Thursday, October 31, 2019

மூத்த பத்திரிக்கையாளர் மணா #தமிழ்நாடு_63..... சிலரின் பர்வைக்கு...

எல்லை நிர்ணயிக்கப்பட்டு தமிழகம் உருவான நாள்!
*
1956 நவம்பர் 1 ஆம் தேதி.
தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட தினம். இன்னொரு விதத்தில் சொன்னால் – தமிழகத்தின் வரைபடம் உருவான தினம்.

தமிழகத்தில் எல்லைகளை நிர்ணயிக்கப் பெரும்போராட்டமே நடந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிவார்களா? 

எத்தனை தலைவர்கள் அதற்காகப் போராடியிருக்கிறார்கள்?

சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் தமிழ்நாட்டின் எல்லைகள் வேறு!
சிலவற்றை தமிழகத்துடன் இணைத்தோம். சிலவற்றை இழந்தோம்.



ஆந்திராவில் உள்ள சித்தூர், நெல்லூர், வடவேங்கடம் போன்றவற்றை இழந்தோம். கர்நாடகத்தில் உள்ள கொள்ளேகால், கோலார் தங்கவயல்,  பெங்களூரூவை இழந்தோம். 







கேரளத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, பாலக்காடு போன்றவற்றை இழந்தோம்.

நேசமணி போன்றவர்கள் பெரும் கிளர்ச்சியை முன்னெடுத்த பிறகே கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.

கேரளமும், கர்நாடகமும், ஆந்திராவும் அவை உருவான தினத்தைக் கொண்டாடுகின்றன. 

ஆனால் தமிழர்கள்  அந்தத் தினத்தைக் கொண்டாட மறந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று அதற்கென விழாவை எடுத்தவர் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி, போன்றவர்களுடன் அன்றைய விழாவில் கலந்து கொண்டவர், அதற்கென பல தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

அதே சமயம் கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் தியாகி பி.எஸ்.மணியுடன் பங்கேற்றவர் அன்றைய சட்டமன்ற உறுப்பினரான பழ.நெடுமாறன்.

2006 ஆம் ஆண்டு சென்னையில் ‘தமிழ்நாடு-50’ என்கிற தலைப்பில் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தினார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பு இந்த விழாவை முன்னின்று நடத்தியது. 

ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, பழ.நெடுமாறன், இரா.செழியன், வழக்கறிஞர் ஆர்.காந்தி போன்றவர்கள் கலந்துகொண்ட இந்த விழா நடந்தபோது ஆனந்தவிகடனில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய தமிழகம் 50 என்கிற கட்டுரை வெளிவந்தது.

புதிய பார்வை – இதற்காகத் தனிச்சிறப்பிதழே வெளியிட்டது.

தமிழகம் இழந்தது குறித்த வருத்தமும், சில பகுதிகள் இணைந்தது குறித்த மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்படும் தினமாக அமைந்திருக்கிறது தமிழ்நாடு உருவான நாள்.

விருதுநகரில் சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிறகு, அறுபதுகளில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் குறித்து விவாதங்கள் எல்லாம் நடந்தபிறகு, 1967ல் அண்ணா தமிழக முதல்வர் ஆனபிறகு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதெல்லாம் நடந்தாலும்,
தமிழக எல்லை தீர்மானிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நாள் நவம்பர் 1.

நாளையோடு 63 ஆண்டுகள் நிறைவடைந்து அதற்கான விழாவும் எடுக்கப்படுகிற நேரத்தில், அதற்காகப் பாடுபட்டவர்களையும் விழா எடுத்து, புத்தகம் வெளியிட்டு நினைவூட்டியவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...