Sunday, September 20, 2015

ஆந்திரத்தில் கிருஷ்ணா-கோதாவரி இணைப்பு ஆனால் தமிழகத்தில் நதிநீர் இணைப்பு - Godavari-Krishna Rivers Linking,







ஆந்திரத்தில் கிருஷ்ணா-கோதாவரி இணைப்புப் பணியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆரம்பித்துவிட்டார். இதனால் 17லட்சம் ஹெக்டேர் ஏக்கர் விவசாய நிலம் பாசனவசதி பெறும். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாமிரபரணி கருமேனியாறு திட்டம் இன்னும் நிறைவு பெறாமல் நிலுவையிலே இருக்கின்றது.

மகராஷ்ட்டிரா மாநிலத்தில் நாசிக் அருகே உற்பத்தியாகி தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் 1456கி.மீ தூரம் பயணித்து கோதாவரியின் 3000டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கின்றது. கிருஷ்ணாவும் அதேபோல மராட்டியத்தில் உற்பத்தியாகி வங்கக்கடலில் கலக்கின்றது. இந்த இரு நதிகளில் உள்ள உபரி நீரை இணைத்து தெற்கே ராயலசீமா பகுதிகளுக்குத் திருப்ப ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு எடுத்துள்ளார்.

இந்த திட்ட மதிப்பீடு 1300கோடியாகும். 5மாதங்கள் 16நாட்களில் இந்தப் பணிகள் முடிக்கப்படும். கோதாவரி நதி போலாவரத்திலிருந்து தெற்கே திருப்பி கிருஷ்ணா இப்ராகிம்பட்டினத்தில் 174கி.மீ தூரத்தில் இணைத்து வீணாகும் தண்ணீரை ஆந்திர மாநிலத்தின் பிற இடங்களுக்குத் திருப்பத் திட்டமிட்டுள்ளார்.

அதே போல வட இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் கேன் ஆற்றுடன் பேட்வா ஆறு இணைக்கப்பட்டது. இதில் கட்டப்பட்டுள்ள மடாடிலா அணையானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது

பேட்வா ஆறு வட இந்தியாவில் ஓடும் இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். பேட்வா என்பதற்கு வெட்ராவதி என்று பொருள். இந்த ஆறானது மொத்தம் 590 கிலோமீட்டர்கள் நீளமுடையது. இதில் 232 கிலோமீட்டர்கள் மத்தியப் பிரதேசத்திலும் மீதி 358 கிலோமீட்டர்கள் உத்திரம் பிரதேசத்திலும் ஓடுகிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் அரசுகளுக்கு இடையேயான உடன்படிக்கையின் படி 1973 ஆம் ஆண்டு பேட்வா நதிநீர் வாரியம் அமைக்கப்பட்டது. ராஜ்காட் அணை (Rajghat Dam), மாடாடிலா அணை ( Matatila Dam)பரிச்சா அணை (Parichha Dam) ஆகிய மூன்று அணைகள் இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கேன் மற்றும் பேட்வா நதிநீர் இணைப்பு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது 2003ம் ஆண்டிலே முடிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய பிரதேசத்தில் திட்டமிடபட்டு பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டது. இதன்மூலம் 6.36லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுவதோடு 60மெகாவாட் மின் உற்பத்தியும் பல கிராமங்களுக்கு குடிநீர் வசதியும் பெற வாய்ப்பு உள்ளது.

இப்படியெல்லாம் பிறமாநிலங்களில் நதிநீர் இணைப்புப் பணிகள் நடக்கும் போது, கேரளாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலந்து வீணாகும் நதிகளின் உபரி நீரை தமிழக வைப்பாற்றோடு இணைக்கும் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்புத் திட்டம் பேச்சளவில் உள்ளதே அன்றி இன்னும் செயலளவில் வரவில்லை.

தேசிய நதிகள் இணைக்கவேண்டும். அச்சன்கோவில் பம்பை இணைப்பு வேண்டும் என்ற என்னுடைய 30ஆண்டுகள் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 27-02-2012அன்று தலைமை நீதிபதி கப்பாடி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டும் பணிகள் ஆமை வேகத்தில்தான் இருக்கின்றன. குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்பதும் மற்றும் தீபகற்ப நதிகளை மகாநதியிலிருந்து துவங்கி இணைப்பதற்காவது விரைவான பணிகள் நடந்தால் நிறைவாக இருக்கும்.


