Wednesday, September 16, 2015

ஈழத்தமிழர் பிரச்சனை - சில குறிப்புகள்

            
கடந்த காலத்தில்2009முதல் 2014வரை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை குறித்து மூன்று தீர்மானங்களைக் கொண்டு வந்த மேற்கு நாடுகளில் அமெரிக்கா முதன்மை வகித்தது. அப்பேர்பட்ட அமெரிக்கா தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளது.

போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் பொறுப்பை இந்த அரசிடமே ஒப்படைக்கலாம் என்றில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அமெரிக்கா இருந்தது. 
1945ம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,சோவியத் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய போர்க்குற்றவாளிகளின்மீது விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 
யூதர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் படுகொலைகளையும், சித்திரவதைச் சாவுகளையும் நிகழ்த்தி மனித குல விரோதிகளாக செயல்பட்டனர் ஜெர்மானிய நாசிஸ்டுகள் .  
சீனமக்களையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்களையும் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ஜப்பானை உலகமே கொடுங்கோலனாகக் கருதியது. டோக்கியோ சர்வதேச ராணுவ நீதிமன்றம் ஜப்பானிய போர்க்குற்றவாளிகளின் மீது விசாரணை நடத்தில் உரிய தண்டனைகளையும் வழங்கியது.
2008ம் ஆண்டு சூடான் நாட்டில் 25லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க பழங்குடியின மக்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் அதிபர் ஓமர் அல்பஷீர்,  கம்போடியாவில் 20லட்சம் மக்களை படுகொலை செய்த சர்வாதிகாரி போல்பாட், பல்லாயிரக்கணக்கான போஸ்னிய இஸ்லாமியர்களை கொலைசெய்த செர்பியாவின் சர்வாதிகாரி சுலோபோடான் மிலோசேவிக் போன்றவர்களை மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் சர்வதேச விசாரணை செய்து தண்டனைக்குள்ளாக்கினது. இவர்களில் செர்பிய சர்வாதிகாரி மிலோசேவிக் விசாரணை முடியும்முன்பே சிறையில் தற்கொலை செய்துகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளி இடி அமீன் சவுதி அரேபியா நாட்டில் இறந்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் முழு இலங்கைத் தீவும் தீவீர நிலைப்பாடுள்ள கட்சிகளை நிராகரித்து விட்டதாகவும் மிதநிலைப்பாடுள்ள கட்சிகளையே தெரிந்தெடுத்திருப்பதாகவும் இதன் மூலம் இன நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இது சரியா? மெய்யாகவே இச்சிறுதீவானது நல்லிணக்கத்தின் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதா?
முதலில் தெற்கைப் பார்க்கலாம். அங்கு இனவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? அல்லது இனவாத்தின் ஆகப்பிந்திய வடிவமாகக் காணப்பட்ட யுத்த வெற்றிவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ராஜபக்ஸ அணியை மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கவில்லை என்பது தெரியவரும். சிங்கள கடும் போக்குவாதிகளின் இதயத்தில் இப்பொழுதும் ராஜபக்ஸக்களே வீற்றிருக்கிறார்கள்.
பொதுபலசேனவானது யுத்த வெற்றிவாதத்தின் ஒரு குழந்தைதான். சிங்களபௌத்த கடும் போக்குவாதத்தை முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ராஜபக்ஸ சசோதரர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தனக்கென்று ஒரு தத்துவ அடித்தளத்தைக் கொண்டிருந்த, ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஜாதிக ஹெல உறுமயவை ராஜபக்ஸக்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே அரசின் அனுசரணை பெற்ற பொதுபலசேனவை ஹெல உறுமயவுக்கு எதிராக ஊக்குவித்தார்கள். இந்நிலையில் வெற்றிவாதத்துக்கு வாக்களிக்க விரும்பிய சிங்கள வாக்காளர்கள் தாய்க்கு வாக்களித்தால் போதும் குழந்தைக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கக் கூடும். மேலும் சரத்பொன்சேகாவா? ராஜபக்ஸ சசோதரர்களா? என்று தெரிவு செய்ய வேண்டி வரும் பொழுது மேற்கின் ஆதரவைப் பெற்ற பொது எதிரணியோடு அடையாளம் காணப்பட்ட சரத்பொன்சேகாவைவிடவும் ராஜபக்ஸக்களைத் தெரிவு செய்வதையே அவர்கள் விரும்பியிருந்திருக்கக் கூடும்.
இலங்கையில் தமிழர் பகுதியில் ஆறு பேருக்கு ஒரு இராணுவ வீரர் வீதமாக நிறுத்தப்பட்டிருக்கிறார். சின்னஞ்சிறிய நாட்டில் கப்பற்படை, விமானப்படை என்று சூழ்ந்து நிற்கும் இராணுவத்தின் எண்ணிக்கை மட்டும் நான்கு லட்சங்கள். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதற்காக ராஜபக்‌ஷேவால் சிறையிலடைக்கப்பட்ட சரத் பென்சேகோ 2009 போரில் ரசாயன குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைச் சாகடித்தவர். இன்றைக்கு அவருக்கு இராணுவத்தில் பதவியும் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி சிறப்பிக்கிறது சிரிசேனா அரசு.

