Friday, August 30, 2019

வ.உ.சி., ஜெபி., அச்சுத பட்டவர்த்தன்......, சிலரை பொது வாழ்க்கை வஞ்சிக்கின்றது.



-------------------------------------
இந்த படத்தில் உள்ள ஆளுமைகள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அனைவரும் அறிந்தவர். வாழ்நாள் முழுவதும் சோசலிஷ்டாக இருந்தார். விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்குண்டு. பலர் வற்புறுத்தியும்   நேருவின் அமைச்சரவையில் சேர விரும்பவில்லை. இப்படி ஒரு மாமனிதரை பார்க்க முடியுமா? 

அருணா ஆசப் அலி பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிடாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார். 
அருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்புசத்தியாக்
கிரகத்தின் போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

அச்யுத பட்டவர்த்தன்
அச்யுத பட்டவர்த்தன் ஜெபி.யின் சகா. அகமத் நகரில் பிறந்து வாரனாசியில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் அன்னி பெசன்ட் தியாசபிக்கல் சௌசைட்டியில் ருக்மணி ஆரன்டேல் உடன் இணைந்து ஆரம்பக்கட்டத்தில் பணியாற்றினார். விடுதலைப் போராட்டத்தில் ஜெ.பி.யோடு ஒரு சோசலிஷ்ட்டாக களத்தில் இருந்தார். ஆச்சார்யா நரேந்திர தேவால் ஈர்க்கப்பட்டு களப்பணியில் இருந்தார். நாடு விடுதலையடைந்த பின்னர் பண்டித நேரு இவரை அமைச்சரவையில் சேர அழைத்தும். நான் கிராமப்புறப் பணிகளுக்கு செல்கிறேன். ஏனெனில் இந்த ஜோல்னா பையில் துணி மணிகள், புத்தகங்களும் தான் என் வாழக்கைக்கு போதும். நீங்கள் அமைச்சரவையையும் ஆட்சியையும் நடத்துங்கள். வாழ்த்துகள் என்று கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்தார். திருமணமேசெய்துகொள்ளதாவர்.வசதியான குடும்பம்.  பேராசிரியர்.
இப்படியான ஆளுமைகளை நாம் நினைவு கூறுகிறோமா என்பதுதான் வினா.

இந்த படத்தில் உள்ள மற்றொருவர் ராம் மனோகர் லோகியா. அவர் நாடறிந்த சோசலிஷ்ட். 

இந்த சோசலிஷ்ட்களே பிற்காலத்தில் இளங்துருக்கியராக Young Turks எழுந்தனர். அவர்களில் சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ஐ.கே.குஜ்ரால், டி.பி.தார், ஓம் மேத்தா, அம்ரித் நக்தா, நந்தினி சத்பதி, சந்திரஜித் யாதவ், ரகுநாத ரெட்டி, கே.டி.மாளவியா, கே.ஆர்.கணேஷ் போன்ற முன்னாள் பிரஜா சோசலிஷ உறுப்பினர்கள் மற்றும், கம்யூனிச உறுப்பினர்கள் போன்றோர் காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் அப்போது இளந் துருக்கியர்கள் (Young Turks) என்று அழைக்கப்பட்டனர். Ginger group எனவும் கூப்பிட்டனர். இவர்கள் தான் பிரதமர் இந்திராவிடம் மன்னர் மானிய ஒழிப்பையும், வங்கிகளை தேசிய மயமாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழகத்திலும் அறிந்தும் அறியாமல் முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், அவருக்குப்பின் முதல்வராக இருந்த ராஜபாளைம் குமாரசாமி ராஜா ஆகியோரின் படங்கள் கூட சட்டமன்றத்தில் இல்லை. பொதுவாழ்க்கையில் தங்கள் சொத்துக்களை தானம் கொடுத்து நேர்மையாக வாழ்ந்தவர்கள் ஓமந்தூரார், சமூகநீதியை, இட ஒதுக்கீடை பிற்பட்ட மக்களுக்கு ஒழுங்குபடுத்தியவர். தமிழ் பயிற்சிமொழியை அறிமுகப்பத்தியவர். தமிழ் கலைக்களஞ்சியம் தொகுப்பை வெளியிட முன்னெடுத்தவர். விவசாயிகளின்முதல்வர்.
எளிமையானவர். 

அதே போல குமாரசாமி ராஜாவும், தன் வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்ந்தார். சேலம் வரதராஜூலு நாயுடு, மதுரை வைத்தியநாத ஐயர், பொதுவுடைமை வாதி ஜீவா, கக்கன், கே.டி.கே. தங்கமணி, கோபி. லட்சுமண ஐயர் போன்ற பலர் நினைவில் வைக்க நாம் நினைவில் கொள்ள தவறிவிட்டோம். 

நேர்மையான ஆளுமைகள் ஏன் கடந்த நூற்றாண்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, செல்வந்தராக பிறந்து பொது வாழ்க்கையில் எல்லாம் இழந்து காலில் செருப்பு போடாமல் கிழிந்த கோட் போட்டுக் கொண்டு கோவில் பட்டியில் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிய பெருமகனாரை எத்தனை பேர் நம் முன்னாடியாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் வ.உ.சி., வாழ்க்கையை நடத்த சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூரில் எண்ணெய், பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போன்றவற்றை தனி மனிதனாக விற்று வாழ்க்கையை நடத்தினாரே. என்ன கொடுமை? சிலரை பொது வாழ்வு கடுமையாக வஞ்சிக்கின்றனது. நேர்மையாக இருந்தாலும் செம்மையான போக்கை இயற்கை சிலருக்கு வழங்கவில்லையே. இந்த படத்தில் உள்ளவர்கள் படித்த மேன்மக்கள், நேர்மையான தியாக சீலர்கள். இவர்களைப் பற்றியான கவனம் நமக்கு ஏற்படவில்லை.

#பொது_வாழ்க்கை
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2019

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...