Monday, October 28, 2019

தமிழ்நாடு 63

தமிழ்நாடு 63 (தமிழக மக்களின் பார்வைக்கு)
===========================

எதிர்வருகின்ற நவம்பர் 1ம் தேதி இன்றைய தமிழகம் நிலப்பரப்பு அமைந்து 63 ஆண்டுகள்.

ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடகத்திடம், கொள்ளேகால், மாண்டியாவில் சில பகுதிகள், கோலார் 
தங்கவயல், வெங்காளூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரையும் இழந்தோம். கேரளத்திடம் பாலக்காடு 
பகுதியில் சில தமிழக கிராமங்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதி, தென்முனையில் நெடுமாங்காடு, 
நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை இழந்தோம். இதனால் குமரியில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் 
அடவி நயனாறு, செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், நாடறிந்த முல்லைப் 
பெரியாறு பிரச்சினை, கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி, பம்பாறு, 
பாண்டியாறு-புன்னம்புழா என சில நதிநீர் பிரச்சினைகள் நமக்கு சிக்கலாகிவிட்டது. அதைப்போன்று 
கர்நாடகத்திடம் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினையும், ஆந்திரத்திடம் பாலாறு, 
பொன்னியாறு, பழவேற்காடு ஏரி என நீர் ஆதாரப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நாம் இழந்த 
மண்ணால் இழந்தோம். நாம் பெற்றதோ தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் 
பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம்.  தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, 
குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது 
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.  
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் 
செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை 
ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு 
சென்றுவிட்டன. 1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் "நவ கேரளம்" என்று கொண்டாடுகிறது. 
கர்நாடகம் "அகண்ட கர்நாடகம்" என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் "விசால ஆந்திரம்" என்று ராஜ்ய 
விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் "சம்யுக்த மகாராஷ்டிரம்", குஜராத் "மகா குஜராத்" என்று 
நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது.  ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக 
கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று 
சொல்ல முடியவில்லை.  

10 ஆண்டுகளுக்கு முன்பு 2006ல் அக்டோபர் இறுதி வாரத்தில் ஆனந்த விகடனிலும்,  தினமணியில் 
தமிழ்நாடு 50 என்று என்னுடைய பத்தி வெளியானபோதுதான், தமிழகமே 50 ஆண்டுகள்  ஆகிவிட்டதா 
என்று சற்று எழுந்து உட்கார்ந்தது. அந்த அளவு நம்முடைய விழிப்புணர்வுகள் இருந்தன. 

யாரும் கண்டு கொள்ளத நிலையில் முதன் முதலாக கடந்த 2006 நவம்பர் 1ம் தேதி தமிழகம் 50 என்று என்னுடைய நூல் வெளியீட்டு விழாவும், எல்லை போராட்ட தியாகிகளுடைய படங்கள் குறிப்பாக ம.பொ.சி., மங்களகிழார், விநாயகம், நேசமணி, பி.எஸ். மணி, 
கரையாளர் தமிழ்நாடு என்று பெயர்வைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் ஆகியோரின் படங்கள் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில், வைகோ, நெடுமாறன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு, இரா செழியின், மூத்த வழக்கறிஞர்கள் 
வானமாமலை, என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர். காந்தி, பத்திரிகையாளர்கள் மாலன் போன்றோர்கள்  எல்லாம் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

தமிழ்நாடு 50 என்ற என்னுடைய நூலில் வட எல்லைப் போராட்டம், தென்குமரி மீட்பு, செங்கோட்டைப் போராட்டம், நாம்இழந்தபகுதிகள்,
தட்சணப்பிரதேசம்எனபலவிடயங்களையும்பிரச்சினைகளையும் எழுதியிருந்தேன். அந்த நூல் திரும்பவும் விரிவான பதிப்பாக வெளிவர இருக்கின்றது.

தமிழகத்திற்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். இதை எத்தனைப் பேர் சிந்திப்பார்களோ, எத்தனைப் 
பேர் ஆர்வம் செலுத்துவார்களோ என்று தெரியவில்லை. நமக்கு ஒரு சினிமா நடிகை அரசியலுக்கு வந்து  என்ன சொல்கின்றார் என்றுதான் நாம் கேட்கின்றோம்.அதைவிவாதிக்கின்றோம். நம்முடைய நேரத்தை விரயம் செய்கின்றோம். இதையெல்லாம் பார்க்கும்பொழுது, "விதியே, விதியே, தமிழச் சாதியை, என்செய 
நினைத்தாய் எனக்குரை யாயோ?...." என்ற பாரதியினுடைய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

நவம்பர் 1ம் தேதி இது குறித்தான சில செய்திகளும், என்னுடைய பத்தியும் வரவுள்ளது. குறைந்த அளவு 
இதற்காக நேரம் ஒதுக்கி படித்தால் தமிழ் மண்ணுக்கு செய்கின்ற கடமையாகும்.  

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-10-2019.

#தமிழ்நாடு63
#tamilnadu63 
#ksrposting 
#ksradhakrishnanposting


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...