சமீபத்தில் அளித்த பேட்டியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ரசாயன குண்டு தாக்கியே இறந்ததாக தெரிவித்திருப்பது இலங்கையில், சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி, கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கு, இலங்கை மத்திய அமைச்சரவையில் உரிய வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது; இதனால், தமிழர்கள் அதிர்ச்சி அடைத்து உள்ளனர்.
3௦ அமைச்சர்கள் :
இலங்கை அரசியலமைப்பிற்கான, 19வது திருத்தச் சட்டத்தின் படி, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை, 30 என ஏற்கனவே நிர்ணயித்துள்ளதோடு, இணை அமைச்சர்களின் எண்ணிக்கையும் வரையறுத்துஉள்ளனர். இதே காரணம் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப் போவதில்லை என, ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் முடிவெடுத்துள்ளன. இதையடுத்து, சிங்கள கட்சிகளின் தலைமைகள், தமிழர்களையும், தமிழ் பேசும், எம்.பி.,க்களையும் ஏமாற்றிவிட்டதாக, தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்துள்ள, தமிழ் எம்.பி.,க்கள், அதை வெளிக்காட்ட இயலாமல் தவிக்கின்றனர்; 'நாங்கள் நம்பிய, சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்' என்று சொல்ல இயலாமல் தவிக்கின்றனர். அதை வெளிப்படுத்தினால், தங்களின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதால் வேறு காரணங்களை கூறுகின்றனர்.ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஐக்கிய தேசிய கட்சியிலும், அதன் கூட்டணியிலும் போட்டியிட்ட தமிழர்களுக்கு அந்தஸ்து கிடைக்காமல் போனது.
இப்படி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்துள்ளதற்கு காரணம், பாராளுமன்ற அமைச்சரவையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்துவிடக் கூடாது; தமிழர்களின் ஆதிக்கம் வரவே கூடாது என்பது தான். இதை, தமிழர்கள் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம், தேசிய பட்டியலிலும், அமைச்சரவையிலும் இடம்பிடிப்பார் என்று அளித்திருந்த வாக்குறுதி, தேர்தல் முடிவுகள் வந்த பின், காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் வென்றுள்ள ராதாகிருஷ்ணன், திலகராஜ், திகம்பரம் ஆகியோருக்கும்; பதுளையில் வென்றுள்ள வடிவேல், சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு தருமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், இவர்களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 'ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, அறிவித்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியோ, தேசிய அரசு என்ற பெயரில், இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு, அதிகபட்ச அதிரடிப்படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உளவாளி என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வந்தது.

இதெல்லாம் தமிழர்களுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துவிட்டது; தமிழர்களின் ஆதரவு கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பை, 'நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவே' தமிழர்கள் கருதுகின்றனர். அமைச்சரவையில், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற, ஏற்கனவே போராடியது போல மீண்டும் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது தமிழர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ராஜபக் ஷே போல இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை இப்போது தகர்ந்து போய்விட்டது.

மகிந்த ராஜபக் ஷே பொதுத் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால சிறிசேன வாய்ப்பு தந்தது கூட, அவரின் ஆதரவு சிங்களர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்காக மட்டுமல்ல, தம் கூட்டணிக்குள் வளைப்பதற்காகவே என்பதை, தமிழர்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளனர். இலங்கையில், சிங்களர்களைப் போல, தமிழர்களும் சகல உரிமைகளைப் பெற்று நிம்மதியுடன் வாழ, சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் தமிழர்கள், பழைய சம்பவங்களை மறந்து, சிங்களர்களுடன் நல்லிணக்கமாக வாழும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இதைப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தும் மனநிலையைத் தான், கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, சிங்கள தலைமைகள் கடைபிடிக்கின்றன. இது, தமிழர்களை மீண்டும் போராட்ட சிந்தனைக்கு செல்லத் துாண்டுவதாகவே அமையும் என்று, இலங்கையின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உற்சாகமாக இருக்கிறார். மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளினூடே அவரைப் பார்க்கிறார்கள். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல சவால்கள் அவர் முன் நிற்கின்றன. ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலின்போது, இந்தச் சவால்களை அவரும் உணர்ந்திருப்பது புரிந்தது. நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே. இலங்கைக்குப் புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள்; கடைசியாக 1978-ல் இயற்றப்பட்டது, அதிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது. அதற்கும் முன்னால் 1972. இதில் உங்களுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. இதை இயற்ற நீண்ட காலம் பிடிக்காதா?

இலங்கை சுதந்திரக் கட்சி இதற்கு ஓராண்டு பிடிக்கும் என்று நினைக்கிறது. நாங்கள் (ஐக்கிய தேசியக் கட்சி) 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தேர்தல் நடத்த புதிய முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் கலந்திருக்க வேண்டும் என்பதில் எங்களுக்குள் கருத்தொற்றுமை இருக்கிறது. பொதுப் பட்டியலில் எவ்வளவு இருக்க வேண்டும், விகிதாச்சாரத்தில் எவ்வளவு என்பதில்தான் கருத்து வேற்றுமை நிலவுகிறது. நாட்டின் அதிபர் பதவி தொடர்பாகவும் கருத்துகள் வேறுபடுகின்றன. நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் பதவி கூடாது என்பது மக்கள் குழுக்களின் கருத்து. இலங்கை சுதந்திரக் கட்சி அக்கருத்தை எதிர்க்கிறது. இதை முற்றாகப் பரிசீலிக்க வேண்டும்; நாடாளுமன்றத்துக்கு வலுவூட்ட வேண்டும் என்பதே எங்களுடைய நிலை. மாகாண ஆணையங்களின் நிர்வாகம் குறித்தும் முடிவெடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையுமே பரிசீலித்தாக வேண்டி யிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட கால வரம்புக்குள் இதைச் செய்து முடித்துவிட முடியும் என்றே நான் நம்புகிறேன்.

தேர்தல் பிரதிநிதித்துவம் தொடர்பாக வலுவான, தெளிவான பார்வை உங்களுக்கு இருக்கிறதா?

அது இரண்டும் கலந்த கலவையாக, விகிதாச்சார உறுப்பினர் பிரதிநிதித்துவ முறையாக இருக்க வேண்டும். இரு பெரிய கட்சிகளும் அரசுகள் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றன; சிறிய கட்சிகள் தங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தேவை என்று விரும்புகின்றன. ஆனால் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்த விதத்தைப் பார்த்தால் இரு பெரிய கட்சிகளையும் மூன்றாவதாக ஒரு சிறிய கட்சியையும் விரும்புவது தெரிகிறது.

