Wednesday, October 16, 2019

"ராஜீவ் படுகொலை... File No. 1/12014/5/91-IAS/DIII எங்கே?” - கே.எஸ்.ஆர் கிளப்பும் கேள்விகள்!

சென்னையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
``ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீது ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், விடுதலைப்புலிகளே இந்த விவகாரத்தில் அமைதிகாக்கும்போது, எதற்காக சீமான் இப்படி கருத்து சொன்னார் என்று தமிழீழ ஆதரவாளர்களும் கொந்தளித்து வருகிறார்கள்.
சீமான் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரான எம்.பி ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, சின்னமலையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர்.
மறுபுறம் சீமானோ, “நான் பேசியது சரிதான். இதை நான் இப்போது பேசவில்லை. 25 வருடங்களாகப் பேசிவருகிறேன். தேர்தல் நேரம் என்பதால் பேசாமல் இருக்க முடியாது. தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மக்களிடம் எடுத்துச் சொல்லியே ஆகவேண்டும்” என்று தனது கருத்தில் இன்னும் உறுதியாகவே இருக்கிறார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்தவரும், தமிழீழ ஆதரவாளருமான தி.மு.கவின் செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘சீமானின் பேச்சு... ராஜீவ் காந்தி படுகொலையில் விடைதெரியாத கேள்விகள்’ என்ற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரின் பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலைக்காகத் தமிழகத்திலும், கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்களும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், ராஜீவ்காந்தி மறைவு குறித்து அதிர்ச்சி மதிப்புக்காகச் சிலவற்றைப் பேசுவது, ஏழுபேரின் விடுதலைக்கு முட்டுக்கட்டையையே உண்டாக்கும். அவர்கள் சிறையை விட்டு வெளிவருவதற்கு உதவாது.
ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள் உள்ளது என்று அந்தக் கேள்விகளை வரிசையாகப் பட்டியலிட்டுள்ளார்
1991 ம் வருடம் மே 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, `அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம்’ என்று சொல்லியும், ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது?
ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தியை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் காந்தி பிரசாரத்திற்குச் சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி.சாகர். ஆனால், அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள், ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரசாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒடிசாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் காந்தியின் முதல்கட்ட சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களுக்குச் செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன், விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
மேலும், ராஜீவ் காந்தி கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல், அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாகக் கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ்.
இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டுப் பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு, தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவ் காந்தியுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
சென்னையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்ல வேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே ராஜீவுடன் குப்தா செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
ராஜீவ் காந்தி மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன், ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்கு உள்ளானதா...இன்று வரை அவர்களை ஏன் சிறப்பு புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை... யார் அந்த பல்கேரியர்கள்... அவர்கள் எங்கு சென்றார்கள்... யார் அந்த இரண்டு அயல்நாட்டுப் பெண் பத்திரிகையாளர்கள்... அவர்கள் எங்கு சென்றார்கள்?
அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவ் காந்தியைப் பேட்டி கண்டார்கள். ஆனால் தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்?
மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா? தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, `பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கைக் கொன்றது சி.ஐ.ஏ.தான்’ என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச்சொல்லவேண்டும், அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன, தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான், எல்.டி.டி.ஈ-யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை சிறப்பு புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் படுகொலைக்கு முன்பாக யாசர் அராபத் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகரிடம், “ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று சொல்லியிருந்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல் என்பதை, ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டு இருந்தால் மட்டுமே அராபத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு” என்கிற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார்.
மேலும், “மரகதம் சந்திரசேகர், ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவே இல்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
சிவராசனும், தனுவும் ராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை. அதேபோல், சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள்தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாசாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?” என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை... பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை சிறப்பு புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவதற்கு ஆதாரம் ஏன் வெளியிடவில்லை?
சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?
அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராதபோது சுப்பிரமணியன் சுவாமி மட்டும் `விடுதலைப்புலிகள்தான் ராஜீவைக் கொன்றார்கள்’ எனக் கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை, விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
இந்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த எம்.கே.நாராயணன், ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற, சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமனின் பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்குக் கொடுத்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஃபைல் (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திரா சாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்மராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததன் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்தக் கோப்புகள் அழிக்கப்பட்டது?
தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா, கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை? ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக, ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். அது உண்மையா என்பதை விசாரித்தார்களா?
`வெளிநாட்டு உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணியன் சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல்’ என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரத்தை பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாகக் கூறுவது எப்படி?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்த போதும், டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கரெட் ஆல்வா அங்குதான் நடத்தியாக வேண்டும் எனக்கூறியது உண்மையா என்று விசாரிக்கப்பட்டதா?
பெல்ட் பாம் (வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது என்று இதுவரையில் விசாரிக்கவே இல்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க, வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லி பேரறிவாளனுக்கு தூக்குத்தண்டனை அறிவித்து, 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?
ராஜீவ் கொலை வழக்கில் இதுபோன்ற பல கேள்விகளுக்கு 26 ஆண்டுகளாக விடை கிடைக்கவில்லை. அப்படி இருக்க, காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக் கொண்டதாகச் சொல்லி, ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறை. அதை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்திற்கும், நேர்மைக்கும் உகந்ததா?
இப்படி பல கேள்விகள்...?” என்று தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடமிருந்து இப்படி சந்தேகங்கள் எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கேள்விகள் ஏற்கெனவே ராஜீவ் படுகொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லிவரும் ஈழ ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் படுகொலையில் விடுதலைபுலிகளுக்குப் பின்னால் சர்வதேச சதி இருந்தது என்கிற கூற்றையே இந்தக் கேள்விகள் மூலம் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுப்புகிறாரா என்கிற சந்தேகமும் இப்போது பலரிடம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள்.

#ராஜீவ்காந்தி_படுகொலை
#சில_கேள்விகள்‘
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...