Thursday, June 23, 2016

கச்சத் தீவு

திரு. ஆதனூர் சோழன் இன்றைக்கு தன் முகநூல் பதிவில், இந்திரா காந்தி அவர்கள் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று வினா எழுப்பியிருந்தார். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஸ்வரன் சிங்கும், அன்றைய வெளி விவகாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் கேவல் சிங்கும் ஆவார்கள். 1970களின் இறுதிக் காலக்கட்டத்தில் ஓய்வுபெற்றபின் கேவல் சிங்கை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த திரு. ஜேம்ஸோடு டெல்லியில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது கச்சத்தீவை கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏன், எப்படி ஏற்பட்டது என்று கேவல் சிங் பல செய்திகளை கூறினார்.

இந்து மகா சமுத்திரத்தில் டிகோ கர்சியாவில் அமெரிக்க இராணுவதளத்தை அப்புறப்படுத்துவதற்கு இலங்கையின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது. அமெரிக்க அரசு, வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கும், எண்ணெய் கிடங்கு அமைக்கவும் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தைக் குத்தகைக்கு கேட்டிருந்தது. திரிகோணமலை துறைமுகம் பாறைகளால் அமைந்த இயற்கை துறைமுகம் ஆகும். அங்கு கப்பல்கள் வந்து செல்வதை சரியாக கண்காணிக்க முடியாது. இந்த துறைமுகத்தை கையகப்படுத்திக்கொண்டால் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எதிர்காலத்தில் கொடிகட்டி பறக்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா, இலங்கை அரசோடு நட்புறவு காட்டியது. அப்போது இந்தியா ரஷ்யாவோடு இராணுவ ஒப்பந்தங்களோடு, நட்பு நாடாக விளங்கியது. அந்த காலகட்டத்திற்கு சற்று முன்பு ரஷ்யாவின் உதவியோடு பங்களாதேஷ் உதயமாக இந்தியா காரணமாக இருந்தது. இப்படியான நெருக்கடியில் அமெரிக்க-இந்திய உறவு 1964, கென்னடி காலத்திற்கு பிறகு சுமூகமாக இல்லாமல் பல பாதிப்புகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. பல புவி அரசியல் (Geo Politics)  காரணங்களால் இந்தியா இலங்கையோடு நட்புறவோடு இருக்கவேண்டும் என்ற நிலை. இச்சூழலில் இலங்கை அதிபர் பண்டாரநாயகா கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் என்று கேவல் சிங் கூறினார். அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட திமுக அரசின் எதிர்ப்பை மீறியும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேவல்சிங்கிடம் அப்போது நான் குறிப்பிட்டேன்.  மேலும் கச்சத் தீவை கொடுத்து விட்டீர்கள். எதிர்காலத்தில் பல பாதுகாப்பு பாதிப்புகள் இந்தியாவிற்கு ஏற்படும் என்று அவரிடம் சொன்னபோது, தலையை மட்டும் சற்று அசைத்தார். ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ஏற்புடையது இல்லை.

கச்சத்தீவு குறித்து நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் இதோ:

http://ksradhakrishnan.in/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80/

http://ksradhakrishnan.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...