நேபாளத்தில் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்; புதிய அரசியல் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதலில் நம்பிக்கையுடன் இறங்கினார்கள். பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டார்கள். நீங்கள் எப்படி இதில் வித்தியாசப்பட முடியும்?
எங்களால் முடியும் என்றே நம்புகிறேன். எங்களிடம் அரசியல் சட்டம் இருக்கிறது, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றை உருவாக்கப் போகிறோம். நேபாளத்துக்கு அரசியல் சட்டமே கிடையாது. இந்த அரசியல் முறையை மாற்ற வேண்டும் என்பதில் எங்களுக்குள் ஒப்புதல் இருக்கிறது. தேர்தல் நடைமுறையை மாற்ற முனையும்போது வெவ்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிராந்திய கட்சிகள், சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்று ஒவ்வொன்றும் தனக்கு எது நல்லது என்று பார்க்கின்றன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு தொடர்பான தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக நியாயமான அரசியல் தீர்வு காண இதுவே சரியான தருணம் என்ற கருத்து நிலவுகிறது; இதையே நீங்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறீர்கள். அதிகாரப் பரவலை ஆதரிக்கிறீர்கள். நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் எப்படியிருக்கின்றன? ஏற்கெனவே, 2009-ல் போர் முடிந்த பிறகு கணிசமான ஆண்டுகள் வீணடிக்கப்பட்டுவிட்டன…
ஏராளமான நிர்வாகத் தடைகள் உள்ளன, அவற்றையெல்லாம் நீக்கியாக வேண்டும். மத்திய அரசும் மாகாண அரசுகளும் சேர்ந்து அதிகாரம் செலுத்தக் கூடிய துறைகளை மாகாண அரசுகளிடமே ஒப்படைத்துவிட வேண்டும் என்று சில மாகாணங்கள் கோரிவருகின்றன. இவையெல்லாம்தான் முக்கியப் பிரச்சினைகள். இலங்கையின் இரு பெரிய கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டணியும் பேச வேண்டியவை இவை. இது தொடர்பான உத்தேச யோசனைகளை வகுக்க வேண்டியவையும் அவைதான்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்?
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உடன் வரும். இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள முஸ்லிம்களின் நலன் எப்படி பாதுகாக்கப்படும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை உன்னிப்பாகக் கவனித்துவரும்.
நிலம், காவல் துறை தொடர்பான முழு அதிகாரங்கள் மாகாணங்களுக்கே தரப்பட வேண்டும் என்று தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிவருகிறார்கள்; இப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள்கூட எடுக்கப்பட்டன, ஆனால் தீர்வுதான் எதுவும் ஏற்படவில்லை…
நில நிர்வாகம் தொடர்பாக நிறையப் பேர் திருப்தி அடைந்திருக்கிறார்கள். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உண்மையான பிரச்சினை எதுவென்றால் தங்களுடைய நிலங்களிலிருந்து விரட்டப்பட்டவர்களை மீண்டும் அதே இடங்களில் குடியமர்த்துவதுதான். தேசியப் பாதுகாப்பை மனதில் கொண்டு, நிலங்களைப் படிப்படியாக விடுவித்துவிடுவோம் என்று கூறியிருக்கிறோம். ராணுவப் படைப் பிரிவுகள் இதற்கான மேல் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை நிர்வாகப் பொறுப்பை மாநிலங்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக மறுசிந்தனைகள் ஏற்பட்டுள்ளன. சுயேச்சையான போலீஸ் ஆணையம் இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கட்டும். 13-வது அரசியல் சட்டத் திருத்தம் மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் தேசியக் கூட்டணி இலங்கையின் கிழக்கு மாகாணத்திலேயே சிக்குண்டிருக்கும். அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் காவல் துறையில் அரசியல் நுழைய அனுமதிக்கப்பட்டது. மாகாணத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பான பொறுப்பு மாகாண ஆணையத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது சரியானதுதான். அரசியல் செல்வாக்குக்கு இடம் தராமல் அதை எப்படி அமல்படுத்துவது என்பதுதான் சிக்கலே. காவல் துறைத் தலைவர் இது தொடர்பான தேசியக் கொள்கையை வகுக்கலாம், சட்டம் ஒழுங்கை நன்றாகப் பராமரிப்பதை காவல் துறைத் தலைவர் செயல்படுத்தலாம். அவர் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே நிர்வாக அமைப்பாக இணைப்பது என்ற முடிவை 2006-ல் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது; அது இப்போது விவாதப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டதா?
அது தாற்காலிக இணைப்புதான், நிரந்தரமான இணைப்பு அல்ல. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாகாணங்கள் இணையலாம், அதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புகள் சம்பந்தப்பட்ட மாகாணங்களில் நடப்பதுடன் மாகாண ஆணையங்களும் அதை ஏற்றிருக்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். இப்போதும் அந்த சட்டப் பிரிவு அமலில்தான் உள்ளது.
மாகாணங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதில் பதப் பிரயோகத்தில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு தரப்பு கூட்டாட்சிதான் தீர்வு என்கிறது. இதற்கு முன்னால் தனியாட்சி, தனி மாகாணம் கோரப்பட்டது. அரசியல் சட்டம் இலங்கையை ஒரே அலகான அரசாகத்தான் பார்க்கிறது. இந்த பதப்பிரயோகச் சண்டையில் சிக்காமல், முக்கியமாகத் தேவைப்படுவது அதிகாரப் பகிர்வுதான் என்பதால் அதில் கவனம் செலுத்தினால் என்ன? பிளவுபடாத, ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள், மாகாணங்கள் தங்களுக்குத் தேவைப்படும் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரங்களை அரசியல் சட்டப்படியே பெற்றால் என்ன? இந்திய அரசியல் சட்டமும் கூட்டாட்சி என்று தன்னை அழைத்துக்கொள்வதில்லை. மாநிலங்களைக் கொண்ட ஒன்றிய அரசுதான் இந்தியா; இத்தகைய சர்ச்சையில் கவனத்தைத் செலுத்தாமல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் என்ன?
நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். கூட்டமைப்பு அரசியல் சட்டம் கொண்டுள்ள நாடுகளில் இருப்பதைவிட இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் முக்கியமானப் பிரச்சினை களைத் தீர்க்க இதை எப்படிப் பயன்படுத்துவது என்றுதான் பார்க்க வேண்டும். இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள உத்திப்படி இலங்கை அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை எந்த அளவுக்கு அதிகபட்சம் செயல்படுத்த முடியும் என்று பரிசீலிப்போம். இதைத்தான் நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.  மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கோரப்படுகிறது; உள்நாட்டு விசாரணையே போதும் என்ற கருத்தொற்றுமை இலங்கைக்குள் காணப்படுகிறது…
ரோம் நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடாததால் உள்நாட்டு விசாரணையே போதும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 2009-ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்கு மகிந்த ராஜபக்‌ஷ அப்போது அளித்த உறுதிமொழிக்குக் காரணம் என்ன என்று பலவாறாக விளக்கலாம். அவர்கள் ஒருகட்டத்தில் சர்வதேச விசாரணையை நோக்கி நகர்ந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் அந்த விசாரணை உள்நாட்டளவில்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினோம். நீதித் துறை மீது நம்பிக்கை இழந்த சிலர்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டனர். இதற்கு முன்னரும் வடக்கு, கிழக்கில் இப்பிரச்சினை நிலவியது. நீதித் துறை மற்றும் காவல் துறையின் சுதந்திரம் குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த அமைப்புகள் முறையாகச் செயல்படாமல் முடங்கிவிட்டன. இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண சந்திரிகா குமாரதுங்கவால் உதவ முடியும்; அவர் அதிபராக இருந்தபோது அரசியல் சட்டரீதியாகவே நல்ல யோசனைகள் வெளிவந்தன. இன்றைய சூழலில் அவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தேசிய ஒற்றுமைக்கான அமைப்பின் தலைவராகச் செயல்படுகிறார். இலங்கை சுதந்திரக் கட்சியிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இரு கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய அரசு அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வகுக்கும் குழுவுக்கு அவர்களுடைய கட்சி சார்பில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அதிபர் மைத்றிபால சிறிசேனாவும் குமாரதுங்கவும் இலங்கை சுதந்திரக் கட்சியினர் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்க பேருதவி புரிகின்றனர். இலங்கை சுதந்திரக் கட்சியைச் செல்வாக்கு மிக்கதாக்க இருவரும் செயல் படுகின்றனர். அவர் ஒரு முக்கியமான பங்கை இனி வகிப்பார்.
தேர்தல் முடிவுகள் இப்படித் தெளிவாக வருவதற்கு தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். உங்களுடையே தேசியப் பட்டியலில் ஒரு இடம்கூட அவர்களுக்குத் தரப்படவில்லை என்ற மனக்குறை அவர்களுக்கு இருக்கிறதே?
அவர்களுக்கு நல்ல பிரதிநிதித்துவம் தரப்பட்டி ருக்கிறது. மலைப் பகுதியில் வாழும் தமிழர்கள் அங்குள்ள மற்றவர்க ளோடும் சேர்ந்து வாழ்கின்றனர். முந்தைய காலத்தைவிட கடந்த சில மாதங்களில் அவர்கள் நன்கு முன்னேறி வருகின்றனர். அவர்களை மலைத்தோட்டத் தமிழர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக இலங்கையின் மலைப்பகுதியில் வாழும் தமிழர்கள் என்றே அழைக்க விரும்புகிறேன். காரணம், இன்னும் எத்தனைக் காலத்துக்கு அவர்கள் தோட்டத் தொழிலிலேயே நீடிப்பார்கள்? இப்போது தமிழ் வழி பயில மேலும் 25 பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் அங்கு சூழல் மாறும்; மேம்படும். மேலும் மேலும் பலர் தோட்டத் தொழிலிலிருந்து வெளியேறி ஏனைய தொழில்களுக்கும், ஏனைய நகரங்களுக்கும் செல்வார்கள். மலைத் தோட்டங்களில் வேலை செய்தாலும் வேறு வேலை செய்தாலும் எல்லோரும் இலங்கை வாசிகளே.
சிறுபான்மைச் சமூகத்தவர் கூட்டு சேர்ந்து வாக்களித்ததால் இந்தத் தேர்தல் முடிவு இப்படியானது என்று சிலர் பேசிவருகிறார்கள்; விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெறும் என்றுகூட அவர்கள் பேசிவந்தார்கள். தேர்தலில் அது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?
நான் அப்படி நினைக்கவில்லை. ராஜபக்‌ஷவின் தீவிர ஆதரவாளர்களைக் குறிவைத்து அப்படிப் பேசப் பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர்கள் ராஜபக்‌ஷவுக் குத்தான் வாக்களித்திருப்பார்கள். இத்தேர்தலில் வகுப்புவாதப் பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டன. எனவே ஆதரவைப் பெருக்கிக்கொள்ள எதையெதையோ பேசிப்பார்த்தார்கள், கடைசியில் அவர்களுக்கே தர்மசங்கடமாகிவிட்டது. நாங்கள் நாட்டைத் துண்டாட விடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். நாங்கள் பதிலுக்குச் சொன்னோம், “ஒருவேளை விடுதலைப் புலிகள் பலம் பெற்று மீண்டும் வந்தாலும் மிகச் சிறந்த ராணுவ அமைச்சர் நம்மிடம் இருக்கிறார் அவர்தான் உங்களுடைய கட்சித் தலைவரான இலங்கை அதிபர்” என்று. அதன் பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவரையே கண்டித்துப் பேசியிருந்தால் கட்சியிலிருந்தே தூக்கி எறியப்பட்டிருப்பார்கள். ராஜபக்‌ஷவும் அவருடைய சகாக்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன; பிரபாகரனுடன் தேர்தல் உடன்பாட்டுக்கு வருவதைவிட பதவி ஏதும் இல்லாமல் அரசியல் வனாந்தரத்தில் காலம் கழிக்க நான் தயார் என்று அறிவித்தேன், அதன்படியே பத்தாண்டுகள் பதவிக்கே வர முடியாமல் விலகியிருந்தேன். போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட நான் பிரபாகரனுடன் செய்துகொள்ளவில்லை, நார்வே அரசுடன்தான் செய்துகொண்டேன்.
2005 அதிபர் தேர்தலில் உங்களுடைய தோல்விக்கு அதுதான் காரணமா?
பத்தாண்டுகள் நான் பதவி இழந்திருந்தேன்.
அப்படியென்றால் (ரகசிய) பேரம் இருந்ததா?