அதுமட்டுமில்லாமல் இந்த நதிகளை இணைக்கும்போது உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து திட்டமும் நடைமுறைக்கு வரும். தேசிய நீர்வழிச்சாலை திட்டம் வளமான நாடாக மாற்ற ஒரு வாய்ப்புஇத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துமா? என சந்தேகம் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் தங்க நாற்கர நான்குவழிசாலையும் உலகத்தரம வாய்ந்த விமான தளங்கள் நாடெங்கும் வந்ததையும் நாம் புரிந்த கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்கு பணத்திற்கு என்ன செய்வது என கேள்வி எழுப்புகின்றனர் . இத்திட்டம் தனியாருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை போல செயல்படுத்த முடியும் என்பதால் அரசாங்கத்திற்கு நிதிச்சுமை இருக்காது. பலர் இத்திட்டத்தை பாராட்டி நாங்கள் என்ன செய்ய என கேட்கிறார்கள். ஒரு சிலர் உதவியுடன் தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தினை ஆரம்ப ஆய்வு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் தஸ்துார் என்பவர் நதிநீர் இணைப்பு பற்றி ஒரு திட்டத்தை அரசுக்கு சிபாரிசு செய்தார். தேசிய நீர்வள ஏஜன்சி எனப்பட்ட இத்திட்டத்தில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சில பகுதிகளில் மலையை குடையவும், வேறு சில பகுதிகளில் தண்ணீரை பம்ப் செய்யவும் வேண்டியிருந்தது. மாற்று திட்டங்களை ஏற்பாடு செய்யலாம் என மத்திய அரசு கைவிரித்தது. இந்நிலையில் மத்திய அரசின் நதிநீர் இணைப்பு உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ் கங்கா குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை தயாரித்து கொடுத்தார். இவர் நவாட்(தேசிய நீர்வழி மேம்பாட்டு தொழில் நுட்பம்)தலைவரா கவும் உள்ளார்.

தேவை தேசிய நீர்வழிச்சாலை:கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை போல நீர்வழிச்சாலைகள் அமையும். இத்திட்டமானது, இந்திய நதிகளின் வலைப்பின்னல்கள் போல இமயமலை நீர்வழிச்சாலைகள், மத்திய நீர்வழிச்சாலைகள், தெற்கு நீர்வழிச்சாலைகள் என வரைவு செய்யப்பட்டுள்ளது. இமயமலை நீர்வழிச்சாலைகள் மேற்கிலிருந்து கிழக்காக நாடு முழுவதையும் இணைத்து ஓடும். மத்திய நீர்வழிச்சாலைகள் மற்றும் தெற்கு நீர்வழிச்சாலைகள் மத்திய மாநிலங்களையும் மற்றும் தெற்கு மாநிலங்களையும் கன்னியாகுமரி வரைக்கும் இணைக்கும்.

வீணாகும் தண்ணீர் பயனாகும்:இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முழுமையான தண்ணீரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலினுள் வீணாகும் தண்ணீரிலிருந்து எடுக்கப்படும். இமயமலை நீர்வழிச்சாலைகள் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்திலும், மத்திய மற்றும் தெற்கு நீர்வழிச்சாலைகள் கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்திலும் செல்லும். இந்த நீர் வழிச்சாலைகள் மிக குறைந்த அளவாக 10 மீட்டர் ஆழமுடைய தண்ணீரை உடையனவாக இருக்கும். இத்திட்டத்தின் கடல் மட்டத்திலிருந்து எழும் உயர அளவு வேறுபாடுகளினால் மிக மிகுதியான புனல் மின்சாரம் தயாரிக்க முடியும்.

