*#அருண்ஜேட்லி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்....
நன்றியும்....அவரால் ‘#இதுதான்உலகம் என்று பாடத்தை கற்றுக் கொடுத்த பழைய வழக்கறிஞர் நண்பர்கள்’ #இன்றையநீதிமான்கள்.*
--------------------------------------
மத்திய அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி இன்று காலமாகிவிட்டார். கடந்த 1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சட்டத் துறை அமைச்சராக இருந்தார். நல்ல பண்பாளர். மாணவர் அரசியல் இயக்கத்திலிருந்து பொது வாழ்வில் வளர்ந்தவர். நான் டில்லி ஜே.என்.யூவில் சில நாட்கள் படித்தபோது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஜனசங்க கட்சியின் ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவராக இருந்தார். நுண்மான் நுழைபுலமும், நல்ல புரிதலும் உள்ளவர். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்.
கடந்த 1999இல் இவர் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது என்னுடைய வழக்கறிஞர் சகாக்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக தங்களை நியமிக்கப்பட வேண்டும். அதற்கு நான் உதவவேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி செல்லும் பொழுதுயெல்லாம் விமான நிலையம் வரை வந்தும்,எனது இல்லத்துக்கு பல சமயம் வந்தும் எப்படியாவது மத்திய அரசு வழக்கறிஞர்களாக தாங்கள் நியமிக்கப்பட வேண்டுமென்று மிகவும் ஆர்வமாகவும் அக்கறையோடும் இருந்தார்கள்.
இந்த வழக்கறிஞர்கள் நண்பர்கள் எல்லாம் என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர். காந்தியிடம் பணியில் இருந்தவர்கள். அதுமட்டுமல்ல, இவர்கள் நான் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக 1989 மற்றும் 1996 களில் தேர்தல்களில் போட்டியிட்டபோது, சென்னையில் இருந்து கோவில்பட்டி வந்து சில நாட்கள் தங்கியிருந்து எனக்காக தேர்தல் பணிகளையும் ஆற்றினார்கள். இதற்காகவே நன்றியும், அவர்களுடைய நட்பையும் பாராட்ட வேண்டும் என்ற காரணத்தினால் இவர்களுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர்களாக பரிந்துரை செய்து நியமனம் பெற்றுத் தந்தேன்.
மத்திய அரசின் வழக்கறிஞர்களாக ஒரே நாளில் ஒரே உத்தரவில் 20 பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் பிற்காலத்தில் உயர்நீதிமன்ற
நீதிபதிகளாகவும், தலைமை
நீதிபதியாகவும், ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார்கள். நண்பர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் நீதிபதிகளான பின் அவர்களோடு தொடர்பே இல்லாமல் சற்று தொலைவில் மனச்சான்றுக்குக் ஒப்ப விலகிக் கொண்டேன்.
எனக்கும் அரசியலில் தகுதியே தடை என்ற நிலையில் கடந்த 19 ஆண்டுகளாக சில மனிதர்களால் கடுமையான சறுக்கல். இந்த நிலையில் இந்த நண்பர்கள் விமான நிலையத்தில் எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட என்னை பார்த்தும் பார்க்காதது போல விமான நிலையத்தின் கூரையை பார்த்து நகர்ந்து விடுவார்கள. இதை கண்டும் நான் வருத்தப்படவில்லை. மனதில் சிரித்துக் கொண்டு இதுதானடா உலகம் என்று கடப்பது என்னுடைய வாடிக்கை. இது ஒருமுறையல்ல, பலமுறை. அருண் ஜேட்லியிடம் நியமனங்கள் பெற எவ்வளவு சிரமப்பட்டிருப்போம். அந்த நியமனங்கள் தான் நீதிபதிக்கு அடிப்படைத் தகுதி. நண்பர்களிடம் என்னுடைய சொந்தலாபத்திற்கு,
பரிந்துரை என்ற நிலையும் என்றைக்கும் இவர்களிடம் சென்று நின்றதில்லை. இவர்களிடம் பதவியின் காரணமாக
எந்த நட்பும் கிடையாது.விலகியுள்ளேன. எங்காவது பார்த்தால் அடிப்படை நாகரிகமாக நலமா என்று விசாரிக்ககூட மனமில்லாத இந்த மானிடர்கள் எங்கிருந்தாலும் நமக்கென்ன?
ஆனால் கவியரசர் கண்ணதாசனின் இந்த வரிகள் யதார்த்தமானது, பழைய நன்பர்களின் பார்வைக்கு!
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...
இதுதான் உலகம். இன்று இருப்போம். நாளை யார் அறிவாரோ? ஆனால், அன்று உதவி கேட்டபோது, உடனே மறுக்காமல் செய்த மாமனிதர் அருண் ஜேட்லிக்கு என்றைக்கும் நன்றி பாராட்ட வேண்டிய கடமை எனக்குள்ளது.
#அருண்ஜேட்லி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-08-2019
No comments:
Post a Comment