பேரம் நடந்தது; அதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இலங்கை ரூபாயில் 200 கோடிக்கும் மேல் கைமாறியது; சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டித் தர பணம் தரப்பட்டது. எந்த வீடும் புதுப்பிக்கப்படவில்லை. 2006 இறுதி வரை, 2007 தொடக்கம் வரையில்கூட பணம் தரப்பட்டுவந்தது. நீங்கள் பிரதமராக பதவியேற்றபோது முன்னாள் அதிபர் நிகழ்ச்சிக்கு வந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது; இருவரும் கை குலுக்கிக்கொண்டீர்கள், பேசிக்கொண்டீர்கள், புதிய அரசியல் சூழலில் அவருடைய பங்களிப்பு என்னவாக இருக்கும்?

எனக்கு அரசியல்ரீதியாகத்தான் அவருடன் போட்டி. நாட்டின் ஒற்றுமையையும் ஜனநாயகப் பண்பையும் காப்பதில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை என்பதால்தான் அவரை எதிர்க்கிறேன் என்று அப்போதே தெளிவுபடுத்தினேன். இனி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்குச் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு யோசனைகளைத் தெரிவித்து வருகிறார்கள். சர்வதேச உறவுகளுக்கு வருவோம்; மேற்கத்திய நாடுகளுடனான உறவு மோசமடைந்தது. இந்தியாவுடனான உறவில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அணுகுமுறையில் இப்போது மாற்றம் இருக்குமா? ராஜபக்‌ஷவின் அணுகுமுறை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது தவறுதான். மேற்கத்திய நாடுகளுடன் விரோதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது. மேற்கத்திய நாடுகளுடன் உறவைச் சீரமைப்போம். இந்தியாவுடன் உறவு கொள்ளும் அதே வேளையில் சீன உறவையும் பராமரிப்போம். சர்வதேசப் பிரச்சினைகளில் இப்பிராந்தியத்தில் எங்களுக்குரிய பங்கை ஆற்றுவோம்.

உள்நாட்டிலேயே ஏகப்பட்ட விவகாரங்கள் இருக்கின்றன; இலங்கை, இந்தியா இடையே பாலம் அமைக்க வேண்டும் என்ற உங்களுடைய நீண்ட காலத் திட்டத்தை அமல்படுத்துவீர்களா? அல்லது அதற்கு மேலும் சிறிது காலம் பிடிக்குமா? முதலில் எங்கள் நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்ப்போம், பிறகு மற்றவற்றில் கவனம் செலுத்துவோம்.
ஈழத்தமிழர்களைக் காத்து சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான தியாகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும்,

 விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று ராஜபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரÞ கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்க காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2009ல் ஈழத்தில் நடந்த இன ஒழிப்புப் போருக்கு சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என்று 2014வரை அமெரிக்கா தீர்மானங்களை தாக்கல் செய்து முன் மொழிந்தது. கடந்த 2014ம் ஆண்டு தீர்மானத்தில் அமெரிக்காவுடன் 23நாடுகள் வாக்களித்தன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உட்பட 12நாடுகள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தனர். பட்டும் படாமல் இந்தியா இந்த வாக்கெளிப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா போலவே 12நாடுகள் பங்கெடுக்கவில்லை. 23நாடுகளின் ஆதரவோடு அமெரிக்காவின் தீர்மானம் அப்போது நிறைவேறியது.

ஆனால் தற்போது அமெரிக்கா 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பிரச்சனைகள் வரைக்குமான உள்ளக விசாரணையை இலங்கையே நடத்தலாம் என்று இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவர இருக்கின்றது.

இதுவரைக்குமான தன் நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா திடீரென்று அந்தர் பல்டி அடித்திருப்பதன் மூலம் அதன் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. சீனா ராஜபக்‌ஷே காலத்தில் இலங்கைக்கு நெருக்கமாக இருந்த காரணத்தினால், அதை மிரட்டுவதற்காகத்தான் அமெரிக்கா சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான, புலனாய்வு விசாரணை வேண்டும் என்று போலியானஅணுகுமுறையைக் கையாண்டது என்பது இப்போது அம்பலப்பட்டுவிட்டது.

இதயசுத்தியோடு, உண்மையாக மனித உரிமைகள் மீது அக்கறை இருந்தால் அமெரிக்காவின் போக்கில் ஏன் திடீரென்று இந்த மாற்றம்? இந்தப் போக்கு சர்வதேச அளவில் அமெரிக்கா மீதுள்ள நம்பிக்கையை தகர்த்தது மட்டுமில்லாமல் கேள்விக்குறியும் ஆக்கிவிட்டது.

