நேற்றைக்கு (16-09-2015) டெல்லி பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் குறித்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அதன் அருகே உள்ள செயிண்ட்.ஸ்டீபன்சன் கல்லூரி மற்றும் இந்துக்கல்லூரிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றிருந்தேன்.
ஏனெனில் 1975 துவக்கத்தில் சிலகாலம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆந்த்ரஃபாலஜி பயின்ற போது, மாணவர் அரசியல் பணிகளுக்காக டெல்லி பல்கலைக்கழகம், ஸ்டீபன்சன், இந்துக்கல்லூரி, மிராண்டா ஹால் ஆகியவற்றிற்கு அவ்வப்போது செல்வது வாடிக்கை.
அங்குள்ள கேண்டீன்களில் நண்பர்களோடு அரட்டை அடித்து, தேனீர் அருந்திவிட்டு வருவதும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
அந்த பழைய நினைவுகளுக்காக நேற்றைக்கு டெல்லிப் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்குப் பின் இந்த இரண்டு கல்லூரிகளின் வளாகங்களுக்கும் சென்றுவிட்டுத் திரும்பினேன். டெல்லிப்பல்கலைக்கழக நூல்வெளியீடு& விற்பனை நிலையத்திற்குச் சென்றபோது, இரண்டு மூன்று ஆங்கில நூல்கள் தான் கண்ணில் தென்பட்டன. மற்றவை அனைத்து இந்தி, சமஸ்கிருத நூல்களாகவே இருந்தன.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களிலோ தமிழ் நூல்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலம், இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் என பலமொழி நூல்களும் வெளியிடப்படுவது வாடிக்கை.
ஆனால் பழைமையான டெல்லி பல்கலைக்கழகத்தில் எங்குபார்த்தாலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி நூல்கள்தான் காணப்படுகின்றன. தமிழ்நூல்கள் ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லையென்றே பதில் வருகின்றது.
இந்த விற்பனை நிலையங்களின் பக்கத்திலே பல்கலைக்கழகத்தின் இந்து பிரச்சார மையமும் அமைந்துள்ளது. இதற்காக வருடத்திற்கு கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவுசெய்யப்படுகின்றது. எப்படி இருக்கிறது பாருங்கள் பன்மையில் ஒருமை. இதுதான் தேசிய ஒருமைப்பாடா?
டெல்லி பல்கலைக்கழகம். |
இந்துக்கல்லூரி, டெல்லி. |
செயிண்ட்.ஸ்டீபன்சன் கல்லூரி, டெல்லி |
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-09-2015.
#UniversityofDelhi #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment