Tuesday, June 21, 2016

ராஜ்ய சபா தேர்தல்

இன்றைய அரசியலில் பண பலம், குண்டர்கள் என வைத்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்து பல கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்கு செல்கின்றனர். ஆனால் ராஜ்ய சபா தேர்தலில் திறமையானவர்கள், பிரச்சினைகளை பேசக் கூடியவர்கள், ஆற்றலாளர்கள் செல்ல வேண்டும். ஆனால் இன்றைக்கு என்ன நடக்கின்றது? ராஜ்ய சபா உறுப்பினர் பதவி விற்பனையாகிவிட்டது. இந்தியாவின் கடனாளி மல்லையா, எம்.ஏ.எம். ராமசாமி போன்றவர்கள் மருத்துவ கல்லூரியில் கேபிடேசன் பணத்தைக் கட்டி சீட்டு வாங்குவதைப் போல ராஜ்ய சபாவுக்கு சென்றதும் உண்டு. இது அபத்தமான செயல் அல்லவா? திறமையானவர்கள், பொருத்தமானவர்கள் செல்ல வேண்டிய அவைக்கு பணத்தைக் கொடுத்து ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெறுவது என்ன நியாயம்? எப்படியோ கையை, காலைப் பிடித்து தகுதியில்லாதவர்கள் எல்லாம் ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஆகிவிடுகிறார்கள். 

மாநிலம் விட்டு மாநிலம் மாறி ராஜ்ய சபா உறுப்பினர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தியாவில் ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி மாநிலத்திற்கு மாநிலம் எண்ணிக்கையில் வித்தியாசமாக உள்ளன. ஒன்றுபட்ட உத்தரப் பிரதேசத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்.  ஆஸ்திரேலியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமாக மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளன. அதே போல இந்தியாவிலும் சமஷ்டி அமைப்பு என்ற நிலையில் மாநிலங்களவை என்ற பெயரில் இருக்கின்ற அவைக்கு கூடுதல் குறைவு இல்லாமல் சரிசமமாக அத்தனை மாநிலங்களுக்கம் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும். இதை முறைப்படுத்தி அந்த அவைக்கு செல்லும் உறுப்பினர்களுடைய தகுதியையும், ஆற்றலையும் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மாநிலங்களவையைப் போன்று இருந்த மேலவையை நடிகை நிர்மலாவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற காழ்ப்புணர்ச்சியில் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார். இந்திய ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் இரண்டு அவைகள் (Bicameral) ஆகும். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு மேலவையை ஒழித்துள்ளனர். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் மேலவையை ஒழித்தார். நுண்மான்நுழைபுலம் கொண்டவர்கள் பங்கபெறவேண்டிய மேலவை தகுதியற்ற சில அரசியல் தலைவர்களால் ஒழிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...