Thursday, September 17, 2015

ஈழப்பிரச்சனை - ஐ.நா.அறிக்கையின் சாரம் - UN Report on SriLanka.



ஈழப்பிரச்சனையில் நேற்று (16-09-2015) வெளியான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 260பக்க அறிக்கையை படிக்கத்துவங்கினேன். விரிவான அறிக்கையாக இருக்கின்றது. அதனை உள்வாங்கி மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலைமையில் அதன் மேலோட்டமான சாரம் : 

ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை நிறுவி இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்தும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விபரங்களைப்பற்றி இந்நீதிமன்றம் விசாரிக்கவேண்டும்.

போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை எல்லாம் சர்வதேச வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீதிக்குப்புறம்பான கொலைகள், மனிதாபிமானமற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குண்டுகள் மூலம் தாக்குதல் எனப்பல குற்றங்களைக்குறித்து இவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளை இந்த கலப்பு நீதிமன்றம் விசாரிக்கும்.

1) 2002லிருந்து 2011வரை நடந்த கொலைகள், பாதுகாப்புப் படையினரால் சட்டத்துக்குப் புறம்பாக சாகடிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சரணடைந்தும் கைதுசெய்யப்பட்டவர்கள் நிலை, இராணுவத்தால் பிடிக்கப்பட்டவர்கள், கன்னிவெடி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுக்கருத்துகொண்ட அரசியல் புள்ளிகள், கல்வியாளர்கள் போன்ற முக்கியமானவர்களின் தற்போதைய நிலை, அவர்கள் காணாமல் போனார்களா? கொலைசெய்யப்பட்டார்களா என்பது கண்டுபிடிக்கவேண்டும் என்பது போன்ற விசயங்களை இந்த புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.


2) பாதுகாப்புப் படையினர் மற்றும் பிறராலும் பாலியல் வன்முறை கொடூரங்கள் நடைபெற்றுள்ளன என்று இந்த புலனாய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து 30பேர்களிடம் பதிவுசெய்யப்பட்ட சாட்சிகளின் மூலம் இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேண்டும் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 
3) 30ஆண்டுகளாக காணாமல் போனவர்கள், 21வருட யுத்தகாலத்தில் எங்கு சென்றார்கள் என்று அறியப்படவேண்டும். இவர்கள் யுத்தத்தோடு நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்கள். வெள்ளை வேன்களில் சிலர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களை நம்புவதற்கான காரணங்கள் இருப்பதால் இவையும் விசாரிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

4) சித்ரவதை, மனிதநேயமற்றவகையில் மூர்க்கமாக பாதுகாப்புப் படையினரால் இலங்கையில் மக்கள் பாதிக்கப்பட்டது. அதாவது இருட்டு அறையில் இரும்புத்தடிகளால் அடிப்பது, நீரில் அமிழ்த்தி முச்சுத்திணறலை ஏற்படுத்துவதும், தண்ணீர் பீப்பாய்களைக் கொண்டு தொடர்ந்து முகத்தில் அடிப்பதும், தலைகீழாகத் தொங்கவிடுவதும், மின்சாரம் மூலம் தாக்குவது போன்ற பலதரப்பட்ட சித்ரவதைகள் நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது அதைக்குறித்தும் விசாரணை வேண்டும் என்கிறது இவ்வறிக்கை. 

5) பொதுமக்கள் மீதும், பொது உடமைகள் மீதும் ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளையும் விசாரிக்கவேண்டும். 

6) ஐ.நா.சாசனத்தின்படியும் சர்வதேச சட்டவிதிகளின் படியும் மனிதாபிமான உதவிகள், உணவு, மருத்துவப் பொருட்களை வடக்குமாகாணத்தின் வன்னி பிரதேசத்திலும் மக்களுக்குக் கிடைக்காமல் தடைசெய்து யுத்தகாலத்தில் அம்மக்களை பசியோடும், சிகிச்சைக்கு வழியில்லாமல் தடுத்தது குறித்தும் விசாரிக்கப்படவேண்டும். 

