்ட இவர் அண்ணா, திமுகவை ராபின்சன் பூங்காவில் துவங்கிய நிகழ்வு அழைப்பிதழில் அண்ணா, பெத்தாம்பாளையம் பழனிச்சாமி ஆகியோருடன் இவர் பெயரும்இடம் பெற்றது.), தி.சு.கிள்ளிவளவன் (இவர் அண்ணாவின் நேர்முகச் செயலாளர்; வழக்கறிஞர் வி.பி.ராமனுடன் ஆங்கிலஹோம்லேன்ட் பத்திரிக்கையை கவனித்து வந்தவர்), கள்ளக்குறிச்சி துரை.முத்துசாமியும், நானும் கீழே இருந்தோம். சிதம்பரத்தை பார்த்து, ‘சிதம்பரம், நாங்களெல்லாம் காங்கிரசில் அடிப்படைத் தொண்டர்கள். காங்கிரசில் நெடுமாறன் போன்ற நல்லவர்களையும், தொண்டர்களையும் புறக்கணித்துவிட்டு காங்கிரஸ் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் வரலாறு சாமானியனால் வளர்ந்தது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் எம்.கே.டி.சுப்பிரமணியம். இது இன்னும் நினைவில் உள்ளது.
முற்றிலும் மேல்மட்ட அரசியலே
அன்றைக்கு காங்கிரஸ் தலைவர்களாக இருந்த காமராஜர், கக்கன், ரா.கி.கிருஷ்ணசாமி நாயுடு, தேனி என்.ஆர்.தியாகராஜன், திருச்சி அருணாசலம் போன்ற மூத்த முன்னோடிகளுடன் இவருக்கு அதிக நெருக்கம் கிடையாது. மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன், ஆர்.வி.சாமிநாதன், ஏ.பி.சி.வீரபாகு, நெடுமாறன், காளியண்ணன், கருத்திருமன், குமரி அனந்தன், தஞ்சை ராமமூர்த்தி, துளசிஅய்யா வாண்டையார், வாழப்பாடி இராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களோடு எல்லாம் அப்போது சிதம்பரத்திற்கு எந்த நெருக்கமோ தொடர்போ இருந்ததில்லை. சிதம்பரத்தை பொறுத்தவரையில், சிசுப்பிரமணியம், பக்தவத்சலம், கருப்பையா மூப்பனார் மட்டுமே. இப்படியான வகையில் அவருடைய அனுபவமும், போக்கும் இருந்தது.
சிதம்பரம் வழக்கறிஞராகவும் சிறப்பாக கவனம் செலுத்திவந்தார். எனக்கே நன்றாக தெரியும். திரையரங்க வழக்குகள் வந்தால் அன்றைய எழிலகத்தில் இருந்த போர்ட் ஆப் ரெவின்யூ அலுவலகத்திற்கு ஒயிட் அன்டு ஒயிட் கருப்பு கோட்டில் ஆட்டோவில் வந்து வாதாடியதும் உண்டு. அதே நேரம் எளிமையாக இருப்பார்.
நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள எல்டராடோ வளாகத்தில் அவருடைய அலுவலகம் இருந்தது. இப்படியான சிதம்பரம் கடந்த காலத்தில் நான் பார்த்த நிகழ்வுகளில் சிலவற்றை நினைவு கூர்ந்துள்ளேன். அரசியலில் உச்சத்திற்கு வந்து இந்திய துணைக்கண்டம் அறியப்படும் ஒரு ஆளுமையாக உள்ளார். நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் 1990களில் இவர் அமைச்சராக இருந்த போது பேர்குரோத் ஊழல் தொடர்பாக இவர் மீது புகார் கூறப்பட்டது.
தலைமுறை தலைமுறையாக வரைமுறையே இல்லாம சேர்த்த பலகோடி பரம்பரை சொத்து... கானாடுகாத்தானில் கண்ணுக்கு எட்டிய எட்டாத தூரம் தாண்டி கடல் அளவு நில புலன்கள் .அண்ணாமலை பல்கலை கழகம், இந்தியன் வங்கி , யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி எல்லாம் நிறுவிய பெருமை மிக்க வம்சா வழி . 8 முறை எம்பி ... ஐந்து முறை மத்திய அமைச்சர்... அதில் மூன்று முறை கேபினட் அமைச்சர் ..
ராஜாவீட்டுகன்னுக்குட்டி,ஆங்கிலத்திலும் அருமையாக பேசுவார் என்ற வகையில் பெரிய அங்கீகாரம் இவருக்கு கிடைத்தது.இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். எழுத்து என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் ப. இலட்சுமணன் எளிமையின் அடையாளம், சிறந்த காந்தியவாதி. இலக்கியத்தை நேசித்து இலக்கிய தளத்திலும் ப.இலட்சுமணன் இன்றுவரை இயங்கி வருகிறார்.
இவரைப் பற்றி சொல்ல எவ்வளவோ செய்திகள் உள்ளன. நானும் என்னோடு அரசியல் களத்தில் 48 வருட காலம் பயணித்த நண்பர்கள் சொன்ன தகவல்களை மையமாக வைத்து இந்த பதிவை செய்துள்ளேன்.
ஈழ விவகாரம்
என்ன செய்வது? வரலாற்றில் என்ன சொல்ல......? ஈழம்விவகாரத்தில் 2009 இல் புலிகள் அனைத்து சமரச முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் சோர்ந்து போயுள்ள மக்களுக்குக் களச் சூழலைப் புரிய வைத்து அவர்களுக்குத் தெம்பூட்டவும், போராளிகளை மீள ஒருங்கிணைத்து இறுதிச் சமரை வடிவமைக்கவும் ஒரு நாற்பத்தியெட்டு மணி நேர போர் தவிர்ப்பு ஒன்றிற்கு பெரும் பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் அது இறுதி வரை சாத்தியப்படவே இல்லை. அது மட்டும் நடந்திருந்தால் தமிழீழ வரலாறு வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அப்போது அந்த வாய்ப்பை தமிழீழத்திற்கு தராமல் கையை விரித்தவர்களில் முதன்மையானவர் சிதம்பரம். வரலாறு தற்போது அந்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தை அவருக்கு வழங்காமல் வச்சுச் செய்திருக்கிறது. வரலாறு ஈவிரக்கமில்லாதது - அது யாரையும் மன்னிப்பதில்லை.
வேகமாய் நகர்ந்து
நகர்ந்து களையெடுக்கும்
எந்தப் பெண்ணின்
காலில் ஒட்டி
ரத்தம் குடிக்கலாம்
என்று சகதிக்குள்
மறைந்து பின் தொடருகிறது
ஒரு அட்டைப் பூச்சி
- கவிஞர் கலாப்ரியா.

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...