Wednesday, September 2, 2015

தூக்கு தண்டனை - Death Panalty.




இந்திய சட்ட ஆணையம், மரண தண்டனை குறித்து இதுவரை பொறுப்பிலிருந்த குடியரசுத் தலைவர்கள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட கருணைமனுக்களின் எண்ணிக்கை குறித்து
கருத்துகளை வெளியிட்டுள்ளது.

பக்ருதீன் அலி அகமது காலத்திலும், சஞ்சீவ ரெட்டி காலத்திலும் கருணை மனுக்கள் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது. இந்தியாவிலே முதன்முதலாக உச்சநீதிமன்றம் தூக்குதண்டனை இறுதி செய்து மூன்று முறையும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட குருசாமி நாயக்கர் வழக்கை இரண்டு வாக்கியத் தந்திகளை வைத்துக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து அவரைக் காப்பாற்றியவன். அந்த நிலையில் குருசாமி நாய்டக்கருடைய கருணை மனு வைகோவின் மூலமாக சஞ்சீவ ரெட்டியிடம் வழங்கப்பட்டது என்பது நன்றாகத் தெரிந்த உண்மை.

ஆனால், சஞ்சீவ ரெட்டி காலத்தில் எந்த மனுவும் பரிசீலனையில் இல்லை என்று சட்ட ஆணையம் குறிப்பிட்டு இருப்பது எப்படி என்று தெரியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர்கள் ஏற்றதால் இந்தியாவில் 306 பேர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். கடந்த 1950 ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு, மரண தண்டனை குற்றவாளிகள் குடியரசுத் தலைவர்களுக்கு அளித்த கருணை மனுக்கள் குறித்த பட்டியலை சட்ட ஆணையம் வெளி யிட்டுள்ளது. இதில் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியல் குறித்த பகுப்பாய்வில், “ஆயுள் மற்றும் மரணம் குறித்த விதி, அரசின் சித்தாந்தம் மற்றும் பார்வையை மட்டும் சார்ந்ததில்லை; குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட பார்வைகள் மற்றும் நம்பிக்கையையும் சார்ந் தது” என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 1950 ஜனவரி 26-ம் தேதியிலிருந்து இதுவரை 437 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 306 மனுக்கள் ஏற்கப் பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 131 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

1950 முதல் 1982 வரை ஆறு குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இக்கால கட்டத்தில் 262 மரண தண்டனைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுள்ளது. ஒரே ஒரு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 181 கருணை மனுக்களில் 180 மனுக்களை ஏற்றுக் கொண் டுள்ளார். சர்வ பள்ளி ராதாகிருஷ் ணன் தனக்கு வந்த 57 கருணை மனுக்களையும் ஏற்றுக் கொண் டுள்ளார். அதைப்போலவே, குடியரசுத் தலைவர்கள் ஜாகிர் உசேன், வி.வி. கிரி ஆகியோரும் தங்களுக்கு வந்த அனைத்து கருணை மனுக்களையும் ஏற்று தண்டனைக் குறைப்பு செய்துள் ளனர். குடியரசுத் தலைவர்கள் ஃபக்ருதீன் அலி அகமது, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோருக்கு கருணை மனுக்கள் வரவேயில்லை.

மாறிய சூழல்

1982 முதல் 1997 வரை மூன்று குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். அவர்கள் 93 கருணை மனுக்களை நிரா கரித்து, 7 மனுக்களை ஏற்றுக் கொண் டுள்ளனர். ஜெயில் சிங் தனக்கு வந்த 32-ல் 30 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். ஆர். வெங்கட்ராமன் 50-ல் 45 கருணை மனுக்களை நிராகரித் துள்ளார். சங்கர் தயாள் சர்மா தனக்கு வந்த 18 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார்.

1997-2007

1997 முதல் 2007 வரை இரண்டு பேர் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தனர். கே. ஆர். நாராயணன் தன் முன் வந்த கருணை மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்துல் கலாம், இரண்டு முறை மட்டுமே முடிவெடுத்தார். அதில் ஒரு மனுவை நிராகரித்தும், ஒரு மனுவை ஏற்று தண்டனைக் குறைப்பு செய்தும் நடவடிக்கை எடுத்தார். இவர்களின் 10 ஆண்டு காலத்தில், கருணை மனுக்களை பரிசீலித்து முடிவெடுப்பதற்கு இடைவெளி விட்டனர்.

