Saturday, June 25, 2016

Emergency -1975

On the night of June 25, 1975, the Emergency was proclaimed. The Union Cabinet, in the early hours of June 26, ratified the proclamation.அவசர நிலை (Emergency) …. 41 ஆண்டுகளுக்குப் பிறகு……..

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு காரணமாக சொல்லப்பட்டது அவருக்கு எதிரான அலகாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பு. அவரது உதவியாளரான ஆர்.கே. தவான், இந்திரா உயர் நீதி மன்ற தீர்ப்பை ஏற்கும் மன நிலையில் தான் இருந்ததாகவும், தனது இராஜினாமா கடிதத்தைக் கூட தயார் செய்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சக அமைச்சர்களும், தலைவர்களும் அவர் பதவியில் நீடித்திருக்கவே விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது. பின்னர் சித்தார்த் சங்கர் ரேயின் ஆலோசனைப்படித் தான் அவசர கால நிலை அமல் படுத்தும் சிந்தனையே ஏற்பட்டது என்பதும் அது குறித்து அப்போதைய ஜனாதிபதியிடம் ஆலோசிக்கப்பட்டது என்றும் அவரது ஒப்புதலின் பேரிலேயே அவசர நிலை பிரகடன அறிவிப்பின் வரைவு சித்தார்த் சங்கர் ரேயால் தயாரிக்கப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

சற்றே வரலாறை திரும்பிப் பார்ப்போம், அவசர நிலை பிரகடனம் குறித்தும், அதற்கான சூழல் குறித்தும் அறிந்து கொள்வோம்…..

1971 ஆம் ஆண்டு பொது தேர்தலில் பெருவாரியான மக்கள் ஆதரவோடு, “ வறுமையை ஒழிப்போம்” எனும் கோஷத்துடன், 352 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸை (இ) வெற்றி பெற செய்து இந்திரா ஆட்சிக்கு வந்தார்.. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேஷ் உருவாகி காரணமாக இருந்தார். உலக அரசியலில் இந்தியாவிற்கு நன்மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தார். அவரை “துர்கா தேவி” என வருணித்தார் அடல் பிகாரி வாஜ்பாய்.. தனது அரசியல் பாதையில் உன்னதமான இட்த்தை அடைந்திருந்தார் இந்திரா. இதே கால கட்டத்தில் அவருக்கு நீதி மன்றங்கலோடு மோதல் இருந்து வந்தது.சட்டப் போராட்டங்களில் வெற்ரி பெறாத நிலையில் நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு இருந்த செல்வாக்கால் அரசியல் சாசனத் திருத்தங்கள் மூலமாக தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள எத்தனித்தார். உதாரணமாக, அரசியல் சாசனத் திருத்தம் 24 மற்றும் 26. குறிப்பாக மன்னர் மானிய ஒழிப்பு மசோதா உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டவுடன் அரசியல் சாசனத் திருத்தம் 26ன் மூலம் மன்னர் மானிய ஒழிப்பைக் கொண்டு வந்தார். தனக்கு ஆதரவாக இருந்த நீதிபதிகளை பதவி உயர்வும் செய்தார். தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தின் இரு தூண்களான அரசும் நீதி துறையும் மோதல் போக்கைக் கொண்டிருந்தனர். இந்தப் போக்கு எதிர் கட்சிகளாலும் சார்பில்லாத அறிவு ஜீவிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குஜராத்தில் துவங்கிய “நவ நிர்மாண்’ இயக்கம 1973-74 இல் மிகப் பெரிய மாணவரியக்கமாக உருவெடுத்து சிமன்பாய் பட்டேல் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவராட்சி அமல் படுத்த காரணமாக அமைந்தது. பின்னர் 1975ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜனதா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது.

இதே போல் ஜெயபிரகாஷ் நாரயண் ஆதரவுடன் பீகார் அரசை எதிர்த்து ஒரு மாணவரியக்கம் போராட்ட்த்தில் இறங்கியது. எப்ரல் 1974 ல் ஜெயபிரகாஷ் நாரயண் ‘” முழுப் புரட்சி” என்ற கோஷத்துடன் போராட்ட்த்தைக் கடுமைப் படுத்தினார். இதில் மாணவர்கள் தொடங்கி தொழிலாளர்கள் பொது மக்களையும் காந்திய வழியில் அரசுக்கு எதிராக அறப் போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்தார். மாநில அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜேபியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மத்திய அரசு. மே மாதத்தில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைமியில் இரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய போராட்ட்த்தில் ஈடுபட்டனர். இரயில்கள் ஓடவில்லை. இரும்புக் கரம் கொண்டு இந்த போராட்ட்த்தை ஒடுக்க எத்தனித்த்து இந்திராவின் அரசு. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், தொழிலாளர்களின் குடும்பங்களை அவர்களுக்களிக்கப்பட்டிருந்த வீடுகளிலிருந்து வெளியெற்றியது இந்திய அரசு. இதனால் பொது மக்களிடமும் தொழிலாளர்களிடமும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட்து இந்திராவின் அரசு.