7) யுத்தப்பகுதிகளிலிருந்து தப்பி வெளியேறுவதற்கும், சுதந்திரமான இட நகர்வுகளுக்கும் வழியில்லாமல் முகாம்களில் அடைக்கப்பட்டு, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் விசாரிக்கப்படவேண்டும்.


இவ்வறிக்கை பல வருடங்களாக நடைபெற்ற குற்றங்களை மறைத்தல், உடனடி விசாரணைகளைத் தடுத்தல், விசாரனைகளை இடையில் கைவிடுதல் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், நீதிக்காக குரல் கொடுத்தவர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட சில அநீதிகளையும் எடுத்துச் சொல்கின்றது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உள்நாட்டு விசாரணையில் தொடர்ச்சியாக புறக்கணிக்கபட்டதினால் அவர்கள் கொண்டுள்ள கோபம், அவநம்பிக்கைகளை முன்வைக்கிறது.  

குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எந்த சீரமைப்புக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே தொடர்வதையும், ராணுவத்தாலும், பாதுகாப்புப் படையினராலும் பாதிக்கப்படும்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதும் உட்கட்டமைப்பின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. 

மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது. அவர்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் இழைக்கப்பட்ட அநீதிகளை இவ்வறிக்கை விவரிக்கின்றது.

உள்நாட்டு விசாரணை என்ற பொறிமுறையினைக் கையாள்வதற்கான வசதி வாய்ப்புகள் இலங்கையில் இல்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சர்வதேச ஒப்புதல்கள், கலந்துகொள்ளுதல் ஆகியவை இந்த சிறப்பு கலப்பு நீதிமன்றத்திற்கு அவசியம். இப்பணி பெரும்பணி சில நாட்களில் இவற்றை முடித்துவிட முடியாது. இதில் இலங்கை அரசு, சர்வதேச பங்களிப்பு என இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன.

கடந்த முப்பதாண்டு கால மனித உரிமைமீறல் நிகழ்வுகளை எந்தவித பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தவேண்டும் என்று இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களிடமும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்வங்களை நேரில் பார்த்தவர்களிடமும் சாட்சியங்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் எந்த அச்சமும் இல்லாமல் நியாயமாக தங்களுடைய பணிகளைச் செய்து பல தசாப்த காலமாக நடைபெற்ற உரிமை மீறல்களைக் கண்டறியவேண்டியது கலப்பு நீதிமன்றத்தின் கடமையாகும். இந்த நீதிமன்றங்களுக்கான அதிகாரங்களையும், அதன் செயல்பாடுகளுக்கான சூழ்நிலையையும் நல்லமுறையில் அமைத்திடவேண்டும் என்று சொல்லிவிட்டு, இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக களம்கண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விசாரிக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதுதான் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்து யுத்தத்தில் கலந்துகொள்ளச் செய்தது பற்றி விசாரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டது எப்படி என்று தெரியவில்லை. ஒரு இனம் அழிக்கப்படும் பொழுது வேறு வழியே இல்லாத நிலையில் அந்த இனம் ஆயுதம் தாங்கிப் போராடுகின்றது. அப்படி போராடும்பொழுது அதைக் குற்றமாகக் கருதினால் உலகில் எந்த போராளிகளும் நியாயத்துக்காகப் போராடமுடியாது. தற்காப்புக்காக போராடுவதில் நியாயம் இருப்பது போல ஒரு இனத்தின் விடியலுக்காக போராடிய இயக்கத்தையும் குற்றவாளியாக நினைத்து கூண்டில் ஏற்றுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு வரைபடங்கள், அட்டவணைகளோடு கூடிய 260பக்க ஐ.நா. ஆணையத்தின் அறிக்கை ஓரளவு சுருக்கம். - கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 17-09-2015

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.17-09-2015
#UNreport #SriLankaTamilsIssue
‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...