Sunday, October 20, 2019

புதுவையில் கி.ரா.வின் மனையாள் கணவதி அம்மாள் படத்திறப்பு நிகழ்வு.

*புதுவையில் கி.ரா.வின் மனையாள் கணவதி அம்மாள் படத்திறப்பு நிகழ்வு.*
-----------------------------------------
நேற்று (19-10-2019) மாலை புதுவை மத்திய பல்கலைக்கழக அரங்கத்தில் கி.ரா.வின் துணைவியார் மறைந்த கணவதி அம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பங்கேற்று கணவதி அம்மாளின் படத்தை திறந்து வைத்தார். திரைக் கலைஞர் சிவகுமார், புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர். டாக்டர். குர்மீத் சிங், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியர்கள் பஞ்சாங்கம், இளமதி ஜானகிராமன், வெங்கடசுப்புராய நாயகர், பக்தவத்சலம் பாரதி, சிலம்பு நா. செல்வராசு, பா. இரவிக்குமார் மற்றும் கவிஞர் ஆகாசம்பட்டு வே.சேஷாசலம், நெய்வேலி சாந்தி, கி.ரா.வின் புதல்வர்கள் திவாகர், பிரபி மற்றும் பலர் பேசினர். அடியேனும், பா.செயப்பிரகாசமும் படத்திறப்பு நிகழ்வை முறைப்படுத்தி உரையாற்றினோம். அனைவரும் நிறைவான வாழ்வை கணவதி அம்மாள் வாழ்ந்துள்ளார் என்று பல நினைவுகளை பதிவு செய்தனர்.  
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் கி.ரா. படைத்த படைப்புலகம் அசாத்தியமானது. அதற்கு தூண்டுகோளாக கணவதி அம்மாள் உடனிருந்தார் என்று பேசினார். அண்ணன் சிவகுமார் தனது உரையில் கி.ரா.- கணவதி அம்மாள்  வாழ்க்கையைச் சொல்லும்போது, சத்தியவான்-சாவித்திரி, மௌத்கல்ய முனிவர் - நளாயினி, கார்ல் மார்க்ஸ் - ஜென்னி ஆகியோரோடு ஒப்பிட்டு விரிவாக பேசினார். அது விரைவில் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வரவுள்ளது. 

••••••••

கி.ரா.வின் எடுத்துரைப்பு ஒரு சொக்குப்பொடி; கணவதியம்மாளின் நிலை குறித்து எழுதுகையில் கைச்சொடுக்கில் வருகிறது அந்தச் சொக்கு. அம்மா, மாடிப்படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்து கால் வைத்துச் சறுக்கி விழுந்து விடுகிறார்; ‘சட்டடியாய்ப்’ படுத்துவிட்ட அம்மாவை நினைத்துக் கலக்கமாகி
‘இடி விழுந்தான் கூத்தை 
இருந்திருந்து பாரு
என்கிற மாதிரி ஆகிவிட்டது கதை’
என்று பேச்சிடையில் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார் கி.ரா. அன்றிலிருந்து இடுப்பு வலி அம்மாவை மீண்டு எழவிடவில்லை.
அம்மாவும் அய்யாவும் அவர்கள் ஓருரு. தன்னின் முழு உருவாகிய அம்மா, சட்டடியாய் படுத்துக்கிடப்பது பற்றி கி.ரா. எழுதுகிறார். “தோளுக்குத் தோளாக வாழ்நது வந்த எனது ‘அய்ராவதம்’ சாய்ந்துவிட்டது. நேரங்கெட்ட நேரத்தில் எத்தனை பேர் வந்தாலும் ருசி குறையாமல் பசி தீர்த்திடுவாள். காட்டிலும், மேட்டிலும் உடம்பைப் பிழிந்து உழைத்தவள், உழைத்ததுக்கெல்லாம் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.”
தமிழகத்து இலக்கிய ஆளுமைகள், அறிவாளுமைகள் பலரும் தன் இல்லத்துப் பெண் பற்றிப் பெரும்பாலும் பதிவு செய்யாத குறையை கி.ரா.வின் சொற்கள் சரிசெய்துள்ள.

••••••••
மண்-ஆ பரணமாய் மாதரசி நீர்இருந்து
விண்-ஆ பரணமாய் வீற்றிருக்கப் போனீரே..!?

தொண்ணூத்தி ஏழைவிட்டுத் தொலைதூரம் போய்விட்ட
எண்பத்தி ஏழுஉம்மை எண்ணிக் கலங்குகிறோம்!

கி.ரா.வின் நெஞ்சில் கிளைவிட்ட ஓர்ஆணி
வேராய் இருந்(து)இப்ப வேறிடஞ் சென்றவரே!

ஆரும் நமோதில்ல அன்னாரைப் பார்க்கஇண்ணு
ஈர மனசோடும் எம்மிடஞ் சொன்னவரே!

நான்இருக்கும் போதேஎன் நாயகர் போகணும்ணு
ஊன்உருக உயிர்உருக உள்ளந் திறந்தவரே!

வீட்டுக்கா ரர்உசுரும் உம்உசுரும் ஒண்ணல்லோ?
கூட்டைவிட்டுப் புள்ஏகக் கிளை-விதவை ஆயிடுச்சே?!

பாதி உசுரவச்சிப் பர்த்தாவோ இங்கிருக்க
மீதி உசுரெடுத்து மேலுலகம் போனவரே!