மக்கள் விரோதக் கொள்கைகளை கடை பிடிப்பதாக இந்திராவின் அரசு நாடாளுமன்றத்துக்குள்லும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட்து. அறுதிப் பெரும் பான்மை பெற்றிருந்தாலும் 10 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்தது இந்திராவின் அரசு.

ஜெயபிரகாஷ் நாராயன் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையில் கடுமையான போராட்டம் வெடித்தது. தொழிற்சங்கங்கள், மாணவர்கள் தில்லி தெருக்களை முற்றுகையிட்டனர். பாராளுமன்ற வலாகமும் பிரதமரின் இல்லமும் முற்றுகையிடப்பட்டது.

இந்த காலகட்டத்தில் தான் இந்திரா காந்தியால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இராஜ் நாரயண், அவர் மீது தேர்தல் முறைகேடுகளுக்கான வழக்கௌ ஒன்றை தொடுத்திருந்தார். தேர்தலின் போது அரசு நிர்வாகம் தவறாக பயன் படுத்தப்பட்ட்தாகவும், தேர்தல் முறை கேடுகள், மோசடிகளில் இந்திரா ஈடுபட்ட்தாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு அலகபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ஜெகன் மோகன் சின்ஹா என்பவர் முன்னிலையில் நடை பெற்றது. இராஜ் நாராயணுக்காக சாந்தி பூஷன் வழக்காடினார். இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு பிரதமர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படுவதும் நிகழ்ந்தது.

ஜூன் 12, 1975 அன்று, வழக்குத் தொடர்ந்து நான்காண்டுகளுக்குப் பிறகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்திரா காந்தியின் தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தார் நீதியரசர் ஜெகன் மோகன் சின்ஹா. மேலும், ஆறாண்டு காலத்திர்கு இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் இந்திரா.

மேல் முறையீட்டை விசாரித்த நீதியரசர் கிருஷ்ண ஐயர் அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து இந்திராவின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து ஜூன் 24 1975 அன்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நீதியரசர் இந்திரா பிரதமராகத் தொடர அனுமதியளித்தார். ஜூன் 25 அன்று, இந்திராவிற்கு எதிராக தில்லியில் மாபெரும் பேரணியை திரட்டினார் ஜெயபிரகாஷ் நாரயண். இந்த பேரணியில் ஜெயபிரகாஷ் பேசியது புரட்சியை தூண்டுவதாக இந்திராவின் அரசு கருதியது.

இந்த சூழலில் தான் ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்த பதிவின் முதல் பத்திகளில் குறிப்பிட்டவை நடந்தேறியன, சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. மிகவும் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்த அவசர நிலை பிரகடனம் அமைச்சரவையில் கூட விவாதிக்கப்படவில்லை, மறு நாள் காலையில் கூடிய அமைச்சரவை ஒப்புதலை மட்டுமே அளித்தது.
• அவசர நிலை பிரகடனத்திற்கு காரணிகளாக இந்திராவின் அரசு பட்டியலிட்டவை: பாகிஸ்தானுடன் போரை சந்தித்திருந்த இந்தியா தேசிய பாதுகாப்புக்கு சவால் உள்ளது
• பருவ மழை பொய்த்ததால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு அசாதாரண நிலை நிலவி வருகிறது,
• கச்சா எண்ணெய் விலையேற்றம் பற்றாக் குறை போன்றவைகளால் பொருளாதார வளர்ச்சியில் முடக்கம்
• எதிர் கட்சிகளின் தூண்டுதலால் நாடு முழுவதும் நடைப்பெற்ற வேலை நிறுத்தங்களும் அதனால் உற்பத்தியில் பாதிப்பு
• நாடு முழுவதும் உள்ள கொந்தளிப்பான நிலையை உள் நாட்டில் உள்ள சில சக்திகள் உருவாக்கியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு

அன்று இருந்த அசாதாரண சூழல் என்ன என்பதை சற்று சிந்திப்போம், நமது மதிப்பீடுகளை அதனடிப்படையிலேயே கொள்வோம்…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...