Saturday, September 12, 2015

ஈழப்பிரச்சனையில் சர்வதேச விசாரணை விவகாரம் - Unfettered Genocide in Tamil Eelam | Srilanka Tamils Issue.

ஈழப்பிரச்சனையில் சர்வதேச விசாரணை விவகாரம் - Unfettered Genocide in Tamil Eelam | Srilanka Tamils Issue.
______________________________________________

இன்று காலை பெங்களூரு பல்கலைக்கழக அரசியல்த்துறை பேராசிரியர் பால் நியூமென் சென்னையில் என் இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து ஆர்வமாக களப்பணியும், சர்வதேச பிரச்சாரப் பணிகளும் செய்து வருகின்றார்.

அவர், கர்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜி.கிருஷ்ணன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜி.கே.நாதன் ஆகியோரோடு இணைந்து எழுதிய, “ Unfettered Genocide in Tamil Eelam" என்ற அற்புதமான ஆய்வு நூலையும் எனக்கு வழங்கினார்.
இந்தநூலில் ஈழப்பிரச்சனையில் ஆதிகாலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்றையும், இலங்கையில் அவர்கள் படும்பாட்டையும், பல தரவுகளோடு எழுதியுள்ளார். இது ஒரு சிறந்த ஆய்வு நூலாகும். ஈழத்தமிழர் பிரச்சனையை அறிய வேண்டுமென்றால் இந்தநூலே போதுமானதாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானங்கள் வரும்பொழுது பேராசிரியர்.பால்நியூமென் அங்கு இருப்பதைத் தன் கடமை எனக் கருதி தன் முக்கியப் பங்கை செய்துகொண்டிருப்பார்.

இந்தமுறையும் அவர் ஜெனிவாவுக்குச் செல்ல உள்ளார். ஆனால் எனக்கு ஜெனிவாவுக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. அவரும் அமெரிக்கா தற்போது உள்ளக விசாரணை என்ற கொள்கைக்கு இறங்கிவந்துவிட்டதே என்று வேதனையோடு குறிப்பிட்டார். இருப்பினும் இந்த பிரச்சனையை விட்டுவிடாமல் கவனிக்கவேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது என்று சொன்னார்.அவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பல செய்திகளை அறியமுடிந்தது. 

இலங்கையில் உள்ள மாகாணசபைக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு குளத்தில்கூட மீன்குஞ்சுகளை விடுவதற்குக் அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார். ஏனெனில், மீன்பிடிப்புத்தொழில் அங்கு பிரதானமானது. மாகாணசபை வெறும் கருத்துக்களமாக இருக்கின்றதே ஒழிய, தமிழர்களுடைய பிரச்சனைகளையும், உரிமைகளையும் மீட்கும் அதிகாரங்களே அவர்களிடம் இல்லை.

அதற்கு சாட்சியாக, 1990களுக்கு முன்பு வலிகாமம் வடக்கு மாதகலில் இருந்து பலாலி வரை தமிழர்கள் மீன்பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று வரை அவர்கள் அப்பகுதியில் மீள்குடியேற முடியவில்லை. ஏனெனில் அப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 25ஆண்டுகளாக உள்ளது. மாகாண சபை இதுகுறித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

வலிகாமம் வடக்கில் சிங்களர்கள் கைப்பற்றிய 400ஏக்கரை தமிழர்களிடம் ஒப்படத்துவிட்டதாக பொய்யாக சிங்கள அரசு ஏமாற்றிக்கொண்டு வருகின்றது. இதுகுறித்து மாகாணசபை கேள்வி எழுப்பினாலும் எதுவும் நடப்பதில்லை.

வடக்குமாகாண முதல்வர் விக்கேஸ்வரனை தன் கட்சியிலிருந்து நீக்கப்போவதாக திரு.சம்பந்தன் முடிவு செய்துள்ளார் என்ற வேடிக்கையான செய்தியும் வந்துள்ளது. ஏனெனில் விக்னேஸ்வரன் சர்வதேச விசாரணை கேட்கின்றார். சம்பந்தன் ஏற்கனவே விசாரணை அறிக்கை தயாராகிவிட்டது என்றும், ரணில் அரசுக்கு “ஆமாம்சாமி” போடவும் தயாராகிவிட்டார் என்ற தகவல்களும் வந்துள்ளன.

இப்படி தேர்தல் நடந்தாலும், ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு சிங்கள இனநாயகம் தான் நடக்கின்றது என்பது போன்ற பலவிசயங்களை பால் நியூமென் எடுத்துக் கூறினார். ஒரே நம்பிக்கையாக இருந்த அமெரிக்காவின் சர்வதேச விசாரணை கோரிக்கையும் தளர்ந்து போய்க் கொண்டிருக்கின்றதே என்ற கவலையைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த சூழ்நிலையில், பார்ப்போம், நம்பிக்கையோடு போராடுவோம் என்ற எண்ணத்தில் ஈழ ஆதரவாளர்களுடைய பணியும் பயணமும் களைப்பில்லாமல் நேர்மையாகச் செய்வோம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2015.

‪#‎KSR_Posts‬
‪#‎KsRadhakrishnan‬
#UnfetteredGenocideinTamilEelam
#SrilankaTamilsIssue.






No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...