ஈழத்தமிழர்கள் என்றைக்கும் பகடைக்காய்களாக, பாவப்பட்ட மனிதர்களாக துரோகத்தால் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகத்தான் இலங்கையில் வாழ்கின்றனர். கொழும்பு ராஜ்ஜியம், கண்டி ராஜ்ஜியம், யாழ்ப்பாண ராஜ்ஜியம் என்று மூன்று தமிழ் பேரரசுகள் ஆண்ட அந்த மண்ணை, அந்த மண்ணின் பூர்வ குடிகளை புறக்கணிக்கத்து இரண்டாம்தர மக்களாக சிங்கள அரசு நடத்துகிறது.

இலங்கைக்குள் ரோமானியர்கள், சீனர்கள், அரபு வணிகர்கள், இந்திய முஸ்லீம்கள் 17ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள், உல்லாந்தர்கள் (டச்சு), ஆங்கிலேயர்கள் என பலதரப்பின் ஆட்சிக்குப் பின், 1948 பிப்பிரவரியில் இலங்கை விடுதலை பெற்றது. அப்போது தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிகள் யாவும் மதிக்கப்படாமலும், அங்கீகரிக்கபடாமலும் இருந்த காரணத்தினால் தந்தை செல்வா தலைமையில் ஈழத்தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற நிலையில் உரிமையோடு வாழ பல காந்திய வழிப் போராட்டங்கள் நடத்தினார்கள், ஆனால், இராணுவ அடக்குமுறையால் தமிழர்கள் நசுக்கப்பட்டனர்.

பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த காலகட்டங்களில் தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்குமிடையே ஏற்பட்டும் அவையாவும் குப்பைக்கூடைக்கே சென்றன. தமிழர்களை துச்சமென நினைத்து கொன்று குவித்தது சிங்கள இராணுவம். இதற்குப் பின் தான் பல்வேறு ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் போர்க்களத்துக்கு வந்தன. இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் வீறுகொண்டு சிங்கள அரசை திணறடித்தது. வீரத் திருமகன் பிரபாகரனைக் கண்டு சிங்களர்கள் அஞ்சினர். தமிழருடைய பழம்பெரும் கீர்த்தியை பிரபாகரன் மீட்டெடுத்தார். 

இப்படியான நிலையில் 2009ல் முள்ளிவாய்க்காலில் 1.5லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. பலரை கைது செய்து இன்றைக்கும் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பலர் காணாமல் போனார்கள். 2009ல் ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தப் பிரச்சனையை ஜெர்மனி முதன்முதலில் கிளப்பியது. இந்தியாவும், கியூபாவும் இராஜபக்‌ஷே செய்த கொடூரங்களை பாராட்டியது.

இந்நிலையில் இலங்கையில் நடந்த கொடுமைகளைக் கண்டித்து 2014வரை தீர்மானங்கள் கொண்டுவந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கான காரண காரியங்கள் என்ன? சம்பந்தம் தலைமையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பும் உள்ளக விசாரணைக்குத் தலையாட்டி, “ஆமாம்சாமி” போடும் நிலைக்குத்தான் போவார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே ராஜபக்‌ஷே ஆட்சிகாலத்தில் உள்ளக விசாரணைகள் நடத்தி, எல்.எல்.ஆர்.சி அறிக்கைகள் கொடுத்தும், ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு புணர் ஜென்மம் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அமெரிக்கா உள்ளக விசாரணை என்று சொல்வது கொடுமையிலும் கொடுமை.

வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி துவங்க உள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தொடரில் ஏதேனும் நீதி கிடைக்குமா என்று ஏங்கிய ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு பேரிடி.

இலங்கைக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்மணி நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்காவின் இலங்கைக்கு ஆதரவான இந்த முயற்சியை தெளிவாக தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துவிட்டார். இதை மனதில் கொண்டுதான் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா வழங்குவதற்கு செயில்ட் அல் ஹூசைன் இலங்கை வரவிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனுக்கு எப்படி நீதி கிடைக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் சர்வதேச தலையீடுகளும், தங்கள் சொந்த லாபங்களுக்காக உலக அரசியல் சதுரங்கத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, சுவீடன், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை மனதில் வைத்துக்கொண்டு காய்களை நகர்த்துகின்றன.

ஆனால், இந்தியாவோ இந்த சூட்சமங்களைச் சற்றும் சிந்திக்காமல், ஈழப்பிரச்சனையில் எதிரிகளின் வளையிலே மாட்டிக்கொள்கிறது. இந்திராகாந்தி காலம் வரை ஈழப்பிரச்சனைகள் ஒருமுகமாக ஈழத்தமிழர் நலன்களில் அக்கறைகொண்டு நகர்ந்தது. ராஜீவ்காந்தி பிரதமரானவுடன் இதன் பரிமாணம் மாறி வேறுதிசையினை நோக்கி சிங்களர்களுக்கு ஆதரவாக திரும்பியது.

ராஜீவ் காந்தி காலத்தில் ரமேஷ் பண்டாரியும், ஜே.என்.தீட்சத்தும் இந்தியாவின் இலங்கையோடான வெளியுறவுக் கொள்கையை இந்திராகாந்தி அணுகுமுறைக்கு விரோதமாகத் திருப்பிப் போட்டார்கள். வங்க தேசம், பாலஸ்தீனம் என்றெல்லாம் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, ராஜீவ் காந்தி காலத்தில் அருகாமையில் உள்ள இந்திய நாட்டின் சொந்தக்காரர்களான ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படுவதை பாராமுகமாக இருந்தது டெல்லி .

