Saturday, October 26, 2019

. #வாயில்லாப்_பூச்சியின்_சபிக்கப்பட்ட #வாழ்க்கை ! #நெல்லை_ராமச்சந்திரன் குடும்பத்திற்கு இயற்கை அருள் புரியட்டும்

#வாயில்லாப்_பூச்சியின்_சபிக்கப்பட்ட #வாழ்க்கை !
#நெல்லை_ராமச்சந்திரன் குடும்பத்திற்கு இயற்கை அருள் புரியட்டும்
-------------------------------
அவர் பெயர் ராமச்சந்திரன் என்பதே இன்றுதான் தெரியும். 30 வருசமா தெரிஞ்ச ஒருத்தர் பெயரை இன்று அறிவது என்பதே பைத்தியக்காரத்தனம்தான். திருநெல்வேலியின் எளிய மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் கவிஞர் கிருஷி எனக்கு இவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர் அவரது கடைக்கு அழைத்துச் சென்றார். நெல்லை ஜங்சன்  பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான அரசன் பேக்கரியின் எதிர்புறம் வடிகால் மேல் சின்னப் பெட்டிக்கடை. குட்டியூண்டு கடை. உள்ளே ஆள் அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்குத்தான் அதன் தோற்றமே.
" தம்பி" என சார்வாளின் குரல் கேட்ட மாத்திரத்தில் உள்ளிருந்து ஒரு கை, 
தேன் மிட்டாய் டப்பா மேல் ஒரு கோல்ட் பில்டர் சிகரெட்டை எடுத்து வைத்தது.
" தம்பி..இன்னோன்னு கொடுங்க.."
என்றதும் சிகரெட் வந்தது. அவர் குள்ளமாய் அமர்ந்திருந்த்து அப்போதுதான் தெரியும். 
" நம்ம நண்பர் ...கவனிச்சுக்கங்க.." 
என்றதும் விஷ் பண்ணினார். கை சற்று குழைவாய் சாய்ந்திருந்த்து.

கடையில் தேன் மிட்டாய், கடலை மிட்டாய் வகையறா..வாராந்திர இதழ்கள், நாளிதழ்கள்...மாங்காய், எலுமிச்சை ஊறுகாய் பாக கெட்டுகள், சாஷேயில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், ஷாம்பூ வகையறாக்கள்...
ஒருமுறை ஜூனியர் விகடன் வாங்கும்போது, அமர்ந்தபடியே ஒரு ஹூக் வைத்த கம்பியால் லாவகமாய் எடுத்துக் கொடுத்தபோதுதான் தெரிந்தது அவர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது. 13 வயதில் இருந்தே இந்தக் கடையில் இருக்கிறாராம்.
அவர் வாழ்வே இந்தப் பெட்டிக்கடைக்குள் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.

வீட்டிற்கே செல்ல மாட்டார். வாரம் ஒருமுறை செல்வார். இங்கேயே ஒருக்களித்தபடி மர நாற்காலியில் உட்கார்ந்தே தூங்குவார். முன்புற தகர கதவை உட்புறமாக லேசாக சாத்திக் கொள்வதுண்டு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, கடையின் பின்புறமுள்ள வடிகாலில் அமர்ந்து வெளிக்குப் போய்க் கொள்வார். பக்கத்தில் உள்ள மாநகராட்சி தண்ணீர் பைப்பில் இருந்து வாளியில் நீரை அள்ளி கழுவிக் கொள்வார். குடும்பம் எல்லாம் உண்டு. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்..
( வயது 16, 11). தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர் நமது ராமச்சந்திரன்.
தமிழக அரசு தரும் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த சலுகைகளையும் பெற்றதில்லை.
" நாமே சுயமா சம்பாத்தியம் பண்ணனும் சார்.." என்பார். பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கணும் என்பார். போலியோ பாதிப்பினால் கால்கள் சூம்பிப் போயிருக்கும். தவழ்ந்தே நடப்பது குடும்பத்தினர் மட்டுமே அறிவர்.

நெல்லை மாநகர் பொலிவுறு நகராக மாறப் போகிறது இல்லையா?..பேருந்து நிலையத்தை இடித்து விட்டு 300 கோடி செலவில் புத்தம் புதுசாய் கட்ட போகிறார்கள். கடைகளைக் காலி பண்ணச் சொன்னார்கள். கால அவகாசம் முடிந்த நிலையில், கடைகளை இடிக்க ஆரம்பித்தது மாநகராட்சி.
ராமச்சந்திரன் தலையில் இடிவிழுந்த்து போலத்தான். என்ன செய்ய?
வேறெங்கே போக? மாற்று ஏற்பாடு எதுவுமில்லை. எங்கு போனாலும் இந்த " வசதி" அமையுமா என்ன?
குடும்பத்தில் ஆறுதல் சொன்னார்கள்.
வேறு இடத்தில் கடை போடலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.
வந்த வாடிக்கையாளர்களிடம், " நான் போராடப் போகிறேன், மாற்று இடம் கேட்டு " எனச் சொன்னார்.
நேற்று அதிகாலையில் 4 மணிக்கு கடையைத் தட்டிய போது உள்ளே இறந்து கிடந்தார்.
நாற்காலியில் அமர்ந்தநிலையில் பாவாடை நாடா துணியினால் கழுத்தை இறுக்கிய நிலையில் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சுட்டாப் போதும்...கல்யாணம் எப்படியும் நடந்துரும் சார் என கண்களில் ஒளி வீசப் பேசிய ராமச்சந்திரன், ஒளியற்று இறந்து கிடந்தார். 48 வயசு என்றார்கள்.

ஏன் ராமச்சந்திரன் இப்படிச் செய்தீர்கள்?

வனங்களை அழித்து, பெரிய பெரிய தொழிற்சாலைகள் வரும்போதெல்லாம், விலங்குகள், பறவைகள் இடம் பெயர்ந்து சென்றுவிடும். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர்கள் புல்டோசர் கீழ் நசுங்கி
சிதைந்துபோகும். இறந்த உயிர்களைப் பற்றி யாரும் கவலைகொள்வதுமில்லை.

சபிக்கப்பட்ட வாழ்க்கை !



No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...