பிரதீபா பாட்டில் 5 மனுக்களை நிராகரித்தும், 34 மனுக்களை ஏற்று தண்டனைக் குறைப்பும் செய்தார். தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதுவரை பரிசீலித்த 33 மனுக்களில் 31 மனுக்களை நிராகரித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிக்ராம் ஜீத் பத்ரா உள்ளிட்டோரால் திரட்டி ஆவணப்படுத்தப்பட்டவை. குடியரசுத் தலைவர்கள் ராஜேந்திர பிரசாத், எஸ். ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி. கிரி, ஃபக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோரால் பரிசீலிக்கப்பட்ட கருணை மனுக்களின் அதிகாரப் பூர்வ எண்ணிக்கை தெரிய வில்லை.

இத்தகவல்கள் அனுபவப் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை. இந்த எண்ணிக்கை முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டதை ஏற்றுக்கொண்டாலும் எப்படி சஞ்சீவ ரெட்டி, பக்ருதீன் அலி காலத்தில் கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வரவில்லை என்று குறிப்பிட்டது கேள்விக்குறியானது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-09-2015.


ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது. (எனது
தினமணி கட்டுரை)
_______________________________________________

இன்றைக்கு தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று பல இடங்களிலிருந்தும் பல தரப்பினர் குரல்களை எழுப்புகின்றனர். ஆனால் 33ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றமும், குடியரசுத்தலைவர் கருணை மனுவும் தள்ளுபடியாகி, இனிவேறு வழியில்லை தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமியை, வெறும் இரண்டு வார்த்தை தந்தியால் காப்பாற்றியது இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கின்றது.

அன்றைக்கு இம்மாதிரி ஊடகங்களோ செய்தித்தாள்களோ இந்நிகழ்வை பெரிதாக வெளியிட்டதில்லை. விளம்பரப்படுத்த விரும்பவில்லை ஆனால் இந்தப் பதிவு தூக்குதண்டனை வரலாற்றில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிடுகின்றோம். இன்றைக்கு தூக்குதண்டனை பற்றி பேசும் எவரும் இந்த முன் உதாரணமான வழக்கை மறந்துவிட்டு பேசுவதுதான் வேதனையாக இருக்கின்றது. சுயநலமில்லாமல் எந்தவித வழக்கறிஞர் கட்டணமும் இல்லாமல் சமூகப் பொறுப்போடு செய்த காரியத்தை உரிமையோடும் அப்போது எவ்வத வசதிவாய்ப்புகளும் இல்லாத காலத்தில் இவ்வழக்கிற்காக தனிமனிதனாக உழைத்ததை சொல்லவேண்டியது என்கடமை.

சில மேனாமினுக்கிகள் வெறும் எழுத்துகளில் தூக்குதண்டனைகு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்று வாய்ஜாலம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தை திட்டமிட்டு ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய “தூக்குக்குத் தூக்கு” என்ற நூலில் இந்த செய்திகள் எல்லாம் இடம்பெற்றும், அதன் தரவுகளைப் பயன்படுத்திக் கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவம் தெரிந்தும் மூடி மறைத்துவிடுவதுதான் இவர்களது சமூகப் பிரக்ஞை.

பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களைத் தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலானஇந்திய சட்டக் கமிஷன் மத்திய அரசிடம் பரிந்துரைத்து அறிக்கை வழங்கியுள்ளது. 270பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஏன் மரணை ரத்து செய்யப்படவேண்டும் என்ற காரண காரியங்களைக் குறிப்பிட்டுள்ளது. 1962 சட்டக் கமிஷன் தூக்குதண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

5 நூற்றாண்டில் ரோமன் சட்டப்படி, உடலில் எண்ணை ஊற்றி எரித்தும், உயிரோடு புதைத்தும், எரியும் நெருப்பில் போடுவதும், தூக்கில் போடுவதும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதும், கல்லால் அடித்து சாகடிப்பதும், அபாயகரமான விலங்குகளுக்கு இரையாக்குவதும், சிலுவையில் அறைவதும், கழுவேற்றுவதும், உடலை நான்கு துண்டுகளாய் வெட்டுவதும், உயிரோடு தோலை உரிப்பதும் என்ற வகைகளில் மரண தண்டனையினை நிறைவேற்றினார்கள்.

ஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் பிரிட்டனில் இம்மாதிரிதான் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. மெக்ன கர்ட்டா (மகா சாசனம்) பிரகடனத்திற்குப் பின் (1215ம் ) இம்மாதிரியான நடவடிக்கைகள் குறைந்தன. 18ம் நூற்றாண்டில் பாபிலோன் அரசர் ஹமுராபி இயற்றிய சட்டத்தில் தூக்கு தண்டனை சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஹமுராபி சட்டத்தின் படி 20குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற முரட்டுத்தனமாகவும் நாகரிகமற்றதாகவும் இருந்தன.

உலகநாடுகளில் தூக்குதண்டனையினை இன்றளவிலும் நடைமுறைப் படுத்துகின்ற உள்ள 59நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை உலகிலுள்ள 103நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேரவேண்டும் என்பதுதான் மனித உரிமைகள் ஆர்வலர்களுடைய விருப்பமும் ஆகும்.


அன்றைக்கு கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக்கயிற்றின் முனை வரை சென்று காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 32ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டாய் நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.

தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இன்றும் நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, நாடு இழக்கும்! தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.
1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார்.

குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள் உறுதி செய்தது.. அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனுக்கள் இந்திய அரசால் மும்முறையும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குடும்பச் சொத்தை வைத்து குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார். இந்த கொலைவழக்கில் திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்தது. வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் உச்சநீதிமன்றமும் நிராகரித்துவிட்டது.

குருசாமியைக் காப்பாற்ற அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீட்டுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் நினைவில் கொண்டு குருசாமி இடைக்காலத் தடையும் வழங்கினார்.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, மேல்குறிப்பிட்ட இரண்டாவது கருணை மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது. குருசாமி தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50பேர் கையெழுத்திட்ட கருணை மனுவை 1981 செப்டம்பர் 8 அன்று குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். அப்போதைய உள்துறை இணை அமைச்சர் வெங்கடசுப்பையாவிடம் அம்மனு ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்த இடைக்கால ஆணையும் தள்ளுபடியாகி தூக்குதண்டணை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த ஐந்து நாட்களில் குருசாமியின் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த, அவர் பரம்பரையைச் சேர்ந்தவர் தானா? என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது.

பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், மூன்றாவது கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

இந்த நேரத்தில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி அளித்த தீர்ப்பில் தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் ஐந்து ஆண்டுகளாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.

1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21ம் தேதி காலையில் தூக்கு தண்டனை வழங்குவது என உறுதி செய்யப்பட்டது. இத்தகவல் நெல்லையிலிருந்து வைகோவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே என்னுடன் கலந்தாலோசித்த பின்பு, டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரண்டு தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன.

அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய தலைமை நீதிபதி கே.பி.என்.சிங் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகையால், அவர் தங்கி இருந்த சென்னை அரசினர் விருந்தினர் விடுதிக்கு நான் விரைந்து சென்று அனுமதியைப் பெற்றேன். அந்த அனுமதியின் அடிப்படையில் தந்திகளை ரிட் மனுவாக்கி, அதற்கு ரிட் மனு எண் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நான்காவது கோர்ட்டில் அமர்ந்திருந்த நீதிபதிகள் வி.ராமசாமி, டேபிட் அன்னுசாமியிடம் மறுநாள் திங்கள்கிழமை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்தி வந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் பத்மினி ஜெசு துரை அவர்களை முன்கூட்டியே உரிய நோட்டீஸ் கொடுத்ததன் அடிப்படையில், இவ்வழக்கை விசாரிக்க அரசுத்தரப்பில் ஆஜரானார். இவ்வழக்கில் என்.டி.வானமாமலை ஆஜரானார். நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடப்பட்டது. நீதிபதிகள் என்.டி.வி.யின் வாதங்களைக் கேட்டு மதியம் 2மணி அளவில் குருசாமி தூக்குக் கயிறுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினர்.

அத்தோடு அரசு வழக்கறிஞர் பத்மினி ஜெசுதுரையிடம் இந்த இடைக்கால உத்தரவை தமிழக அரசுக்கும், பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திற்கும் சொல்லப்பட்டுவிட்டதா? தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதாக போன்ற விவரங்களை உரிய ஆதாரங்களோடு நாங்கள் மாலை நான்கு மணிக்கு இந்த நீதிமன்றத்திலிருந்து எழும்பும்போது தவறாமல் சொல்ல வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தனர்.

இவ்வாறு குருசாமியை அன்றைக்குக் காப்பாற்றியது இரண்டு வார்த்தை தந்திதான். இன்றைக்கு இருப்பது போல கைப்பேசியோ, பிரதி எடுக்க நகலக வசதிகளோ கூட அப்போது கிடையாது. ரெமிங்டன் தட்டச்சு மூலமே பிரதி எடுக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் எந்த தட்டச்சு மனுவும் இல்லாமல் வெறும் தந்தியை மனுவாக பாவித்து தூக்குதண்டனையை நிராகரித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல் ஒரு அதிசயமாகவும் பார்க்கப்பட்டது.

இதன் பின் உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் ஆற்றப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக என்னைப் பாராட்டினர். இந்த வழக்கில் ஒவ்வொரு நடவடிக்கையும் நல்லபடியாக நிறைவேறுமா என்று சந்தேகத்தோடு அணுகும்போது, வெறும் 24மணி நேரத்தில் நினைத்த காரியமெல்லாம் மிகச்சரியாக நிகழ்ந்தது.

அன்றைக்கு இந்து பத்திரிகை மாத்திரம் இதுகுறித்து எழுதியது. “இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது” என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீட்டு மனுவை நான் கையெழுத்திட்டு தாக்கல் செய்தேன். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியிருந்தேன்.

அவையாவன:
1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’(Rarest of rare cases) களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.
3. கொலை செய்தவன் குடும்பத்தில் ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் குருசாமியின் நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.

“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகளின் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில், டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க, அதுவே (அந்தத் தாதமே) ரணமே தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஷேர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).

மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.

அன்றைக்கு குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்…. இல்லை இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது அதுவே முதன் முறை! வெறும் இரெண்டு வார்த்தை தந்திகளை வைத்துக்கொண்டு உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் நிராகரித்த பின்பு ஒரு தூக்குதண்டனைக் கைதி தூக்குதண்டணையிலிருந்து விடுதலை செய்யப்பட்டது இந்திய வரலாற்றில் முதன்முறையாகும்.

இந்த குருசாமி வழக்கின் மூலம் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.

அந்தக் காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னோடு தங்கி இருந்த காலம். பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர் போலவே வீரபாண்டிய கட்டபொம்மன் மீதும் அவருக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ஆகவே இவ்வழக்கு குறித்து விசாரணைகள் வந்தபோதெல்லாம் என்னாச்சி அண்ணா என்று நீதிமன்றத்திலிருந்துத் திரும்பும் போது கேட்பது வாடிக்கை. அப்போது வை.கோ திமுகவில் இருந்தார். தலைவர் கலைஞர் அவர்களிடம் இந்த வழக்கைக் குறித்து அவர் சொல்லியதும் உண்டு.

பழ.நெடுமாறன், மறைந்த இலங்கை தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர் ப.மாணிக்கம் ஆகியோரெல்லாம் ஆர்வமாக இவ்வழக்கு பற்றி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுண்டு. தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டபின், தீர்ப்பையே மாற்றியமைக்க வைத்த ஒரே வழக்கு இதுதான்… ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது.


We deeply regret the resumption of the death penalty in Chad. Ten people were executed by firing squad on Saturday, 29 August morning, after being sentenced to death under the new anti-terrorism law the previous day. This is the first use of the death penalty in the country since 2003.

This is particularly disappointing given that, in September 2014, the Government of Chad had announced that a penal code aimed at abolishing the death penalty had been approved by the cabinet. However, on 30 July 2015, the National Parliament of Chad adopted a new law on terrorism which introduced the death penalty.

The use of the death penalty is an extremely unfortunate development and goes against recommendations on the abolition of death penalty that were accepted by Chad during its Universal Periodic Review in the UN Human Rights Council in March 2014. We call upon the Government of Chad to introduce an official moratorium aiming at abolition of the death penalty.

There are also serious concerns regarding the speed with which these executions have been carried out. Any trial which could lead to the imposition of the death penalty must rigorously comply with all aspects of a fair trial.

We also call upon the Chadian authorities to review the anti-terrorism law adopted last July as it contains a very vague definition of terrorism inconsistent with principles of legality, and potentially puts many people at risk of execution.

#execution #DeathPenalty #IndianLawCommission
#KsRadhakrishnan #KSR_Posts

1 comment:

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...