தண்ணீர் பஞ்சம் ஏற்படாது:இந்த நீர்வழிச்சாலைகளில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு நீரை மாற்றி அனுப்பலாம். கங்கை நதி நீரை காவிரி வரை அனுப்பலாம். பிரம்மபுத்திராநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது கங்கை நதிப்பகுதியில் நீர் குறைவாக இருப்பின் பிரம்மபுத்திரா பகுதியிலிருந்து கங்கை பகுதிக்கு நீரை அனுப்பலாம். இத்திட்டம் மூலம் நாட்டில் எந்த இடத்திலும் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

போக்குவரத்திற்கும் வாய்ப்பு:இந்த நீர்வழிச்சாலைகள் திட்டம், மிக குறைந்த செலவில் போக்குவரத்து திட்டமாக இருக்கும். 15,000 கி.மீ., நீளமுள்ள நீர் தேக்கமாக இருந்து மிக அதிகமான நிலம் சாகுபடிக்கு உரியதாக இருக்கும். பிரம்மபுத்திரா அல்லது கங்கை அல்லது கிருஷ்ணா அல்லது காவிரி நதிகளின் வெள்ளப் பெருக்கினால் கிடைக்கும் தண்ணீர் தேக்கப்பட்டு, சேமிக்கப்படுவதால் நான்கு மாதங்களுக்கு விவசாயத்திற்கும், ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும். வறட்சியின் பிடியிலுள்ள மாநிலங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு விவசாயத்திற்கும், புனல் மின்சாரம் தயாரிப்பதற்கும் மற்றும் ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும்.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:600 மில்லியன் மக்களுக்கு தடையின்றி குடிநீர் ஆண்டு முழுவதும் கிடைக்கும். 150 மில்லியன் ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தேசிய நீர்வழிச்சாலைகளின் இயக்கத்தால், 60 ஆயிரம் மெகாவாட் புனல் மின்சாரம் மாசற்றதாக உற்பத்தி செய்யப்படும். 250 மில்லியனுக்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும். 15 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள அழகான தேசிய நீர்வழிச்சாலைகளில் கப்பல், படகு போக்குவரத்து குறைந்த செலவில் நடக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆயில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் புதிய காடுகள் உருவாக்கம் மூலம் உலக வெப்பமயமாதல் குறையும். சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு அடையும். திட்டத்தில் எந்த இடத்திலும் நீரேற்ற பணி இல்லாததால், இயக்க செலவு மிக குறையும். விவசாயிகள் தேவையான அளவுதண்ணீரை பெற முடியும்.

மத்திய அரசு செயல்படுத்தலாம்:வெள்ளப்பெருக்கு கட்டுப்படுத்தப்படுவதால், ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வெள்ளச்சேதங்கள் தடுக்கப்படும். விவசாயிகள் தேவையான அளவிற்கு, நீரினை பெற்று விவசாயம் நடக்கும். தேசிய நீர்வழிச்சாலையை நெடுஞ்சாலை போல, சட்ட விதிமுறை 246 ஏழாவது ஷெட்யூல் 1/24 யூனியன் லிஸ்டில் கூறியுள்ளபடி மத்திய அரசே செயல்படுத்த முடியும். மின் இணைப்பு மூலம் தற்போது மாநிலங்களுக்கு இடையில் மின்சாரம் பகிர்ந்து கொள்வது போல,தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

தமிழக நீர்வழிச்சாலை திட்டம்:இத்திட்டத்தில் 900 கி.மீ., துாரத்திற்கு நீர்வழிப் பாதை, நீர் தேக்கம் அமையும். ஐந்து கோடி பேருக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். 75 லட்சம் ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். 1,800 மெகாவாட் மாசற்ற நீர் மின்உற்பத்தி செய்யப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால், ஆண்டுக்கு 1350 மெகாவாட் மின்சாரம் மீதமாகும். 150 லட்சம் மக்களுக்கு வேலை கிடைக்கும். வெள்ளத்தை தடுத்து, தேக்கி பின் தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியும். புதிய காடுகளை உருவாக்க முடியும். நீர்வழிச்சாலையினால் சுற்றுலா வளரும். 

இப்படி நதி நீர் இணைப்பினால் நீர்ப்பாசானம், நீர்வழிப்போக்குவரத்து, மின் உற்பத்தி, குடிநீர், நிலத்தடிநீர்வளம், பசுமை வளம், மீன்பிடித்தொழில், வேலைவாய்ப்பு என பலவகையிலும் பயந்தரும் இந்தத் திட்டம் நாட்டுக்கு அவசரம் அவசியம்.

#RiverLinking , #InlandWaterways #Godavari_Krishna_Rivers_Linking

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-09-2015.


see also : http://ksr1956blog.blogspot.in/2015/07/river-linking.html http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html http://ksr1956blog.blogspot.in/2015/07/china-india-revisiting-water-wars.html http://ksr1956blog.blogspot.in/2015/07/river-linking.html http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_29.html










No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...