Monday, October 21, 2019

கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?


கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?
---------------------------------------------------
தமிழக - கேரள முதல்வர்கள் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்புழா பிரச்சனைகள் குறித்து மட்டும் பேசப்பட்டதாக தெரிகிறது. இருமாநில அனைத்து நதிநீர் பிரச்சனைகளை குறித்தும் பேசவே இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதுகுறித்து எனக்கு வாட்ஸ்அப்பில் பாலக்காட்டிலிருந்து பேச்சிமுத்து கீழ்கண்ட செய்தியை அனுப்பினார்.
“நண்பர் KSR அவர்களுக்கு, பாலக்காடு பேச்சிமுத்து வணக்கம். கேரள தமிழக முதல்வர்கள் மற்றும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய அஜண்டா PAP திட்டம். "நடைமுறைப்படுத்தல்". வேறு திட்டங்கள் பற்றிய பேச்சுக்கள் ஏதும் திருவனந்தபுரத்தில் நடைபெறவில்லை. கேரளா சித்தூர் தொகுதி MLA வும் கேரள நீர்வளத்துறை அமைச்சருமான K.கிருஷ்ணன் குட்டி, தமிழக சட்டமன்ற துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் கோவை வேலுமணி இவர்கள் முயற்சியால் தான் இரு மாநில PAP நீர்பங்கீட்டுப் பேச்சு, நடைபெற்றது. கேரள நீர்வளத் துறை அமைச்சர் மிகச்சிறந்த ஒரு விவசாயி. உழவர் கஷ்ட நட்டங்களைப் பரந்த மனப்பான்மையோடு அணுகுபவர். கேரள வறட்சிப் பகுதிகளில் வாழும்சித்தூர் சட்டமன்ற எல்லைக்குட்பட்ட தமிழ் உழவர்கள் சிரமம் பற்றி நன்கு உணர்ந்தவர். தமிழ் பகுதி யான்மூலைத் துறை வலது கரைப் பாசனவசதிக்கு மிகப் பெரிய தொகையை கேரள CM இடம் பெற்று வாய்க்கால் வேலன் தாவளம் வரை நீட்டும்பணிகளை நடத்தி வருகிறார். நிச்சயமாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் பயன் கிடைக்கும் வகையில் PAP ல் மேலும் நீர் நிரப்ப. எதிராக இருக்கும் தற்போதைய தடைகள் அகற்றப்பட்டு, விவசாயிகள் மகிழும் வண்ணம் கேரளா உ தவும் மனநிலையில் இருக்கிறது என்பதை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியின் நண்பன் என்ற வகையில் நான் அறிந்து கொண்டதை இங்கு பதிவிடுகிறேன். இரு மாநில உழவர்கள் இவ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்களாக.”
ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்புழா ஆகியவை முக்கியமான தமிழர்களின் பிரச்சனை தான். மறுக்கவில்லை. தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள். இந்த இரண்டு பிரச்சனை மட்டும் பேசுவதற்கு இரண்டு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணையை கடந்த 17-10-2019 அன்று வெளியிட்டுள்ளது. அந்த குழுவில் அதிகாரிகளைத் தவிர விவசாயப் பிரதிநிதிகள், பொது மக்கள் என யாரும் இடம்பெறவில்லை.
ஆனால், கேரளாவுடன் இன்னும் பல பிரச்சனைகள் தீர்க்கக்படாமல் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீரில்லாமல் தமிழகத்தின் பல வட்டாரங்கள் தவிக்கின்றது. அதைகுறித்தெல்லாம் ஏன் பேசவில்லை. அவை வருமாறு, கேரளத்தின் அச்சன்கோவில் – பம்பையை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பது, குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பம்பாறு போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதையெல்லாம் பேசித் தீர்க்க வேண்டாமா?
அதுமட்டுமல்ல, மேற்கு நோக்கி பாயும் கேரள நதிகளின் எச்ச நீரை தமிழகத்திற்கு திருப்புதல் போன்ற பல பிரச்சனைகளில் மத்திய அரசின் குழுக்களின் பரிந்துரைகளைக் கூட கேரள அரசு தூக்கி எறிந்தது. இதுகுறித்து 1983இல் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012இல் தீர்ப்பு வழங்கியும் எந்த நடவடிக்கையும் விரைவாக இல்லை என்பது தான் வேதனையான விடயம். கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?
-கே.எஸ். இராதாகிருஷ்ணன். 21-10-2019.
#கேரள_நதிநீர்_பிரச்சனை #KSRPostings #KSRadhakrishnan_Postings



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...