'ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தில் ,
இன்றைய தேவை: "நிலைமாற்று நீதி" (transitional justice)
இன்றைய நிலையில் "நிலைமாற்று நீதி" என்பதுதான் ஜெனீவாவில் முன் வைக்கப்படும் மிக முக்கியமான வார்த்தை. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் அடிப்படையே நிலைமாற்று நீதிதான்.
இந்த நடைமுறையில் மிக முதன்மையான நான்கு அங்கங்கள் உள்ளன. 1. உண்மையை வெளிக்கொணர்தல் (Truth), 2. குற்றவாளிகளைத் தண்டித்தல் (Criminal prosecutions), 3. இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல் (Reparations), 4. குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் (Institutional reform) - ஆகியனவே நிலைமாற்றுக்கால நீதியின் முதன்மையான அடிப்படை வழிமுறைகள் ஆகும்.
இந்த நான்கு வழிகளும் ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்ப்பவை. எனவே, ஒன்றைச் செய்துவிட்டு, மற்றொன்றைக் கைவிடுவது ஏற்புடையது அல்ல. மாறாக, இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். 'நிலைமாற்று நீதி' முறையில் பாதிக்கப்பட்ட மக்களே மிக முதன்மையான அங்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முதன்மையானதாகும்.
போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என எல்லாவற்றுக்கும் நீதிகேட்கும் பயணமும், அரசியல் தீர்வுக்கான வழியும் இந்த "நிலைமாற்று நீதி" கொள்கையில் இலங்கையின் செயல்பாட்டினைப் பொருத்தே இருக்கிறது.
இலங்கை அரசு ஐநாவில் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாது. அதற்கான ஈடுபாடோ, திறனோ சிங்கள பேரினவாத அரசுக்கு இல்லை என்பதை சர்வதேசம் உணரும் தருணம் இதுவே ஆகும்.
இந்தக் கூட்டத்தொடரில் "நிலைமாற்று நீதி" பொறிமுறையை (transitional justice mechanism) நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று இலங்கை போலிவேடம் போடப்போகிறது. இதற்கு மாற்றாக, "நிலைமாற்று நீதி" பொறிமுறையை செயல்படுத்தாமல் இலங்கை உலக நாடுகளை ஏமாற்றுகிறது என்கிற உண்மையை தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைக்க வேண்டும். இதுதான் இப்போதையக் கடமை ஆகும்.
இந்த முதன்மையான கடமையை விட்டுவிட்டு, பிரச்சினையை திசை திருப்புவது தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.
இனப்படுகொலை குற்றம்தான் தலையாயமானதா?
இனப்படுகொலை என்பதுதான் ஆகப்பெரிய வார்த்தை என்கிற 'மூடநம்பிக்கை' தேவையற்றது. இனப்படுகொலை என்று சொன்னால், அதன் மூலம் தனித்தமிழ் ஈழம் அமைந்துவிடும் என்று பேசுவது நம்பக்கூடிய வாதம் அல்ல. போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என இவை மூன்றுமே முக்கியமான 'பன்னாட்டு சட்டமீறல்கள்' தான்.
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட எல்லா பன்னாட்டுக் குற்றங்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவற்றில் இனப்படுகொலையும் ஒன்று என்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.
உண்மையில், "நிலைமாற்று நீதி" என்பதில் உள்ள, "1. உண்மையை வெளிக்கொணர்தல் (Truth), 2. குற்றவாளிகளைத் தண்டித்தல் (Criminal prosecutions)" - என்கிற திட்டங்களே - இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான அடிப்படை ஆகும்.
No comments:
Post a Comment