Saturday, September 12, 2015

எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி - Sri S.Ramasamy Naidu Memorial College, Sattur.

எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி - Sri S.Ramasamy Naidu Memorial College, Sattur.



கடந்த 09-09-2015 நாளன்று, இராஜபாளையம், சங்கரன்கோவில் திருமணங்களில் கலந்துகொண்டுவிட்டு சங்கரபாண்டியபுரம் - வழியாக சாத்தூரில் நடைபெறும் மற்றொரு திருமணத்திற்குச் சென்றபொழுது வழியில் ஏழாயிரம்பண்ணை - சாத்தூர் சாலையில் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி கட்டிடங்கள் மிடுக்கோடு நிற்பதைப் பார்க்க முடிந்தது.

1960களில் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் 84மாணவர்களோடும், 7 ஆசிரியர்களோடும் தொடங்கிய கல்லூரிக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகம்பட்டி வி. வேணுகோபால கிருஷ்ணசாமி நாயுடு தலைவராக இருந்தார்.

பின்நாட்களில் இக்கல்லூரி சாத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பகட்டத்தில் படந்தால் சாலையிலும், கிறித்துவ ஆசிரியர்பயிற்சிப் பள்ளியிலும் துவக்கத்தில் இயங்கியது.

தற்போதுள்ள வளாகம் 84ஏக்கரில் காந்தியவாதியான சங்கரபாண்டியபுரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.சீனிவாசநாயக்கர், முத்தால நாயக்கர் பட்டி பி.சி.ராமசாமி நாயக்கர். மணிப்பாறைப்பட்டி கோபாலசாமி நாயக்கர், சங்கரலிங்காபுரம் எஸ்.எஸ்.கே இராமசாமி நாயக்கர் ஆகியோர் அடங்கிய குழுவின் அயராத உழைப்பில் இக்கல்லூரி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்தது.

வானம்பார்த்த கரிசல் பூமியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரே கல்லூரியாக சாத்தூர் வட்டாரத்தில் விளங்கியது எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி. இக்கல்லூரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ராமசாமி நாயுடு அவர்களைப் பெயரைத் தாங்கி எஸ்.ஆர்நாயுடு கல்லூரி என்ற பெயரில் இயங்கிவருகின்றது.

இந்த எஸ்.ஆர்.நாயுடு காமராஜருடைய நண்பராக இருந்தார். பிற்காலத்தில் காமராஜருக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு சுதந்திரா கட்சியில் இணைந்து திரும்பவும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

எஸ்.ஆர் நாயுடு, ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு (முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்), ஜெயராம ரெட்டியார், தேனி என்.ஆர். தியாகராஜன், மடத்துப்பட்டி கோபால் நாயக்கர், நாகம்பட்டி வேணுகோபாலசாமி நாயுடு, கல்லுப்பட்டி வெங்கடாசலபதி போன்றோர் கூட்டாக இருந்து அப்போதுள்ள நெல்லைமாவட்டத்தின் வடபகுதியிலும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியிலும் ஆரம்பப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும் துவக்கக் காரணமாக இருந்தார்கள்.

சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி நாற்றங்காலாக துளித்து இன்றைக்கு ஆலவிருட்சமாக 111 ஆசிரியர்கள், 52பணியாளர்களுடன் 3110மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.
இதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சங்கரபாண்டியபுரம் சீனிவாச நாயக்கர் இருந்தார். அவர் வழியில் ஜெயவிலாஸ் குடும்பத்தின் டி.ஆர். தினகரன் அவர்கள் செயலாளராக இருந்து இக்கல்லூரியைத் திறம்பட நடத்திவருகின்றார்.

வெக்கை வெயில் அடிக்கும் கரிசல்காட்டு கிராமப்புற மாணவர்களுக்கு கல்விச் சரணாலயமாக இக்கல்லூரி இன்றைக்கு விளங்குவதைக் காண்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சிறப்பாக நாட்டிற்குப் பயன்படும் எந்த கல்வி நிறுவனத்தையும் பாராட்டிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதுவும் சிறுகச் சிறுக பல்வேறு சிரமங்களைக் கடந்து வளர்ச்சியை எட்டியுள்ள அமைப்புரீதியான பணியை சொல்லியாக வேண்டியது கடமை. வேறு என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்.

பெரிய வசதிபடைத்தவர்கள் அள்ளிக்கொடுத்து வளரவில்லை இந்தக் கல்லூரி. அந்த வட்டாரமக்கள் சிறுகச் சிறுகக் கொடுத்த நன்கொடையில் உருவெடுத்து இக்கல்லூரி இன்றைக்கு தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குறைந்த கட்டணத்திலும், மாணவர்களிடம் எந்தவித நன்கொடையும் இல்லாமல் செயல்படுகின்ற கல்லூரி. இம்மாதிரி கல்விநிறுவனங்களை நிறுவியவர்கள் தான் உண்மையான கல்வித் தந்தைகள்.

ஒரு கல்லூரியின் வளர்ச்சி என்பது எளிதான காரியமில்லை. கடின உழைப்பால் தான் அதனைச் சாதிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரி. 55ஆண்டுகளான உழைப்பின் பெருமிதம் தான் இந்த கல்லூரி வளாகம். கல்விக்கொடையாக கரிசல் பூமியில் விளங்கும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் பங்களிப்பாக இருந்தவர்கள், இருப்பவர்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

இக்கல்லூரியைப் போன்றே வானம்பார்த்த மண்ணில் கோவில்பட்டியில் கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி, துரைசாமிநாடார் கல்லூரி, இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரி, விருதுநகரில் வி.எச்.எஸ்.என் நாடார் கல்லூரி, வன்னியபெருமாள் நாடார் கல்லூரி போன்ற கல்லூரிகள் கிராமப்புற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக கல்விச்சேவையை அளித்து வருகின்றன. இங்கு படித்த சாதாரண விவசாயிகளின் பிள்ளைகள் பன்னாட்டு அளவில் பணிகளில் அமர்ந்து ஒளிர்கின்றனர்.


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2015.


#S.Ramasamy Naidu Memorial College, #Sattur.


#‎KSR_Posts‬
‪#‎KsRadhakrishnan‬

















No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...