ஒரு தேசிய இனம் தன் விடுதலைக்காகப் போராடுவதும், சுயநிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடிப்படை உரிமைகளாகும். அவ்வாறான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அந்த இனத்தை அடக்க நினைத்து, படுகொலை செய்வது சாதாரண குற்றமல்ல. அது நூரம்பெர்க் ஹிட்லரின் பாசிசத்தனமான போக்கு என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

இதுமட்டுமில்லாமல் சிங்களத் தலைவர்கள் அளித்த உறுதியை நம்பி கூட்டணியில் போட்டி போட்ட தமிழ் எம்.பிகளுக்கு இலங்கை அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எழுபது அமைச்சர்கள் என்று அறிவித்த இடத்தில் தற்போது முப்பது அமைச்சர்கள் என்று நியமித்துள்ளார்கள். இணை அமைச்சர்களும் வரையறுக்கப்பட்டதில் தமிழர்கள் மனோ கணேசனுக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் எம்.பிகள் சிலருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தராதது குறையாகவே உள்ளது. இப்போது ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்கிற கட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள த.தே.கூ சம்பந்தம்  அவர்களுக்குக் கூட எதிர்கட்சித்தலைவர் பதவி கிடைக்காம, இராஜபக்‌ஷேவுக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற சூழல் அங்கு ஏற்பட்டுள்ள்து.

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவரிகளில் ஒருவரான வேலாயுதத்திற்கு அமைச்சரவையில் பொறுப்பு தருவதாக கொடுத்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நுவரேலியா மாவட்டத்தில் வென்றுள்ள ராதாகிருஷ்ணன், திகம்பரம், திலகராஜ் மற்றும் வதிலையில் வென்றுள்ள சுரேஷ், வடிவேலு, அரவிந்தகுமார் ஆகிய ஆறுபேரில் யாரேனும் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கலாம்.

மைத்ரி சிரிசேனாவும், ரணில் விக்கிரமசிங்கேவும், சந்திரிகாவும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, இராஜபக்‌ஷேவைக் காப்பாற்றும் வகையில் சர்வதேச விசாரணையும் இல்லை, அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவமும் இல்லை. எதிர்கட்சித் தலைவர் அங்கீகாரமும் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. ஜெயவர்த்னேவின் சிஷ்யனாகத்தான் ரணில் இருப்பாரே ஒழிய, அவர் ஒரு மேம்போக்காக இருக்கக்கூடியவர்.
எதையும் திட்டமிட்டு உறுதியோடு செய்யக்கூடியவரல்ல. ஆனால் ராஜபக்‌ஷே கொடியவன் என்றாலும், தான் சாதிக்க நினைத்த காரியங்களைத் துணிச்சலாகச் செய்தவன். தமிழர்களுடைய நிலங்களை மீட்டுக்கொடுப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்போது

மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமல்போவோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, எல்எல்ஆர்சி என்று அழைக்கப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க ஏற்பாடு-

இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்து விட்டது என்பதையே இது எடுக்காட்டுகின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான உறவிலும் மாற்றங்களை எற்படுத்தியிருந்தன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் மஹிந்த ராஜபக்ச உறவை பேணி வந்தார் என்றும் கூறலாம். ஆகவே இந்த நிலைமைதான் அப்போதைய இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தீவிரப்படுத்தியது எனலாம்.

அவ்வாறு நோக்குமிடத்து மஹிந்த ராஜபக்ச தனது பதவிக் காலத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தினாரா? அல்லது ஏற்கனவே இருந்த நடைமுறைகளுக்கு மாறாக செயற்பட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாக இலங்கையில் வெளியுறவுக் கொள்கை என்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப செயற்படுத்தப்பட்டு வருதையே காணமுடிந்தது. அவ்வாறு நோக்குமிடத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கமும் தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.

சொல்வதைக் கேட்கும் பண்பு
ஆனால் நிலைமை அதுவல்ல மஹிந்த ராஜபக்சவோ மைத்திபால சிறிசேனவோ வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை எற்படுத்தினார்கள் என்று கூற முடியாது. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் போன்று எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கை என ஒன்று இலங்கையில் இல்லை. வல்லரசு நாடுகளின் போக்குக்கு ஏற்ப தமது வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்ற பண்பு இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு உள்ளது. அப்படி பார்க்குமிடத்து மஹிந்த ராஜபக்ச சீன சார்புத் தன்மையை கொண்டிருந்ததால் அந்த நாட்டின் நலன்களுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை பின்பற்றினார்.

அதன் காரணமாக சீன அரசின் கொள்கைக்கு ஏற்ப அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் உறவையும் அவர் பேணினார். இங்கு இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது என்று கூற முடியாது. நாடாளுமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய அப்போதைய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கவில்லை. தேவைக்கு ஏற்ப செயற்படுத்தி வருவதாக கூறினார். அப்படியானால் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கின்றது ஆகவே அதனை மாற்றியமைக்க அமெரிக்க சார்புத் தன்மையை பின்பற்றுங்கள் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தம்
அதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றுவதில்லை. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் வைத்திருக்கும் உறவில் அது தங்கியுள்ளது என்று கூறினார். மீண்டும் குறுக்கிட்ட ரணில் விக்கிரமசிங்க அப்படியானல்; நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி சர்வதேச விசாரணையை தடுக்கக் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுப்போம் என்று யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். ஆகவே இந்த விவாதத்தை நோக்கும் போது இலங்கைக்கு என்று எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கை இல்லை என்பதை அறிய முடிகின்றது.

இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த பலவீனங்கள் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிந்திருக்கின்றன. பொதுவாகவே சிறிய அரசுகளை பெரிய நாடுகள் மிரட்டுகின்ற போக்கு ஒன்றும் உள்ளது. அந்த அடிப்படையில் நோக்கும் போது மஹிந்த ராஜபக்சவையும் அவரது அரசாங்கத்தையும் அமெரிக்கா இந்தியா போன்ற பெரிய நாடுகளினால் மிரட்டமுடியாத நிலை ஏற்பட்டிருந்ததை உணர முடிகின்றது.

