Friday, October 18, 2019

வாழை விவசாயி - Plantain tree



வாழை விவசாயி - Plantain tree
இன்றைக்கு திருவல்லிக்கேணி பாரதிசாலையில் வாழைக்காய் மண்டி பக்கம் நடந்துசென்றபோது, என்ன விலை நிலவரமென்று அக்கறையோடு விசாரித்தேன். அதற்கு அந்த வியாபாரி, “சார் தீபாவளி வருகிறது. சீசன் நேரம் என்பதால் ரஸ்தாளி 600வரைக்குக்கூட ஒரு தார் விலைக்குப் போகும். கற்பூரவல்லி என்றால் 500க்கும், பூவன் 400க்கும், செவ்வாழை 500க்கும் விற்கும். மற்ற நாட்களில் ரஸ்தாளி, செவ்வாளை எல்லாம் 300ரூபாய்க்கும் மீதி வாழை தார்கள் 250ரூபாய்க்கும் அதற்க்கும் மேல் விலையில் விற்பனை ஆகும்” என்று சொன்னார்.
Image may contain: plant and food

ஒரு வாழைப் பழமோ 6ரூபாயிலிருந்து 10ரூபாய் வரைக்கும் சென்னையில் விற்பனை ஆகின்றன. ஒரு வாழை விவசாயி என்ற நிலையில், உடனே கிராமத்தில் உள்ள என்னுடைய தோட்டத்தில் தொடர்பு கொண்டு, “இன்றைக்கு வாழைக்காய் வியாபாரி எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்துவிட்டுப் போனார்” என்று விசாரித்தேன்.
வாழைக்காய் தார்கள் 170முதல் 200 எண்ணிக்கை கொண்ட கதலித்தார் குறைந்தது 100ரூபாய்க்கும் அதிகபட்சமாக 150 ரூபாய்க்கும், சமயத்தில் 20-30ரூபாய் விலைக்கும் நம்மிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 60முதல் 100 எண்ணிக்கை கொண்ட நாட்டு வாழைத்தார் 100முதல் 120ரூபாய் வரை அதிகபட்சமாகவும் நம்முடைய தோட்டத்திலிருந்து கோவில்பட்டி, சிவகாசி, சங்கரன்கோயில் வியாபாரிகளால் வாங்கப்படுகிறதாகச் சொன்னார்.
Image may contain: tree, sky, plant, outdoor and natureஅதேபோல, வாழை இலை ஒருகட்டு 70 முதல்100 ரூபாய் வரைக்கும் திருவேங்கடம், கழுகுமைலை வியாபாரிகள் எடுக்கிறார்கள். ஆனால் விற்பதோ இரண்டுமடங்கு விலையாக 200ரூபாய்க்கும், முகூர்த்த நாட்களில் 300 ரூபாய்க்கும் வியாபாரிகள் விற்கிறார்கள் என்றார்.
இதையெல்லாம் பார்க்கும்போது வயிறுதான் எரிகிறது. தமிழ்நாட்டில் 1.30லட்சம் ஹெக்டேர் விவசாயிகள் வாழை சாகுபடி செய்கின்றார்கள். குறிப்பாக வாழை விவசாயம் தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகின்றன.
வாழை பயிர் செய்வதற்கு அதிகமாக செலவு செய்து நஷ்டமடைந்து, கடனாளியாகி விவசாயி அல்லோலப்படுகிறான். ஆனால் இடைத்தரகர்களான வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
Image may contain: plant, nature and outdoor
இன்றைக்குச் சந்தை நிலவரம் உற்பத்தியாளரையும் , நுகர்வோரான பொதுமக்களையும் சேர்த்துதான் பாதிக்கின்றது.. இப்படித்தான் நெல், மிளகாய், பருத்தி, வெங்காயம், எண்ணெய் வித்துகள் என எல்லா விவசாயப் பொருட்களிலும் உற்பத்தி செய்த விவசாயியை நட்டாத்தில் நிற்பாட்டிவிட்டு இடைத் தரகர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
தற்போது பருப்பு விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் அந்த பருப்பை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த லாபம் போகின்றதா? இல்லையே! இதையெல்லாம் எங்கே போய் சொல்ல.
ஒருநாள் விவசாயி கொதித்தெழுவான். அப்போது இருக்கின்றது;வெட்டிப்பேச்சு பேசும் ஆளவந்தார்களுடைய பந்தாகளுக்கு....
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
18-10-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...