Monday, February 15, 2016

தோழர் ரெங்கசாமியும், ஜப்தியும்

கோவில்பட்டியில் சாத்தூர் டீ ஸ்டால் பற்றி ஒருமுறை எழுதியிருந்தேன். கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதியில் நீண்டகால உறுப்பினராய் திகழ்ந்த தோழர்.அழகிரிசாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த டீ ஸ்டால் பெஞ்சில் அழகர்சாமி அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு தோழர்.ரெங்கசாமி. இவர் ஒரு விவசாயி. அந்தக்காலத்தில் இண்டர்மீடியட் படித்த விவசாயி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஊர் காளாம்பட்டிப்பக்கம். ஆள் நல்ல கம்பீரமான தோற்றம். கையில் எப்போதும் ஜனசக்தி வைத்திருப்பார். அந்தக்காலத்திலேயே (1964) கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ ஏஜ் (ஆங்கில இதழ் )சந்தாக்கட்டி வாங்கியவர். 
1966 கால கட்டத்தில்  கடுமையான வறட்சி ஏற்பட்ட நேரம். சும்மாவே கரிசல்காட்டில் தண்ணி இருக்காது. விவசாயம் பண்ணமுடியாத நிலை. சாப்பாட்டிற்கே வழியில்லாதநிலையில், வரி கட்ட எங்கே போக ?
ஆனாலும் அன்றைய சர்க்கார், பஞ்சாயத்து போர்டு மூலம் வரிகட்டாத விவசாயிகளின்  வீடுகளில் ஜப்தி நடவடிக்கைகளை தொடங்கியது.
அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுள் ஒருவர் நம்ம ரெங்கசாமி.
        இவரது வீட்டில் இருந்த இரண்டு காளைமாடுகளையும் அன்றைய காங்கிரஸ் சர்க்கார் ஜப்தி மூலம் எடுத்து சென்று விட்டது. அதுமட்டும் அல்ல..இவரது வீட்டின் முகப்பில் இருந்த கதவையும் பஞ்சாயத்து போர்டில் இருந்து ஆட்கள் வந்து  எடுத்து சென்று விட்டார்கள். 
இந்த சம்பவமே கரிசல் பிதாமகன் எழுத்தாளர்.கி.ராஜநாராயணன் அவர்கள் " கதவு " கதை உருவாக வழி வகை செய்தது. இன்றைக்கும், இந்தக் கதையைப் படிப்பவர்கள் யாரையும் மனசு உடைந்து போகவைக்கும் கதை.
இந்த சம்பவத்தால், அந்தப் பகுதி விவசாயிகள் கொதித்துப்போனார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். நூறு நாட்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் வில்லிசேரி ராமசுப்பு,காளம்பட்டி சீனிவாசன்,கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி,கடம்பூர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் தீவிரம் அடைந்தது.
ஜப்தி செய்த காளைமாடுகளை அரசு , கோவில்பட்டி சந்தை, கழுகுமலை சந்தை என ஒவ்வொரு இடமாக கொண்டு சென்று விற்க முனைந்தது. எல்லா இடங்களிலும் " இவை ரெங்கசாமி வீட்டில் ஜப்தி செய்யப்பட்ட மாடுகள்" என்று பேசப்பட்டு ஒருவரும் வாங்கவில்லை. இறுதியில், போலீஸ்காரர்கள் மூலம், எங்கே ஜப்தி செய்தார்களோ அதே நாச்சியார்புரம் கிராமத்தில் தோழர் ரெங்கசாமி அவர்கள்  வீட்டு தொழுவத்தில் கொண்டு வந்து கட்டி விட்டார்கள்..எப்படிப்பட்ட போராட்டம் பாருங்கள் !
அதன்பின்னர் நடைபெற்ற 1967 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி கோவில்பட்டி பகுதி மக்களிடம் ஒட்டுக் கேட்டு வந்தபோது, " ரெட்டைக் காளைகளை ஜப்தி செய்த காங்கிரஸ் கட்சி, இப்போது சற்றும் வெட்கம் இன்றி, ரெட்டைக்காளை சின்னத்தில் ஒட்டுக் கேட்டு வருகிறது பார்...என்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டினார்கள். முதன்முறையாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தோழர் அழகர்சாமி வெற்றி பெறுகிறார். மீதி எல்லா தொகுதிகளிலும் திமுக -சுதந்திராகட்சி கூட்டு இருந்தபோதிலும், இந்தத்தொகுதியில் மட்டும் அழகிரிசாமி அவர்களை திமுக ஆதரித்தது.  
காங்கிரஸ் கட்சி சார்பில் வ.உ.சி.அவர்களின் மகன் ஆறுமுகம், தோழர்.அழகிரிசாமியை எதிர்த்து நின்றதாக நினைவு.
கி.ரா.வின் " கதவு" கதை பிறப்பதற்கும், தோழர்.அழகர்சாமி வெற்றி பெறவும் காரணமாக இருந்தது தோழர்.ரெங்கசாமி வீட்டில் நடந்த ஜப்தி.
(கருத்தை என்னோடு பகிர்ந்து கொண்டவர்கள் கோவில்பட்டி தோழர்கள் எல்ஐசி தேவபிரகாஷ்,காசிவிஸ்வநாதன்,CPI  )

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...