அமெரிக்க சார்புத் தன்மை
 இந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை அமெரிக்கா மிரட்டியது என்று சொல்வதைவிட இந்த அரசாங்கம் இயல்பாகவே அமெரிக்க இந்திய சார்புத் தன்மையை பின்பற்ற ஆரம்பித்துள்ளது என்று கூறலாம். அதன் காரணமாகவே சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்ற வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது என்ற முடிவுக்கு வரலாம். ஆக இது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் எற்பட்ட மாற்றம் அல்ல. இயலாமையின் நிமித்தம் பெரிய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து போகின்ற இயல்பு என்றும் சொல்லாம்.

இந்த தமிழர் இன அழிப்பு விவகாரம் சர்வதேச மயப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணக்கரு ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரம் அல்ல ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிக ஹெல உறுமய போன்ற அனைத்து சிங்கள கட்சிகளிடம் அந்த எண்ணக்கரு உள்ளது. அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மையப்படுத்திய மஹிந்த ராஜபக்ச அணி தமிழர் இன அழிப்பு விவகாரத்தை சர்வதேச மயப்படுத்த விரும்பியது என்று கூற முடியாது. சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளின் உதவியுடன் அதனை முடிந்தவரை தடுப்பதற்கு முயற்சி எடுத்திருந்தார்கள் என்று கூறலாம்.

மஹிந்த அணியை சமாதானப்படுத்தல்
            எவ்வாறாயினும் இந்த இரண்டு தரப்பும் அதாவது மஹிந்த அணியும் ரணில் விக்கிரமசிங்க அணியும் தமிழர் இன அழிப்பு விவகாரத்தை மூடிமறைக்கவே முற்படுகின்றன என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. ஆனால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள்தான் வேறாக அமைகின்றன. தற்போது உள்ளக விசாரணை என்று கூறி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அப்போது மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமல்போவோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, எல்எல்ஆர்சி என்று அழைக்கப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளையும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்வதாக அறிய முடிகின்றது.

ஆக உள்ளக விசாரணை இடம்பெறும்போது தங்கள் அரசாங்கம் மீது மஹிந்த அணி இனவாதமாக குற்றம் சுமத்துவதை தவிர்ப்பதற்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான முயற்சியை கையாளுகின்றார் என்று கூறலாம். இந்த இடத்தில் உள்ளக விசாரணை என்றால் என்ன என்று அரசியல் விஞ்ஞான மாணவன் ஒருவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விரிவுரையாளர், கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த போது நடத்தப்பட்ட தமிழ் இன அழிப்பை முடி மூடிறைத்தல் என்று கூறினார். அத்துடன் 1987 இல் இந்திய இராணுவம் புரிந்த படுகொலைகள், இறுதிப் போருக்கு அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கிய உதவிகள் உள்ளிட்ட அனைத்து இரகசியங்களையும் பாதுகாத்தல் என்று கூறினாலும் பொருந்தும் என அந்த விரிவுரையாளர் பதிலளித்தார். அப்படியானால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு உள்ளக விசாரணை என்றால் என்ன என்பது குறித்து ஒரு விரிவுரை நடத்துங்கள் என்று அந்த மாணவன் நகைச்சுவையாக சொன்னார்.


            வடக்கு மாகாணடபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று வடக்குமாகாண சபைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருக்கிறார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு, நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐக்கிட நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சார்ந்த தனித்துவமான சர்வதேச விசாரணையில் எந்த மாற்றமும் இல்லை என்பதே வடக்குமாகாண சபையின் நிலைப்பாடு. பிரிட்டனும் சர்வதேச விசாரணை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.  அதே நேரம் மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பான் தூதுவரான மறிக்கோ ஜமமோட்டோ உடனான சந்திப்பில் இலங்கை வடக்குமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் “சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்தும் அதற்கு III- எனப்படும் 3I தான் சரிடான தீர்வு”என்று தன் கருத்தைக் கூறியுள்ளார். குற்றமிழைத்தவர்களை குற்றமிழைக்கத் தூண்டியவர்களே விசாரிப்பது எந்தவகையிலும் நியாயமானதில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.  ஏற்கனவே மகிந்த ஆட்சிகாலத்தில் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தபோதிலும் எத்தகைய விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபையின் 34வது அமர்வில் அம்மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் முன்மொழியப்பட்ட பிரேரணையை மாகான உறுப்பினர் சிவாஜி லிங்கமும் வழிமொழிந்தார்.

சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம், ரகர் வீரர் வடீம் தாஜுதீன் மரணம், லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்களின் விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும்.  நாடு சுதந்திரம் பெற்றபின் எல்லோரும் ஏற்கக்கூடிய சகல இன மக்களுக்கும் பொதுவான அரசியலைமைப்புச் சட்டம் இல்லாதது துரதிஷ்டவசமானது என்று சிரிசேனா தனது உரையில் தெரிவித்திருக்கிறார். மனித உரிமைமீறல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளவும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே இலங்கையில் சர்வதேசநாடுகளில் தலையீடுகள் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டின் அப்பட்டமான கருத்துதான். குற்றவாளிகள் தங்கள் தீர்ப்பை எழுதுவதை சர்வதேசமும் வேடிக்கை பார்க்கவேண்டிய அபாயநிலை. 

இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணையையே தாமும் தமது கட்சியும் வலியுறுத்தி வந்ததாகவும், சென்ற ஆண்டு பங்குனி மாதம் சர்வதேச விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும், அந்த சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சிலநாட்களில் வெளிவரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் இந்த அறிக்கை மாற்றி எழுதப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அமெரிக்காவின் தெற்காசிய செயலாளர்  நிஸா பிஸ்வால் கொழும்பில் வைத்து தெரிவித்த பிறகு சம்பந்தன் அமெரிக்காவின் வார்த்தைகளையே பேசிவருகின்றார் என்பது தெளிவாகிவிட்டது.  இந்நிலையில் இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுத்து உறவை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-09-2015

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...