பக்கத்துப் பூஉதிரப் பார்த்திருந்த பூவொண்ணு
விக்கித்துப் போயி வெலவெலத்துப் போயிடுச்சே?!

கொள்ளுப்பே ரன்பேத்தி கொஞ்சறதும் விட்டுவிட்டு
அள்ளி எடுத்தே அணைக்றதும் விட்டுவிட்டுப் 

போக மனசுவந்த பொல்லாத நேரமென்ன?
சாகத் துணிவுகொண்ட சாத்தியமும் தானென்ன?

ஒம்மனசு பூவாச்சே ஓ, கண வதியம்மா..!
அம்ம,பின் கல்லாச்சோ அப்பாவை யும்பிரிய?

தாரமாய் வந்(து)அவர்க்குத் தாயாயும் ஆனவரே!
ஓரமாய் விட்டும் ஒதுங்கியதில் ஞாயமுண்டா?

படமாகிப் போனஉம்மைப் பார்த்ததும் எம்கண்கள்
குடம்ஆகிப் போய்நீரைக் கொடுவதும் என்னசொல்ல?

போட்டரோ ஜாமாலை பொலபொலண்ணு இதழ்கண்ணீர்
கூட்டியதும் பார்த்துக் குலுங்கி ஆழுதோமே?!

ஆருமே கட்டிக்க ஆசைப் படாநிலையில்
ஊருமே தான்வியக்கக் கி.ரா.வின் கைப்பிடிச்சீர்!

உங்க ரசனை ஒசந்த ரசனையல்லோ?
இங்கஇது கி.ரா. இடமிருந்து வந்ததுவோ?

பழத்தைத் தொடறாப்போல் பாத்திரத்தை யும்தொடுவீர்...
குழந்தையத் தூக்குறாற்போல் கூட எடுப்பீரே...!?

இந்தமென்மை யாருக்கும் இந்த ஜென்மம் வந்திடுமா?
அந்த பிரியமுந்தான் ஆருக்கும் வாய்ச்சிடுமா?

சின்ன தொருசெயல் செஞ்சாலும் தான்அதுல
என்னஒரு நேர்த்தி எனவியக்க வைப்பீரே!?

தண்ணி குடுத்தாலும் டானிக்குப் போலிருக்கும்;
வெந்நிதந்தா டீப்போல தித்தித்துக் கொண்டிருக்கும்..!

வாசக்கம் மந்தோசை வார்த்நீர் போட்டாக்கா
நாசியொண்ணு போறாதே - நாலு திசைமணக்கும்!

சொந்தத்துக் கெல்லாமே சோறுபரி மாறையில
முந்திமுந்தி அன்பையல்லோ மொத்தமாய்க் கொட்டிடுவீர்?

காலமெலாம் மௌனம் கடைப்பிடிச்ச நீங்கதான்
ஓலமேலாம் இட்டீராம் சாகுந் தருவாயில்...!

முரண்டு பிடிச்சீரோ மூட எமன்அழைக்க?
முரட்டுத் தனமாக மென்னி பிடிச்சானோ?

மீண்டு திரும்பிவரும் சாத்தியம்இல் லேண்ணுதான்
நீண்ட குரல்எடுத்து நீரழுது சென்றீரோ?

உங்க சிரிப்பையெலாம் எங்க மறைச்சிவச்சீர்?
உங்க கனிவையெலாம் எங்க பொதைச்சிவச்சீர்?

ஆத்தீ!கொள் ளுப்பேரன் அழகான உதட்டுலயா?
பேத்தி பிறைநிலவின் பிள்ளைச் சிரிப்புலயா?

மூணுமுறை எம்வீட்டு முற்றம் மிதிச்சவரே!
வாணாளின் பாக்கிய மாகக் கருதுகிறேன்!

- ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்.

••••••••••••

இறுதியாக கி.ரா. தன்னுரையாற்றினர். கணவதி அம்மாளுடன் 60 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை பல சம்பவங்களோடு இந்த வயதிலும் நினைவாற்றலோடு பேச்சு வழக்கில் சிலாகித்து பேசியது அனைவரையும் கவர்ந்தது. 

கணவதி அம்மாளின் படத்திறப்பு விழா நேற்று மனநிறைவான விழாவாக நேற்றிரவு 10 மணிக்கு நிறைவு பெற்று சென்னைக்கு திரும்பும்போது, நல்ல பொறுப்பை எடுத்து செய்தோம் என்ற மகிழ்வோடு காரில் பயணிக்கும் போது அதற்கேற்ற திரைப்பாடல்களை கேட்கவும் முடிந்தது. 

• உன் கண்ணில் நீர்வழிந்தால்...
• வீடுவரை உறவு வீதிவரை மனைவி...
• போனால் போகட்டும் போடா...
• சோதனை மேல் சோதனை...
• இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட...
• கண்ணிலே என்னவொன்று கண்கள் தான் அறியும்....
......
இப்படியான பல பாடல்கள் கேட்டுக்கொண்டே நள்ளிரவில் பயணித்தது நேற்றைய நிகழ்வு நீங்கா நிகழ்வாக என்றைக்கும் இருக்கும்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-10-2019

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#ki_ra
#கி_ரா
#நடிகர்_சிவகுமார்
#பழ_நெடுமாறன்


  





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...