நீ செத்து விடுவாய் என்று உண்மையை கூறினால் யாருக்கும் பிடிப்பதில்லை. மாறாக, நீ பதினாறும் பெற்று பல்லாயிரம் ஆண்டு வாழ்வாய் என்று பொய் சொன்னால் அவர்களுக்கு பிடிக்கிறது.
அதுபோலவே, தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது என்ற உண்மையைக் கூறினால் அது பலருக்கு பிடிக்குதில்லை.
கோத்தபாயா மட்டுமா கொலைகாரன்? சரத்பொன்சேகா கொலைகாரன் இல்லையா? அல்லது மைத்திரிக்கு கொலையில் பங்கு இல்லையா?
போர் வெற்றியில் முக்கால்வாசி பங்கு தன்னுடையது என்று சந்திரிக்கா கூறி வருகிறார். அப்படியாயின் இனப் படுகொலையில் அவருக்கு பங்கு இல்லையா?
கருணாவைப் பிரித்து வெற்றிக்கு அத்திவாரமிட்டது தாங்களே என்று ரணில் கட்சியினர் கூறுகின்றனர். அப்படியென்றால் இனப் படுகொலையில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்று அவர்களே உரிமை கோருகின்றார்கள் என்றுதானே அர்த்தம்?
இவர்கள் எல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டபோது “கொலைகாரர்கள்” என்று கத்தாதவர்கள் கோத்தபாயா நிறுத்தப்பட்டவுடன் மட்டும்; “கொலைகாரன்” என்று கத்துவது ஏன்?
இத்தனை நாளும் கோத்தபாயா எந்த பதவியிலும் இல்லை. உண்மையில் இவர்கள் விரும்பியிருந்தால் கோத்தபாயாவை சட்டப்படி தண்டித்து சிறையில் அடைத்திருக்க முடியும்.
அதுமட்டுமல்ல இப்போதுகூட கோத்தபாயா வரக்கூடாது என்று உண்மையில் இவர்கள் விரும்பினால் ஒரு பொது வேட்பாளரை அவருக்கு எதிராக நிறுத்த முடியும்.
ஆனால் இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. மாறாக கோத்தபாயா வந்தாலும் பரவாயில்லை தங்களில் ஒருவர் வந்துவிடக்கூடாது என்று குழிபறிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
மகிந்தவின் வேட்பாளராக கோத்தாவே இறக்கப்பட போகிறார் என்பது கடந்த ஒருவருடமாக அனைவரும் அறிந்த விடயமே. யாருமே இதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமெரிக்காகூட அவரது பிரஜாவுரிமையை உடன் நீக்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்தியாவும் அவருக்கு ஆசி வழங்கியுள்ளது.
கோத்தபாயாவை இவர்கள் வேட்பாளராக்கவில்லை. அடுத்த ஜனாதிபதியாகவே ஆக்கிவிட்டார்கள். மக்களும் இதை விரும்புகிறார்கள் என்று காட்ட தேர்தல் நாடகம் போடப் போகிறார்கள்.
அவரும் தான் ஜனாதிபதியானதும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவேன் என வழக்கமாக எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறுவதுபோல கூறியிருக்கிறார்.
இங்கு எமது வருத்தம் என்னவெனில் அவர் ஜனாதிபதி ஆகப் போகின்றார் என்பது அல்ல. மாறாக அவர் “தமிழருக்கு தீர்வு” என்கிறாரே, இவர் தீர்வு என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அது வழக்கம்போல் எல்லா ஜனாதிபதிகளுகும் தமிழர்களுக்கு வழங்கும் வெத்து வார்த்தைகள்தான்....
குறிப்பு - தான் தீர்வு வழங்குவேன் என்று மகிந்தா தமிழர்களுக்கு தமிழில் கூறியுள்ளார். அவர் தமிழில் கூறியது தமிழர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக சிங்கள இனவாதிகளுக்கு புரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே.
No comments:
Post a Comment