நேற்று (18-09-2015) புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக, நேற்றைக்கு அதிமுகவில் உறுப்பினராகச் சேர்ந்து மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அதிமுக சார்பில்
செல்வந்தரும், தொழிலதிபருமான என்.கோகுலகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று காலை வரை அரசியலுக்கே சம்பந்தமில்லாதவர் தன்னிடம் இருக்கும் பணபலத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.
மருத்துவக்கல்லூரியில் படிக்க பணம் கட்டி இடம் வாங்குவதுபோல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பணம்படைத்தவர்களுக்கு மட்டும்தானா?
40ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் களப்பணி செய்து உழைத்தவர்களுக்குக் கூட வாயுப்புகள் மறுக்கப்படுகின்றன. ஏற்கனவே கடன் வாங்கி நாட்டை ஏமாற்றிய மல்லையா, எம்.ஏ.எம்.இராமசாமி போன்ற பல செல்வந்தர்கள் சம்பந்தமில்லாமல் ராஜ்ய சபை உறுப்பினர் ஆனார்கள். அதுபற்றிய பல ரகசியங்கள் கமுக்கமாக வெளித்தெரியாமல் போனது.
பணம் படைத்தவர்களுக்குத் தான் அரசியலா? தகுதி, உழைப்பு, நேர்மைக்கு அரசியலில் அங்கீகாரம் இல்லையா? புதுவை முதல்வர் என்.ரங்கசாமி 2011 தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, பின் அதிமுகவோடு பிணக்கும் ஏற்பட்டது. தற்போது இந்த திடீர் ஒட்டுதலில் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
அதிமுக எப்படி எந்த அடிப்படையில் என். கோகுலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தது என்பது வேடிக்கையாக இருக்கின்றது. 24மணி நேரத்தில் எந்தவித அரசியல் தகுதியும் இல்லாமல் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகின்றார் என்றால் நமது ஜனநாயகம் எங்கே போகின்றது என்றே தெரியவில்லை.
1991லிருந்து குற்றவாளிகளின் சரணாலயமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மாறிவிட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களில் நூற்றுக்கணக்கானோர் குற்றப்பிண்ணனி உடையவர்களாக உள்ளார்கள்.
“சத்யமேவ ஜெயதே” என்ற மொழியின் பயன் என்ன?
சபாக்களுக்குச் செல்லவேண்டிய வைஜெயந்தி மாலா நாடாளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டிய இரா.செழியன் வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் தானே நமது மக்களாட்சி. அதனால் தான் மாவோயிஸ்ட்களும், தீவிரவாதிகளும் வலுவாகின்றனர்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-09-2015
#Democracy? #இதுதான்_மக்களாட்சியா_நாடாளுமன்ற_ஜனநாயகமா.
#KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment