Saturday, June 4, 2016

எனது மாவீரன் என் தந்தையே

நக்சல்பாரி கிராமத்தில் மே 25, 1967 அன்று தொடங்கிய இயக்கம்தான் நக்சல்பாரி இயக்கம். இது தொடர்ந்து ஆந்திரத்தில் மக்கள் யுத்த குழு, மாவோயிஸ்ட் குழு என்ற ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் உருவாகின. சாரு மஜும்தாரின் கொள்கைகளும், அணுகுமுறைகளும் சரியா, தவறா என்று தெரியாது. அவரைப் பற்றி சிலர் வேதனையோடும், கோபத்தோடும் சில கருத்துக்களை சொல்வதுண்டு. சிலர் சமுதாய மாற்றத்திற்கு அவர் ஒரு விடிவெள்ளி என்று புகழாரமும் சூட்டுவது உண்டு. அவரைப் பற்றி சமீபத்தில் பல நூல்களையும் படித்துள்ளேன். அவருடைய புதல்வி என்று நினைக்கின்றேன். அனிதா மஜும்தார் அவரை குறித்து எழுதிய பத்தி இதோ:



மே 25... நக்சல்பாரி தினம்


தோழர் சாருவின் நினைவாக மறு பிரசுரம்




எனது மாவீரன் என் தந்தையே



-அனிதா மஜூம்தார்


(Tamil version of article, 'My Father, My Hero' written by Com. Anita Mazumdar, appeared in 'Charu Mazumadar- The man and his Legacy' published by Liberation Publication)

1962 இந்தியா-சீனா யுத்தத்தை ஒட்டி கைது செய்யப்பட்ட என் தந்தை சிறையிலிருந்து வெளிவந்தபோது, இதனைப் போல இதற்கு முன்பு நான் அவரைக் கண்டதில்லை என்று தோன்றியது. சொல்ல வேண்டுமானால், அவர் அமைதியற்றிருந்தார். அவர் ஏதோ புதிய ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. 1964ல் அவருக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது. அதற்குப் பின்பு, அவருக்கு மிகவும் பிடித்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு நாள் முழுவதும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தார். அதேசமயம், அவர் அடிக்கடி கிராமங்களுக்கும் செல்வார். வீட்டில் இருக்கும்போது நிறையப் பேர் வருவார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்களில் பலர், நாங்கள் அதற்கு முன்பு பார்த்தவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்-இளைஞர்களாக இருப்பார்கள்.

நமது நாட்டின் புரட்சிகர மாற்றம் பற்றிய மாபெரும் கனவு அவரை ஆட்கொண்டிருந்தது என்பது அவரிடம் உரையாடிப் பார்க்கும்போது தெரிந்தது. அது மிகவும் சாத்தியமான ஒன்று என்று அவர் அடித்துச்சொன்னார். ஆனால், மார்க்சியம்-லெனினியம்- மாசே துங் சிந்தனையை இந்தியாவின் ஸ்தூலமான நிலைமைகளுக்குச் சரியாகப் பொருத்த வேண்டும் என்றார். இதனைச் சாதிப்பதற்காக அவர் சரியான மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவர்கள் மரணம் பற்றிய பயமில்லாதவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களைப் புரட்சிகரமாக மாற்றம் செய்துகொண்டு, விவசாயிகளோடும் தொழிலாளர்களோடும் ஒருங்கிணைத்துக்கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

அதன்பின் சில காலம் கழித்து, தங்களின் வீட்டை, தங்களுக்குப் பழக்கமான சூழலை, படிப்பை, எதிர்கால வேலையை விட்டுவிட்டு, புரட்சிக்காக மண்ணைப் பதப்படுத்துவதற்காக வெளியேறிய சில 'இளைய மாமா'க்களை (நான் அவர்களை அப்படித்தான் அழைப்பேன்) கண்டேன். அதன்பின் அந்தத் தியாக உள்ளம் படைத்த, இந்தியாவிற்கான புதிய மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் துவங்கினேன்.

1967ல் நக்சல்பாரி புரட்சி நிகழ்ந்தது. தோழர் பாபுலால் பிஷ்வாஸ்கர்மகார் தியாகியானபோது அந்தச் செய்தி எங்கள் தந்தையை வந்தடைந்தது. தனது தோழனை நினைத்துத் துயரும், அன்பான தோழன் பற்றிய பெருமையும் கலந்த ஓர் உணர்வு என் தந்தையின் முகத்தில் தோன்றியது. அவர் அறைக்குள் அங்கும் இங்குமாக நடந்துகொண்டு தோழர் பாபுலால் பிஷ்வாஸ்கர்மகார் பற்றிய கருத்துரை ஒன்றைச் சொல்லச் சொல்ல நான் கேட்டு எழுதினேன்.கொஞ்ச நேரம் கழித்துத் தோழர் பஞ்சடி கிருஷ்ணமூர்த்தி எங்கள் இல்லத்துக்கு வந்தார். அவர் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். நாட்டின் பல பகுதிகளுக்கு இயக்கம் பரவத் துவங்கியது.

1969 வந்தபோது என் தந்தை அமைதியற்றுப் போனார். அவர் மறுபடியும் தலைமறைவாகச் செல்வதற்குப் பெருவிருப்பம் கொண்டுள்ளார் என்பதை நானும் என் தாயும் புரிந்துகொண்டோம். ஆனால், அவரோ நோயாளி. அவருக்கு ஒரு நாளில் சில முறை நெஞ்சுவலி வரும். பெத்தடின் அத்துடன் ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டால்தான் மூச்சுவிட முடியும். அதனால், அவருக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்வது சிரமமாக இருந்தது. இருந்தபோதும் அவர் கல்கத்தாவிற்கு அடிக்கடி சென்று வந்தார். 18 ஜூன் (1969) அன்று வீட்டை விட்டுச் சென்றவர் பற்றி வெகுநாள்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. போர்க்களத்தில் தன் சகாக்களுடன் தங்குவதற்காக அவர் சென்றுவிட்டார் என்பது அப்புறம்தான் எங்களுக்குத் தெரியவந்தது. அந்தச் சமயத்தில் நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தங்கை எட்டாம் வகுப்பும் என் தம்பி மூன்றாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர்.

காலம் சென்றது. ஒருநாள் காவல்துறையினர் எங்கள் வீட்டுக்குத் தேடுதல் வேட்டைக்காக வந்தனர்.'அவர்கள் என்னைக் கைது செய்யலாம்... அப்படி நிகழ்ந்தால் அஞ்சாதீர்கள்', என்று என் தாய் எங்களிடம் சொன்னார். காவல்துறையினர் வந்ததின் நோக்கம் எங்களின் அசையும் சொத்துகளைக் கைப்பற்றுவதுதான். அதன் பின்னர் காவல்துறை தேடுதல் வேட்டைக்காகப் பலமுறை எங்கள் இல்லத்திற்கு வந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தேடுதலுக்கான ஆணை இருக்கிறதா என்று அவர்களிடம் எங்கள் தாய் கேட்பார். அப்புறம், கைத்துப்பாக்கியை வெளியே வைத்துவிட்டு உள்ளே வாருங்கள் என்று கட்டாயப்படுத்துவார். (இல்லையென்றால், அவர்களின் துப்பாக்கியை அறைக்குள் வைத்துவிட்டு அப்புறம் அதனைக் 'கண்டுபிடித்து' விடுவார்கள்.)

1970க்கும் 71க்கும் இடையில், கட்சியின் ஏற்பாட்டின்படி, எங்கள் தந்தையை நாங்கள் இரகசியமாகச் சந்தித்திருக்கிறோம். அவரை நான் கடைசியாகச் சந்தித்தது 1971 பிப்ரவரியில்.

ஜனவரி 72ல் மருத்துவ (முன்) படிப்பிற்காக நான் கல்கத்தா சென்று படிப்பில் சேர்ந்தேன். ஜூலை 17 அன்று இரண்டு காவலர்கள் என் விடுதிக்கு வந்தனர். என் தந்தை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், லால் பஜாரில் உள்ள காவல் தலைமையகத்துக்கு வரும்படியும் என்னை அழைத்தனர். நான் யார் என்பது அப்போது இரகசியமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த மாணவர்கள் என்னைக் கிண்டல் செய்தனர். ஏறக்குறைய 11 மணிக்கு லால்பஜார் மத்திய லாக் அப்பில் என் தந்தையைச் சந்தித்தேன். அங்கே ஆக்ஸிஜன் சிலிண்டர் எதுவும் இல்லை. அவர் என்னுடன் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏதும் நோயினால் பாதிக்கப்பட்டவர் போலத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால், இதைவிட மோசமான நிலைமையில் நாங்கள் அவரைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இருந்தபோதும், அரசு அவரை இனியும் வாழ அனுமதிக்காது என்று எங்கள் இருவருக்கும் தெரிந்திருந்தது. ஆகவே, அந்தக் கடைசி நேரத்திற்காகக் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.

எனது தாயும், தங்கையும், தம்பியும் கூடச் சிலிகுரியில் இருந்து தந்தையைப் பார்க்க வந்திருந்தனர். லாக்அப்பில் அவரை நாங்கள் இரண்டு முறையோ மூன்று முறையோ சந்தித்தோம். அதன் பின் அவர் எங்கள் தாயிடம் சொன்னார், 'எத்தனை நாள் நீங்கள் இங்கே தங்கியிருப்பீர்கள். நீங்கள் சிலிகுரி திரும்புவது நல்லது'.

ஜூலை 25 அன்று அவரைக் கடைசி முறையாகச் சந்தித்தோம். ஜூலை 28 காலை எட்டு மணி அளவில் காவலர்கள் திரும்பவும் என் விடுதிக்கு வந்தது. எனது தந்தை கவலைக்கிடமான நிலையில் பிஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள். அது அசிங்கமான பொய் என்பது எனக்குத் தெரியும். அதுபோன்ற ஒரு கோரிக்கையைக் காவலர்களிடம் என் தந்தை சொல்லியிருக்க மாட்டார்.

இருந்தபோதும் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே பெரிய அளவுக்குக் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆங்காங்கே கும்பலாகப் பலர் நின்று கொண்டிருந்தனர். அந்தக் கேபினுக்குள் வெள்ளை துணி அல்லது வெள்ளையான ஒரு ஷீட்டால் மூடப்பட்டுத் தலையணை இல்லாமல் என் தந்தை படுத்திருந்தார். எல்லாம் முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், என்ன காரணமோ எனக்கு அழத் தோன்றவில்லை. என் இதயம் பெருமையால் நிறைந்தது. கடைசியில், என் தந்தையும் கூடப் புரட்சியின் பலிபீடத்தில் தன் உயிரைத் தானம் செய்துள்ளார்!

என் தந்தையின் மார்பின் மீது வைக்கப்பட்டிருந்த மரணத்திற்கான காரணம் பற்றிய குறிப்பை மிகவும் எச்சரிக்கையான மனனம் செய்துகொண்டேன். ischaemic heart disease with congestive cardiac failure (இரத்தக் குறைவு இதயச் நோய் அத்துடன் மாரடைப்பால் இதய செயலிழப்பு) என்று அதில் எழுதியிருந்தது. நர்ஸ்கள் வரிசையாக வந்து என் தந்தைக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அவர் என் தந்தை மட்டுமல்ல, மற்றப் பலருக்கும் அவர் தந்தை உருவில் தென்பட்டிருக்கிறார் என்று நான் தெரிந்துகொண்டேன். அவரின் தீர்க்கத் தரிசனம்மிக்க வார்த்தைகள் என் காதில் ஒலித்தன... ''மக்கள் தங்கள் நலனுக்காகவே புரட்சியில் சேர்கிறார்கள்'', என்பார் அவர்.

எனது குடும்ப உறுப்பினர்கள் மாலையில் கல்கத்தா வந்து சேர்ந்தனர். நள்ளிரவின் போது,மிகக் கடுமையான காவல் ஏற்பாடுகளுடன், கியோட்டலா மயானத்தில், அவரின் பூத உடல் தீக்கிரையாக்கப்பட்டது. இது எங்கள் குடும்பத்துக்கான இழப்பு மட்டுமல்ல, எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கான இழப்பு என்று எனக்குத் தெரியும். புரட்சியின் முன் எந்தவொருவரும் முக்கியத்துவம்மிக்கவரில்லை என்பதால், என் தந்தையின் இழப்பினால், புரட்சி அலையின் வீச்சு சற்றும் குறையாது என்று எனக்குத் தெரியும். எனது மனதில் அடி ஆழத்தில், இன்றும் கூட, நான் நம்புகிறேன்... புரட்சியைத் தவிர்க்க முடியாது.

அந்த நாட்கள் கழிந்துபோய் வெகுகாலம் ஆகிவிட்டது. 1998ல் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. என் தந்தை உட்பட, 1970களில் கொல்லப்பட்ட மாவீரர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அது கோரியது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் உச்சநீதிமன்றமும் அதனைத் தள்ளுபடி செய்தது. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் வேறு எதைத்தான் எதிர்பார்ப்பீர்கள்? நமது துயரத்தையும் (எதிரிகள் மேல் உள்ள) வெறுப்பையும் மிக விரிவான மக்கள் இயக்கத்தைக் கட்டுவதால் மட்டுமே நாம் தணித்துக்கொள்ள முடியும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைச் சந்திப்பவர்கள் எனது தந்தை மீது தங்களுக்குள்ள மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள். அவர் இறந்த பின்னர் எனக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்தன. வங்கதேசத்திலிருந்து ஓர் இளம் தோழர் எழுதியிருந்த கடிதத்தின் கடைசி வரிகளை, மிக முக்கியமான ஒன்றாக, நான் நினைவில் வைத்திருக்கிறேன்....

''எந்த தியாகமும் வீண் போவதில்லை''...''உங்கள் தந்தையின் உன்னத வார்த்தைகள்தான் எங்களின் இறுதியான, ஈடற்ற வழிமுறையாக உள்ளது''

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...